Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

அழும் உரிமை

ஆண்கள் பொதுவாக அழமாட்டார்கள். அவர்கள் தைரியமானவர்கள் என்றே பலரும் நினைக்கின்றனர். "ஆணாக இருந்துகொண்டு இப்படி அழுகிறாயே. சகிக்கவில்லை!" என்று அழுதுகொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து கிண்டலாகப் பேசுபவர்களை நாம் கண்டிருக்கக்கூடும்.

வாசிப்புநேரம் -

ஆண்கள் பொதுவாக அழமாட்டார்கள். அவர்கள் தைரியமானவர்கள் என்றே பலரும் நினைக்கின்றனர். "ஆணாக இருந்துகொண்டு இப்படி அழுகிறாயே. சகிக்கவில்லை!" என்று அழுதுகொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து கிண்டலாகப் பேசுபவர்களை நாம் கண்டிருக்கக்கூடும்.

ஒரு பெண் அழும்போது, "பாவம். அவருக்கு என்ன பிரச்சினையோ," என்று பலர் எண்ணக்கூடும். "எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பெண்கள் அழுது தீர்த்துக்கொள்வார்கள். ஆனால் ஆண்கள் அவ்வாறு செய்ய இயலாது," என்று சிலர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.

பெண் அழலாம். ஆனால் ஆண் என்பவன் அழமாட்டான்! இதுதான் பொதுவான உலக நியதி என்று சொன்னால்கூட மிகையாகாது.

"நான் ஆண் மகன். நான் அழக்கூடாது," என்ற சொல்லிக்கொண்டே ஆண் வர்க்கம் வாழ்ந்துவந்துள்ளது. அழாமல் பிரச்சினையைக் கையாளவேண்டும் என்ற உணர்வு அவர்களிடையே ஊறிப்போய்விட்டது.

இதை வேறு கோணத்திலிருந்து பார்ப்போம். ஆண், பெண் இரு தரப்பினரும் மனிதர்கள்தாம். நாம் எப்போது அழுகிறோம்? நமது மனத்தில் சோகம் அதிகமாகும்போது, அதை நமக்குள் பூட்டிவைத்திருக்க முடியாது என்ற சூழல் வரும்போது. இதில் ஆண், பெண் என்ற வித்தியாசம் எங்கே வந்தது? நாமே நமக்கு உருவாக்கிக்கொண்ட ஒன்றல்லவா இது...

துக்கம் அதிகமாகும்போது கண்ணீர் தானாகவே வரும். அது மனித இயல்பு. அப்படியிருந்தும் வளர்ந்த ஆண்கள் சாதாரணமாக அழுவதில்லையே. அவர்களுக்குப் பிரச்சினையே இருக்காதா? அளவுகடந்த சோகம் ஏற்படாதா? நிச்சயமாக இல்லை. அழாமல் இருக்க அவர்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள், கண்ணீரை உள்ளேயே அழுத்திவைக்கிறார்கள். இது, உடலுக்கும் மனதுக்கும் நல்லதா?

"எனக்கு வாழ்க்கையில் பல பிரச்சினைகள். அழுது புலம்வேண்டும் போல் இருக்கிறது. என் அழுகையைக் கேட்டு ஆறுதல் கூற யாரேனும் இல்லையா?" என்று ஒருவர் சில வேளைகளில் நினைக்கக்கூடும். பாவம், அந்த நேரத்தில் அவர் மனது என்ன பாடுபடும்? அவர் அனுபவிக்கும் வேதனையை என்னால் உணரமுடியும். காரணம், அத்தகையச் சூழல்களைக் கடந்து வந்தவன்தான் நான். என் துக்கங்களைக் கேட்டு எனது கண்ணீரைத் துடைக்க நல்ல நண்பர்கள், பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகியோர் இருக்கும் அதிர்ஷ்டசாலி நான்.

ஆனால் அழவே கூடாது என்ற சட்டத்துடன் வளர்ந்த ஆண் பிள்ளைகள் பலர் இருக்கவே செய்கின்றனர். அழ ஆரம்பித்தால் பெற்றோரே இவர்களைக் கடிந்துகொண்டு கண்டிப்பர்.

எதற்கெடுத்தாலும் அழக்கூடாது. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மிகவும் இக்கட்டான நிலைமையில் கூடவா?

"நான் இன்றும் அழுவேன். என் மனைவியிடம் மனம் விட்டுப் பேசி அழுவேன். இதைச் சொல்வதில் எனக்கு வெட்கம் இல்லை," என்று பல பெண்களின் கனவு நாயகனான திரைப்பட நடிகர் மாதவன் ஒரு பேட்டியில் கூறியது எனக்கு நினைவிருக்கிறது.

உணர்வுகளை ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்துவது நமது மனநிலைக்கு நல்லதன்று என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியென்றால் அழக்கூடாது என்ற கட்டாயத்தில் வாழ்வது மனத்தளவில் மெதுமெதுவாக இறப்பதற்குச் சமமல்லவா? பெரும் சோகத்திற்கு ஆளாகியிருக்கும் ஓர் ஆணுக்கு அழ உரிமை வேண்டாமா? அத்தகைய நிலையில் உள்ள ஒருவரை ஏளனமாகப் பார்ப்பதற்குப் பதிலாக, ஆறுதல் வார்த்தை சொல்லி மனத்தைத் தேற்றும் முயற்சியில் ஈடுபடலாமே.

அன்புடன்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்