Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

என் வாழ்விலே - கனவுகள்

ஒரு குழந்தை கருவில் இருக்கும்போதே அந்தக் குழந்தையின் வருங்காலத்தைப் பற்றிக் கனவு காணத்தொடங்குகின்றனர் பெற்றோர். 

வாசிப்புநேரம் -
என் வாழ்விலே - கனவுகள்

படம்: Google

பொதுவாக ஒரு குழந்தை கருவில் இருக்கும்போதே அந்தக் குழந்தையின் வருங்காலத்தைப் பற்றிக் கனவு காணத்தொடங்குகின்றனர் பெற்றோர்.இது மிக மிக இயல்பானது. என்னைப் பொறுத்தவரையில் சரியானதும் கூட.

எனக்கு மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள், விமானிகள் ஆகியோர் செய்யும் வேலை மிகவும் பிடிக்கும். 5 அல்லது 6 வயதிலிருந்தே மருத்துவராகவேண்டும் என்று கனவுகண்டேன். பின்னர் சட்டம் படிக்கவேண்டும் என்று விரும்பினேன். மாணவர் பருவத்தில் இசையை நன்கு கற்றுத்தேர்ந்து இனிமையாகப் பாடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்த ஆசைகள் எதுவுமே நிறைவேறவில்லை.

இருந்தபோதிலும் கனவுகள் கலையவில்லை. என் பிள்ளைகள் மூலமாக என் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முயன்றேன்.

என்னைப்போல் பல பெற்றோர் இருக்கிறார்கள். தங்கள் கனவுகளைப் பிள்ளைகள் மூலமாக நிறைவேற்றத் துடிக்கிறார்கள். இது தவறு என்று நினைக்கிறீர்களா?

கல்வியாளர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். பெற்றோர் தங்கள் கனவுகளைப் பிள்ளைகளிடத்தில் திணிக்கக்கூடாது என்கிறார்கள். பிள்ளைகளும்கூட அதைத்தான் விரும்புகிறார்கள்.

“உங்கள் ஆசைகளை, கனவுகளை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்குப் பிடித்த பாடத்தைப் படிக்க விடுங்கள். எங்களுக்குப் பிடித்த தொழிலைத் தேர்ந்தெடுக்க விடுங்கள்“ என்று பிள்ளைகள் சொல்வதை நம்மில் பலர் கேட்டிருப்போம்.

ஆனால் நான் எனது கனவை விட்டுக்கொடுக்கவில்லை. அதேவேளையில் அதைப் பிள்ளைகளிடத்தில் திணிக்கவும் எண்ணவில்லை. வழிகாட்ட விரும்பினேன். ஒவ்வொரு பிள்ளையிடமும் திறமை இருக்கிறது. அதைக் கண்டறிவதில்தான் பெற்றோரின் சாமர்த்தியம் இருக்கிறது.

பிள்ளைகளின் திறமையும் நமது கனவும் ஒத்துப்போனால் வழிகாட்டுவது மிகவும் சுலபம். பெற்றோரின் கனவோடு பிள்ளைகளின் திறமை ஒத்துப்போகவில்லையெனில், பிள்ளைகளின் கனவுக்குத் துணைநிற்பதே நல்லது.

எரிகிற விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும். பிள்ளை என்னும் எரிகிற விளக்கிற்குப் பெற்றோர் தூண்டுகோலாக இருந்தால் நிச்சயம் அது சுடர்விடும்! அப்போது பெற்றோர் அல்லது பிள்ளைகள் அல்லது இருசாராரின் கனவுகளுமே கைகூடும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்