Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

இணையான துணை

திருமணம். இதைச் சொல்லும்போது நமக்கு முதலில் தோன்றுவது என்ன?

வாசிப்புநேரம் -

திருமணம். இதைச் சொல்லும்போது நமக்கு முதலில் தோன்றுவது என்ன? மனத்திற்குப் பிடித்தவரை மணப்பதா, அழகான ஒருவரை மணப்பதா, கவர்ச்சியான உடல்வாகு கொண்டவரை மணப்பதா, சுக துக்கங்களில் பகிர்ந்துகொள்ளும் நெருங்கிய நண்பரை கைபிடிப்பதா?

பொதுவாக அனைவருமே பருவ வயதில் அதிகக் கவரச்சியான தோற்றத்துடன் இருப்போம். வயது ஆக ஆக அது மாறும், முதிர்ச்சி தட்டும். அதற்காக அழகு இல்லை என்று சொல்லமுடியாது. எல்லா வயதிலும் ஒரு மனிதர் அழகுதான். பெண்கள் ஆண்களையும் ஆண்கள் பெண்களையும் ஈர்க்கும் கவர்ச்சிகரமான அழகு பொதுவாகப் பருவ வயதில்தான் அதிகம் இருக்கும் என்பது என் கருத்து.

அழகையும் கவர்ச்சியான உடல்வாகையும் மட்டுமே கருத்தில்கொண்டு யாரைத் திருமணம் செய்துகொள்வது என்ற முடிவை எடுப்பது நல்லதா? இந்தக் காலத்தில் சிந்திக்கத் தெரிந்த ஓர் இளைஞர் அத்தகைய முடிவை எடுப்பாரா என்று நீங்கள் யோசிக்கலாம். அவ்வாறு பலர் இருக்கின்றனர். இதைப் பல நண்பர்களிடையே பார்த்திருக்கிறேன். அதுவும் ஆண்களிடையே இந்தப் போக்கு பரவலாகக் காணப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

மனிதர்களாகிய நமக்கு திருமணம் என்பது அவசியம். ஏன்? நமது பெற்றோரின் காலத்திற்குப் பிறகு நமக்கு வழிகாட்டியாகவும், நண்பராகவும், அன்பான துணையாகவும் இருக்க ஒருவர் தேவை. இல்லாவிடில் தனிமையில் வாடுவோமோ என்ற அச்சம் வரலாம்.  

திருமணத்திற்குப் பிறகு பிள்ளைகள் வளர்ந்து அவர்களுக்குக் கல்யாணம் ஆகும் நாள் வரும். அவர்களுக்கென ஒரு வாழ்க்கை உருவாகும். அப்போது அவர்களும் நம்மை விட்டுச் சென்றுவிடுவர்.

பார்க்கப்போனால் சாகும்வரை நம்முடன் இருக்கப்போகும் ஒரே ஒருவர் மனைவி அல்லது கணவனே. அதனால்தான் சில வேளைகளில் மனைவியையும் கணவனையும் ஆங்கிலத்தில் soulmate, அதாவது ஆத்மாவின் துணை என்பார்கள். Soulmate என்ற வார்த்தை நெருங்கிய நண்பர்களைச் சித்திரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இதைக் கேட்கும்போதே மனத்தில் ஓர் ஆனந்தம் ஏற்படும் சிலருக்கு. மிகவும் புனிதமான ஒன்று. காலாகாலமாகப் பலர் சொல்லும் ஒன்று, நமது சுக துக்கங்களில் பங்கேற்ற ஒரு துணை இருத்தல் அவசியம் என்பது.

சரி, திருமணத்திற்குப் பிறகு காலம் முழுவதும் நமக்குப் பக்கபலமாக இருக்கப்போகும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது எதை முக்கியமாகக் கருத்தில்கொள்ளவேண்டும்? அழகையா, உடல் கவர்ச்சியையா, ஒருவரிடம் இருக்கும் செல்வாக்கையா குணத்தையா? 

25 வயதில் ஒருவரிடம் இருக்கும் அழகு 75இல் இருக்காது. 30இல் இருக்கும் கட்டுடல் 80இல் இல்லாமல் போகலாம். பணம் இன்று வரும் நாளை போகும். வசதியாக இருக்கும் ஒருவர் எல்லாவற்றையும் இழந்ததையும் பார்த்திருக்கிறோம். திடீர் பணக்காரர் ஆன பலரும் இருக்கின்றனர்.

எது கடைசிவரை கைகொடுக்கிறது? அளவுகடந்த அன்பு செலுத்தும் குணமே. இதைப் புரிந்துகொள்ளாமல் இளம் வயதில் தவறான முடிவு எடுப்பதே விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்குக் காரணமாக இருக்கலாம்.

வெள்ளையர்கள் என்றாலே ஹாலிவுட் படங்களில் வருவதுவோல் அடிக்கடி துணையை மாற்றுபவர்கள் என்ற ஒரு தவறான கருத்து நம்மிடையே இருக்கலாம். வயதான வெள்ளையர்கள் பலர் ஜோடியாக கைகோத்துக்கொண்டு நடந்துபோவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

பார்க்கும்போதே நம்மால் அவர்களிடையே இருக்கும் காதலை உணரமுடியும். அந்த நேரத்தில் உலகமே இடிந்துவிழுந்தாலும் அன்பானவர் என் அருகில் உள்ளார் என்ற நம்பிக்கையை அவர்களின் கண்களில் காண முடியும்.

அதுவே திருமணத்தின் முக்கிய நோக்கம்! எல்லா ஆண்களுக்கும் பெண் துணை தேவை, பெண்களுக்கு ஆண் துணை தேவை. எப்படிப் பார்த்தாலும் ஒருவருக்கு இன்னொருவர் தேவை.

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்நாள் முழுவதும் நமது சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்ள அந்த ஒருவர் தேவை. தனியாக இருக்கும் ஒரு ஆணிடம் துணைவி அன்பு செலுத்துகிறார், அவரை முழுமையடையச் செய்கிறார். பெண்ணுக்கு அந்த ஆண் உறுதுணையாக இருக்கிறார், அன்பானவான இருக்கிறார். அன்பு! இதுவே நீண்டகாலம் திருமணம் நீடிப்பதற்கான ரகசியம்.  

நம் எல்லோரிடமும் நிறைகளும் உள்ளன, குறைகளும் உள்ளன. ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும்போது அவர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்களுக்கிடையிலும் கருத்துவேறுபாடுகள், வாக்குவாதம் எனப் பல பிரச்சினைகள் வரும்.

ஆனால் இருவருக்கிடையிலும் ஆத்மார்த்தமான அன்பு இருந்தால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும். இருவரும் ஒருவருகொருவர் உதவிக்கொள்ளும் ஆற்றல் மலரும்.

எல்லாம் சரி. அதற்காக அழகு, பண வசதி போன்றவற்றைப் புறக்கணிக்கவா முடியும் என்று சிலர் கேட்கலாம்? அழகு முக்கியம் அல்ல, புறக்கணித்தால் ஒன்றும் தவறல்ல. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி உள்ளது. அவ்வாறு இருக்கையில் கவர்ச்சியான கண்கள், மூக்கு போன்றவை இல்லாவிட்டாலும் அன்பான குணம் கொண்ட ஒருவரின் முகம் நிச்சயமாக ஒருவரை ஈர்க்கும் வண்ணம்தானே இருக்கமுடியும்?

அந்த வகை அழகு கண்களை மட்டும் அல்ல மனத்தையும் ஈர்க்கும்,. 

வாழ்வதற்குப் பணம் அவசியம். திருமணம் செய்துகொள்வதற்கு முன் இருவரும் கலந்துபேசி அதற்கான திட்டங்களை வரையலாம், அதற்கு ஏற்றவாறு வாழ்க்கையை நடத்தலாம். சொன்னதுபோல் அன்பிருந்தால் எதுவும் சாத்தியம், மனமிருந்தால் மார்க்கமுண்டு!

திருமணத்திற்குப் பொருத்தமானவரைத் தேட உதவும் இணையத்தளங்கள் பலவற்றில், வரப்போகும் துணை, ஒல்லியாக இருக்கவேண்டும், பொறியியல் பட்டம் படித்தவராக இருக்கவேண்டும், சிவப்பாக இருக்கவேண்டும் என்று பல 'நிபந்தனைகளைப்' பார்த்திருக்கிறேன். ஆனால் வரப்போகும் பெண்ணோ ஆணோ best friend, அதாவது தலைசிறந்த நண்பராக இருக்கவேண்டும் என்ற ஒன்றை நான் அவ்வளவாகப் பார்த்ததில்லை.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்