Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

அம்மாவைக் கேட்கலாமே!

"அது பெண் சிங்கம்தானே!" எனப் புலியைப் பார்த்து கேட்டார் அம்மா.

வாசிப்புநேரம் -

"அது பெண் சிங்கம்தானே!" எனப் புலியைப் பார்த்து கேட்டார் அம்மா.

நான்காம் வகுப்பு முதல் நாளன்று புத்தகங்கள் இல்லாத காரணத்தால் அவர் பாதியில் வீடு திரும்பியதாகச் சொல்வார்.

மீண்டும் மழைக்குக் கூட பள்ளியின் பக்கம் ஒதுங்கியதில்லை எனக் கூறித் தம்மைத் தாமே கேலி செய்துகொள்வார். 

50 வயதிலும் அவர் 5 வயது குழந்தையைப் போலவே உலகத்தைப் பார்க்கிறார் எனப் பல நேரங்களில் எனக்குத் தோன்றும்.

அன்றாடம் கேட்கும் வார்த்தைகளை மனத்தில் பதிவுசெய்துகொள்வார். 

சமையல் கைவந்த கலை.. 

வெள்ளந்தியான மனது.

இருந்தாலும் பிள்ளை வளர்ப்பில் கண்டிப்பு குறைந்ததில்லை. அவரது தாய் வீட்டில் 12 பிள்ளைகள். அன்னை கூறிய கதைகளில் இருந்து அந்த இல்லத்தில் அன்புக்குச் சற்று பஞ்சம்தான் எனத் தோன்றியது எனக்கு. 

எனினும் ஒழுங்குமுறைக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சூழல் என்று அம்மா சொல்வார். 

அதே முறையில் அவர் எங்களை வளர்த்தாலும் நாங்கள் இளையர்களான பிறகு எங்களுக்கு நல்லதொரு தோழியாகவும் தம்மை மாற்றிக்கொண்டார்.

வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளை அவருடன் இருந்து நான் கற்றுக்கொண்ட தருணங்களில், தாயின் சிந்தனைத் துளிகளைக் கண்டு வியந்துபோயிருக்கிறேன்
அன்னையரின் மனம் மிகவும் எளிமையானது.

ஆனால் பார்ப்பதற்குச் சிலந்திவலை போல இருக்கும். 

பிறந்த வீடு, புகுந்த வீடு, பணியிடம் எனப் பெரும்பாலும் 3 தளங்களில் சுழல்வது அவர்களின் காலம். 

இயந்திரங்களிடம் மனத்தைத் தேடும் யுகம் இது. 

வீட்டில் உள்ள அம்மாவிடம் சாப்பிட்டீர்களா எனக் கேட்கும் தன்மையோ குறைந்து வருகிறது. 

கணினி சொல்வதே வேதவாக்குச் சிலருக்கு. அன்னையின் அன்பைக் கூட அந்நியமாகப் பார்க்கின்றனர் சிலர். வளரும் பருவத்தில் வீடே வனமாகும். வெளியில் இருப்பது சொர்க்கம் போலத் தோன்றும் . ஆனால், கதாபாத்திரங்கள் மாறும்போதுதான் தெரியும் அன்னை துலாபாரமாக இருந்ததன் அருமை.

கற்றது கை மண் அளவாக இருந்தாலும் அம்மாவின் பகுத்தறிவுக்குக் கடல் ஈடாகுமா?

கண் முன்னர் நடமாடும் கலைக்களஞ்சியங்களைக் கரத்துக்குள் வைத்துப் காக்க ஏன் இந்தக் கசப்பு?

காலம் கடந்துவிட்டது எனக் கதறுவதைக் காட்டிலும் இருக்கும்போதே அதனை இனிமையாக்குவது எப்படி என்பதில் கவனத்தைச் செலுத்தலாமே.

தற்போது அம்மாவுடன் நாம் உருவாக்கிக்கொள்ளும் நினைவுகளே, நாளை சுவைக்கதைகளாக உருமாறும்.

அதற்கான பாலத்தை இன்றே கட்டத்தொடங்குவோம்..
சுவை நிரம்ப உணவு சமைத்துக்கொடுக்கும் அம்மாவிடம் ஒரு முறையாவது கேட்கலாமே..

நீங்கள் சாப்பிட்டீர்களா? என்று..

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்