Images
  • 12Feb Pesuvoma (1)

இழப்பு

அச்சம் யாருக்கு இல்லை.

சிலர் எதற்கும் அஞ்சமாட்டேன் என்பார்கள்.

ஆனால், பலர் தவிர்க்க நினைக்கும்; பீதியடையும் ஒன்று உள்ளது.... அதுதான் இழப்பு.

நமக்குப் பிரியமானவர்களை இழப்பதைவிட ஒரு தவிப்பை வேறு எதிலும் நம்மால் உணரமுடியாது.

காரணம்.... காலமானவர்களை நம்மால் பார்க்கமுடியாது... மீட்கமுடியாது.

ஏன் திடீரென இந்தச் சிந்தனை என நீங்கள் நினைக்கலாம்.
அதற்குக் காரணமுண்டு.

செய்திப் பிரிவில் இருப்பதால் அவ்வப்போது சிங்கப்பூரின் மூப்படையும் சமூகத்தைப் பற்றி செய்தி எழுதுவது வழக்கம்.

அதிகரித்துவரும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை ஒருபுறமிருக்க, அவர்களைப் பேணிப் பாதுகாக்காத பிள்ளைகளைப் பற்றியும் நாம் கேள்விப்படுவதுண்டு.

வீடமைப்புப் பேட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளையில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும் கூடிவருகின்றன.

இப்பிரச்சினையை நாம் நாட்டுப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறோமே தவிர சமூகப் பிரச்சினையாக பார்ப்பதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ளோமா?

ஈன்றெடுத்த அன்னை வலிமையாக இருக்கும்போது, தம் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள அவர்களை நாடும் பெண்கள் சிலர், தாய்மார்கள் குழந்தைகளாக மாறும்போது தள்ளி வைத்துவிடுகிறார்கள்.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தந்தை இருக்கிறார் என மார்தட்டிக்கொண்டவர்கள், தந்தைக்கு மாரடைப்பே வந்தாலும் பரவாயில்லை என உதாசீனப்படுத்துகிறார்கள்.

இப்படி காலச்சக்கரத்துக்கு அடிமையாகி, வாழ்வில் உயர எண்ணும் மக்கள் பலர், அடிப்படை விழுமியங்களை, அதனை வித்திட்டவர்களை மறந்துவிடுகிறார்கள்.

இவற்றுக்கான காரணங்கள் என்ன என்பதைச் சற்று யோசித்துப் பார்த்தேன். சிலரிடம் பேசியும் பார்த்தேன்.

கிடைத்த பதில்கள் அனைத்தும் ஒரே உண்மையைத்தான் வலியுறுத்தின.

வயதாக ஆக, வாழ்க்கையில் மக்களுக்கு உள்ள முக்கியத்துவங்கள் மாறத்தொடங்குகின்றன.

அதில் பெற்றோர்களுக்கான இடம் கீழே தள்ளப்பட்டுவிடுகிறது.

அதனைச் சரிசெய்யவேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே இருந்தாலும், காலமும் நேரமும் கைகொடுப்பதில்லை.

இப்படியே தட்டிக்கழிக்கப்படும் இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணப்படுவதில்லை.

ஆனால் இதற்கெல்லாம் ஒரு நாள் முடிவு என்பது உண்டு.

மூத்த குடிமக்களின் ஆயுள் முடியும்போது.... அந்த இழப்பு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அச்சத்தை விதைக்கிறது.

இதுவரை வராத தெளிவை அந்த அச்சம் ஏற்படுத்துகிறது.

தமக்குப் பிற்காலத்தில் இதுதான் நிலைமையோ என யோசிக்க வைக்கிறது. அந்த நிலை வரக்கூடாது என மனத்தை ஏங்கச் செய்கிறது. அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகளை சரிசெய்ய துடிக்கிறது...வாழ்க்கையை விளக்குகிறது.

ஆனால், இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ள இவ்வளவு பெரிய விலையைக் கொடுக்கவேண்டுமா?

கொடுத்துதான் ஆகவேண்டும் போலும். ஏனெனில் இழப்பு யாருக்குத்தான் இல்லை.





உங்கள் கருத்து

Top