Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

என் வாழ்விலே - பிள்ளை வளர்ப்பு

சில உத்திகளைத் தெரிந்துவைத்திருந்தால் பிள்ளை வளர்ப்பு சற்று எளிமையாக இருக்கும்

வாசிப்புநேரம் -

என்னை அறிந்தவர்களும் என்னைச் சுற்றியிருப்பவர்களும் எப்போதும் கேட்கும் ஒரு கேள்வி, “பிள்ளைகளை நீங்கள் எப்படி வளர்த்தீர்கள்?”

எல்லாரையும் போல்தான் நானும் என் பிள்ளைகளை வளர்த்தேன்.
எந்த வித்தியாசமும் இல்லை.சில உத்திகளைத் தெரிந்துவைத்திருந்தால் பிள்ளை வளர்ப்பு சற்று எளிமையாக இருக்கும்.அவற்றை அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன்.

ஒருமுறை, செய்தி படப்பிடிப்புக்காக, பெண்கள் தொடக்கப்பள்ளி ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.அங்கே நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு என் தொடக்கக்கல்லூரித் தமிழாசியரைச் சந்தித்தேன்.அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் ஓடிச்சென்று நலம் விசாரித்தேன். பகுதிநேரமாகப் பள்ளியில் பணியாற்றுவதாகக் கூறினார்.
பிறகு அவர் என்னைப் பற்றி விசாரித்தார். நான் எனக்குத் திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருப்பதாகச் சொன்னேன்.

பிள்ளைகளுக்கு என்ன வயது ? – என் ஆசிரியர் கேட்டார்.

இரண்டு பெண் பிள்ளைகள் தொடக்கப்பள்ளியில் படிக்கிறார்கள். மகன் குழந்தையாக இருக்கிறான் என்றேன். “கவனமாக இரு. பிள்ளைகள் பருவ வயதை அடையும்போது அவர்கள் தாயைத்தான் முதலில் வெறுப்பார்கள். என்ன சொன்னாலும் கேட்கமாட்டார்கள். பேசுவதைக் குறைத்துக்கொள்வார்கள். தனிமையை அதிகம் விரும்புவார்கள். நண்பர்களே உலகம் என்று இருப்பார்கள். நல்லதுகெட்டது அறியாத பருவம் அது.” என்றார் என் ஆசிரியர்.

என்னால் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை.

நாம் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்கும் பிள்ளைகள், பருவ வயதில் எப்படித் திடீரென மாறுவார்கள் என்று என் ஆசிரியரிடம் கேட்டேன்.அதற்கு அவர், பள்ளிக்கூடத்தில் இத்தனை ஆண்டுகளாய்ப் பிள்ளைகளைக் கையாண்ட அனுபவத்தில் சொல்கிறேன். கேட்டுக்கொள் என்றார்.

என்னுடைய அடுத்த கேள்வி என் ஆசிரியரிடம்.

“பிள்ளைகள் அப்படி மாறினால், ஒரு தாயாக நான் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?“

ஆசிரியரின் அற்புதமான பதில், “ பிள்ளைகளின் நண்பர்கள் யார் என்று கண்டுபிடி. அவர்களுடன் பழகு. அவர்களை வீட்டுக்கு அழை. மனம் விட்டுப்பேசு. பிள்ளைகளின் நண்பர்களை நீ புரிந்துகொண்டால், பிள்ளைகள் சரியான பாதையில் செல்கிறார்களா என்பதை உன்னால் கணிக்க முடியும்.

பிள்ளைகள் வளர, வளர, பெற்றோரிடம் பேசுவது குறையும். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் நீ உன் பிள்ளைகளிடம் பேசுவதை நிறுத்திவிடாதே. அவர்கள் பேசவில்லையென்றாலும் நீ பேசவேண்டும். அந்தத் தொடர்பு பிள்ளைகளை நல்வழிப்படுத்துவதற்கு மிகமிக முக்கியம் என்றார்.“
ஆசிரியரின் ஆலோசனையை அப்படியே பின்பற்றினேன்.

என் பிள்ளைகளின் பருவ வயது நண்பர்கள் இன்றுவரை என் நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்