Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

கடவுளின் சிறப்புக் குழந்தைகள்

தற்போது நம் வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கண்ணாடிப் பூக்கள்’ என்ற நாடகம் என் மனத்தை மிகவும் கவர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -

தற்போது நம் வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கண்ணாடிப் பூக்கள்’ என்ற நாடகம் என் மனத்தை மிகவும் கவர்ந்துள்ளது. ஆட்டிசம் (Autism) எனப்படும் தொடர்புக் குறைபாடுள்ள ஒரு குழந்தை, குடும்பத்தில் பிறந்தவுடன், அந்தக் குடும்பத்தில் ஏற்படும் பல குழப்பங்களைச் சித்திரிக்கிறது நாடகம்.  உண்மையிலேயே பல குடும்பங்களில் நடப்பவற்றை இந்த நாடகம் பிரதிபலிப்பதாகவும் பலர் என்னிடம் கூறினர்.

உலகம் முழுவதும் வெகு வேகமாக அதிகரித்துவரும் குறைபாடுகளில் இது மிக முக்கியமானது. சிங்கப்பூரின் சுமார் 5 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் தொடர்புக் குறைபாட்டுடன் வாழ்கின்றனர். உலக அளவில் அத்தகைய பிரச்சினையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

பெற்றோரின் சரியான கவனிப்பின் மூலம் தொடர்புக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளைத் திறமையுள்ளவர்களாக மாற்றவும் வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏதாவது ஒரு திறனுடன் இருப்பார்கள். . அந்தத் திறனை வெளிக்கொணர்வதற்குச் சிறந்த பயிற்சியும், பெற்றோரின் பராமரிப்பும் தேவை. இந்தக் குழந்தைகள் கட்டுப்பாடின்றிக் காணப்படுவார்கள். அவர்களால் அனைவரிடமும் சாதாரணமாகப் பழக முடியாது. ஓரிடத்தில் அமராமல், சத்தமிட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்தச் செயல்பாடுகள் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற பயிற்சிகளைக் கொடுக்கும்போது அவர்களிடம் பெரும் மாற்றங்களைக் காண முடியும்.

பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வளர்ச்சி இருக்கும். தாயின் முகம் பார்த்து சிரிப்பது, பேசுவது என குறிப்பிட்ட மாதங்களில் இந்த வளர்ச்சி இயல்பாக வரவேண்டும். இதையும் மீறி சில குழந்தைகள் பேசத் தெரியாமல் இருப்பார்கள். 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல், தனியாகவே இருத்தல், கைகளை உதறிக் கொண்டே இருத்தல், ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை, கதை கேட்பதில் விருப்பமின்மை, தூக்கமின்மை, குறைவான நேரமே தூங்குதல், கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும் வலியை உணராமல் இருத்தல் போன்றவையும் அறிகுறிகளாகும்.

ஆட்டிசம் என்பது நோய் அல்ல. நம்மைச் சுற்றி இந்தக் குறைபாட்டுடன் கடவுள் அனுப்பிய குழந்தைகள் வாழ்கின்றனர் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொண்டு, அதற்கு ஏற்றபடி நம்மை மாற்றிகொள்வதும் மிகவும் முக்கியம். 

தொடர்புக் குறைபாடு பற்றி மேலும் பலரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, ‘கண்ணாடிப் பூக்கள்’ நாடகம் உதவும் என்று நம்புகிறேன்.

(படங்கள்: Reuters)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்