Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

டுட்டார்ட்டே அறிமுகம் செய்யும் ராணுவச் சட்டம் - இதுவரை தெரிந்தவை

பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டே, நாட்டின் தெற்கில் உள்ள மிண்டனாவ் தீவில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -
டுட்டார்ட்டே அறிமுகம் செய்யும் ராணுவச் சட்டம் - இதுவரை தெரிந்தவை

(படம்: Reuters)

பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டே, நாட்டின் தெற்கில் உள்ள மிண்டனாவ் தீவில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்குத் துணை நிற்க உறுதி தெரிவித்திருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் திரு டுட்டார்ட்டே அந்நடவடிக்கையை எடுத்துள்ளார்.

ராணுவச் சட்டத்தை அவர் பிரகடனப்படுதியது ஏன் என்பது குறித்த சில தகவல்கள் இங்கே....

நடந்தது என்ன?

சுமார் 200,000 மக்கட்தொகையைக் கொண்ட மராவி நகரில் துப்பாக்கிக்காரர்களுடன்பிலிப்பீன்ஸ் பாதுகாப்புப் படையினர் மோதினர். அந்தப் பூசலில் காவல்துறை அதிகாரி ஒருவரும் 2 இராணுவ வீரர்களும் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐ.எஸ்ஸுடன் தொடர்புள்ள கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, இராணுவச் சட்டத்தைப் பயன்படுத்தப்போவதாகக் கூறிக்கொண்டிருந்த திரு டுட்டார்ட்டே, இரண்டு நாட்களுக்கு முன் அதை நிறைவேற்றினார். பயங்கரவாதம் தவிர்த்து, சட்டவிரோத போதைப்பொருள் உள்ளிட்ட மற்ற பிரச்சினைகளைத் தீர்க்க இராணுவச் சட்டம் தேவைப்படும் என்றார் திரு டுட்டார்ட்டே.

யார் அந்த பயங்கரவாதிகள்?

ஐ.எஸ்ஸுக்கு அபு சயாஃப் குழுவும் மவுத்தே குழுவும் ஆதரவு அளித்துள்ளன. அக்குழுக்களைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போரிடுவதாக அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெளிநாட்டவரைக் கடத்தி, பிணைப்பணம் கிடைக்காவிட்டால் அவர்களைக் கொல்வது அபு சயாஃப் குழுவிற்கு வழக்கமாக உள்ளது. ஃபிலிப்பீன்சில் நிகழ்ந்த ஆக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அபு சயாஃப் குழு பொறுப்பு எனக் கூறப்படுகிறது. 2004இல் 100க்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கிய மணிலா பே கப்பல் வெடிப்புச் சம்பவம் ஓர் உதாரணம்.

இராணுவச் சட்டம் தேவையா?

பெருகிவரும் ஐ.எஸ்ஸின் ஆதிக்கம், நாட்டின் ஆகப் பெரிய பாதுகாப்புக் கவலைகளில் ஒன்று எனத் திரு டுட்டார்ட்டே பலமுறை கூறியுள்ளார். அந்தப் பிரச்சினையைக் கையாள இராணுவச் சட்டம் தேவை எனக் கூறினார் அவர்.

ஆயினும், தென் ஃபிலிப்பீன்சில் கிளர்ச்சி நடவடிக்கைகள் புதியனவை அல்ல. முஸ்லிம் பிரிவினைவாதிகள் வெகுகாலமாக நடத்தும் போராட்டத்தில் இதுவரை 120,000க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

இராணுவச் சட்டத்தின் கீழ் என்ன நடக்கும்?

வன்முறை, கிளர்ச்சி போன்றவற்றைத் தடுக்க அல்லது ஒடுக்க, ஆயுதப் படைகளைப் பயன்படுத்தும் அதிகாரத்தை இரணுவச் சட்டம் அதிபருக்கு வழங்குவதாகப் பிலிப்ஃபீன்சின் அரசமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது.

எந்தவிதக் குற்றச்சாட்டுகளும் இல்லாமல் அதிகாரிகள், சந்தேக நபர்களை 3 நாட்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கலாம்.

பிலிப்ஃபீன்சின் முன்னைய அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் நடத்திய சர்வாதிகார ஆட்சியின் கீழ் அதிகாரிகள் புரிந்த மனித உரிமை மீறல்கள் மீண்டும் தலைதூக்கும் என்ற அச்சங்கள் எழுந்துள்ளன. திரு மார்க்கோஸின் 9 ஆண்டு கால ஆட்சியின் கீழ், சர்வாதிகாரத்தை விமர்சித்த ஆயிரக்கணக்கானோர் கடத்தல், கொடுமை, கொலை ஆகியவற்றுக்கு ஆளாகியதாய் வரலாற்று வல்லுநர்களும் மனித உரிமைக் குழுவினரும் கூறுகின்றனர்.

திரு மார்க்கோஸின் ஆட்சியில் இருந்த நிலை போன்று தமது நடவடிக்கை இருக்கும் என்று திரு டுட்டார்ட்டே கூறியுள்ளார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்