Images
  • duterte impeach
    பிலிப்பீன்ஸ் அதிபர் டுடார்ட்டே. (படம்:  Reuters)

டுடார்ட்டே மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயலும் எதிர்க்கட்சியினர்

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடார்ட்டேக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற நீதிக்குழு விசாரணை தொடங்கியுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அந்தத் தீர்மானத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போதிய முகாந்திரம் உள்ளதா என்று நீதிக்குழு ஆராயும்.

அப்படி எதுவும் கண்டறியப்படவில்லை என்றால், நம்பிக்கையில்லாத் தீர்மான வேண்டுகோள் நிராகரிக்கப்படும்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு வழிவகுக்கும் பல குற்றங்களை திரு. டுடார்ட்டே செய்திருப்பதாகக் குறைகூறப்பட்டுவருகிறது.

22 ஆண்டுகள் டாவோ நகரின் மேயராக இருந்தபோது அவர், போதைப் பொருளுக்கு எதிரான போரில் சட்டத்துக்குப் புறம்பான கொலைக் கும்பல் ஒன்றை வழிநடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முக்கியமானது.

அதுதவிர, தமது சொத்துக் கணக்கை மறைத்தது, சர்ச்சைக்குரிய சில பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது உள்ளிட்ட சில புகார்கள் திரு. டுட்டார்டே மீது சொல்லப்படுகின்றன.

பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றக் கீழவையில் திரு. டுட்டார்டேவுக்கு வலுவான ஆதரவு உள்ளது.

அதனால் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுவது சாத்தியமல்ல என்று கருதப்படுகிறது.

2016 இல் திரு. டுட்டார்டே பிலிப்பீன்ஸ் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் பொறுப்புக்கு வந்து இன்னும் ஓராண்டு கூடப் பூர்த்தியாகவில்லை.

பிலிப்பீன்ஸ் அதிபர் பதவிக்கான தவணைக்காலம் மொத்தம் ஆறு ஆண்டுகள்.  

உங்கள் கருத்து

Top