Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

தலைமைத்துவ மாற்றம் – சிங்கப்பூர் வழி தனி வழி

தலைமைத்துவ மாற்றம் என்று வரும்போது சில நாடுகள் பேசுவதே இல்லை. சில பேசிக்கொண்டே இருக்கும். எதுவும் செய்வது இல்லை. சிங்கப்பூர் அப்படியில்லை. பேசவும் செய்யும். செய்யப்போவதையே பேசும்.

வாசிப்புநேரம் -

தலைமைத்துவ மாற்றம் என்று வரும்போது சில நாடுகள் பேசுவதே இல்லை. சில பேசிக்கொண்டே இருக்கும். எதுவும் செய்வது இல்லை. சிங்கப்பூர் அப்படியில்லை. பேசவும் செய்யும். செய்யப்போவதையே பேசும்.

சூரியன் எழுவதைப் போலவும் மறைவதைப் போலவும் இயல்பானதாக இருக்கவேண்டிய ஒன்று தலைமைத்துவ மாற்றம். அதனை முறையாகச் செய்யும் தலைவரைத்தான் உலகம் தலைவணங்கும். மாறாக அதை விடாமல் பற்றிக்கொண்டிருப்பவரின் தலை குனியும் என்கிறது சரித்திரம். 

தலைமைத்துவ மாற்றம் சிங்கப்பூருக்குப் புதிதல்ல. தொடர்ந்து நடந்துவரும் ஒன்று. மாற்றம் ஒன்றே தொடர்ந்து நிகழக்கூடியது என்பதைப் புரிந்துகொண்ட ஒரு நாடு, சிங்கப்பூர். இந்த மாற்றம் எங்கு தொடங்கியது? 

சிங்கப்பூர் என்றாலே அகத் தூய்மையும் புறத் தூய்மையும் ஒருவரின் கண்முன் தோன்றுவதை எவரும் மறுக்கமுடியாது. மறைக்கவும் முடியாது. பொதுவாக எதிலுமே ஒரு கட்டொழுங்கு, நேர்த்தி, நேர்மை. நாட்டு நலனுக்காக அயராது உழைக்கும் அரசாங்கம். பொதுவாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை இயல்பிலேயே கொண்ட குடிகள். 

மக்களைப் பொறுத்தவரை, அடிப்படை வசதிகளுக்குப் பிரச்சினை இல்லை. வேலையின்மை விகிதம் குறைவு. உலக அரங்கில் சிங்கப்பூருக்கு நல்ல பெயர் இருக்கிறது. நிதி நிலைமையும் வலுவாக உள்ளது. இந்தக் காரணங்கள் போதும் ஒரு தலைவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க. இவற்றையெல்லாம் செய்யாமல்கூட ஒருவர் தலைமைத்துவப் பதவியில் தொடர முடியும். தொங்கிக்கொண்டிருக்க முடியும். அது வேறு. ஆனால் அது நாட்டுக்கு நல்லதல்ல என்று நினைத்தார், காலஞ்சென்ற முதல் பிரதமர் லீ குவான் இயூ. 

நவம்பர் 28, 1990. சிங்கப்பூரில் 31 ஆண்டுக்குப் பிறகு முதல் தலைமைத்துவ மாற்றம். அன்றுதான் திரு. கோ சோக் தோங் சிங்கப்பூரின் பிரதமரானார். வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். மறுப்பதற்கில்லை. ஆனால் சிங்கப்பூருக்கு அது இன்னுமொரு நாள். காரணம் எல்லாம் திட்டமிட்டபடி முறையாக நடக்கின்றன. எந்தப் பதற்றமும் இல்லை. திரு. கோவே சொன்னது இது. 

திரு. கோ அரசியலில் அடியெடுத்துவைத்தது 1970களில். பல்வேறு அமைச்சுகளின் பொறுப்புகளை ஏற்றார். 6 ஆண்டு காலம் துணைப் பிரதமராக இருந்தார். பிறகு பிரதமரானார். சொல்லப்போனால் திரு. கோ, திரு. லீ குவான் இயூவின் முதல் தேர்வல்ல. திரு. லீ விரும்பியது, டாக்டர் டோனி டானை. ஆனால் டாக்டர் டான் உள்ளிட்ட இளம் தலைவர்கள் தேர்வுசெய்ததோ திரு. கோவை. அவர்களின் முடிவை முழுமனத்தோடு ஏற்றுக்கொண்டார் திரு. லீ. அதுதான் தலைமைத்துவப் பண்பு. அதுதான் சிங்கப்பூர். 

திரு. கோ பதவிக்கு வந்தபோதும், “என் வழி தனி வழி” என்ற அடிப்படையிலேயே செயல்பட்டார். தமது முடிவுகளில் திரு. லீ தலையிட்டது இல்லை என்பதையும் முழு சுதந்தரம் கொடுத்தார் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார் திரு. கோ. திரு. லீ, திரு. கோவுக்கு ஆதரவாக மூத்த அமைச்சராகச் செயல்பட்டு தமது அனுபவத்தை அவரோடு பகிர்ந்துகொண்டார். திரு. கோவின் அரசாங்கத்தில் திரு. லீயின் புதல்வர் திரு. லீ சியென் லூங் துணைப் பிரதமராக இருந்தார்.

அதே போன்று ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்ததுதான் அடுத்த தலைமைத்துவ மாற்றமும். அது நடந்தது ஆகஸ்ட் 12, 2004இல். 20 ஆண்டுக்கும் மேல் அனுபவம் பெற்ற பிறகு, நாட்டின் மூன்றாவது பிரதமரானார், திரு. லீ சியென் லூங். திரு. கோ அதற்குப் பாதை அமைத்துக்கொடுத்தார். அவர் மூத்த அமைச்சரானார். அதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த மூத்தவர் திரு. லீ, 80ஆவது வயதில் மதியுரை அமைச்சரானார். அமைச்சரவைக்கு ஆலோசனை கூறும் பொறுப்பு அது. 

2011ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, திரு. லீ குவான் இயூ அமைச்சரவையிலிருந்து விலகினார். ஆயினும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தமது கடமைகளைத் தொடர்ந்தார் அவர். திரு. கோ, ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சரானார். 

அடுத்த தலைமைத்துவ மாற்றத்துக்கு நாடு ஏற்கனவே தயாராகிவிட்டது. அதற்கான ஆயத்தப் பணிகளில் சென்ற சில ஆண்டுகளாகவே முனைப்புடன் இறங்கியுள்ளது ஆளும் மக்கள் செயல் கட்சி. கடந்த தேர்தலிலும் பல புதியவர்களைக் களமிறக்கியது அது. அவர்களில் சிலருக்கு முக்கியப் பொறுப்புகள் உடனே கொடுக்கப்பட்டன. 

இந்த நிலையில்தான் அண்மையில் நடந்துமுடிந்தது தேசிய தினக் கூட்ட உரை. அதில் பேசிக்கொண்டிருக்கும்போது, சோர்வின் காரணமாக பிரதமர் லீ சியென் லூங்கின் உரை ஒரு மணி நேரத்துக்கும் மேல் தடைபட்டது. அனைவரும் அதிர்ச்சியுடன் காத்திருந்த நிமிடங்கள் அவை. மீண்டும் அவர் உரையைத் தொடங்கப்போவதாகக் கேள்விப்பட்டதும்தான் நிம்மதி திரும்பியது அனைவருக்கும். 

பிரதமர் அன்றிரவு உரையைத் தொடர்ந்தது இரண்டு அம்சங்களைத் தெளிவுபடுத்துகிறது. ஒன்று அவரின் மனவுறுதி. இன்னொன்று, முக்கியமாக நாட்டுக்குச் சொல்லவேண்டிய செய்திகள் இருக்கின்றன என்பது. 

மீண்டும் பேசியபோது, தலைமைத்துவ மாற்றம் எவ்வளவு முக்கியம் என்பதைத் திரு. லீ வலியுறுத்தினார். அன்றைய சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொன்ன அவர், அது எவ்வளவு அவசரம் என்பதைச் சுட்டினார். அடுத்த தேர்தலுக்குப் பிறகு அடுத்த தலைவர் தம்மிடமிருந்து பொறுப்பை ஏற்று இந்தச் சின்னஞ்சிறு நாட்டை வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதையும் உறுதிபடக்கூறினார்.

ஒருசில நாடுகளில் தேர்தலின் மூலமோ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலமோ வேறு வழிகளிலோ அனுபவமின்றி ஒருவர் நாட்டின் தலைமைத்துவப் பொறுப்புக்கு வந்துவிட முடியும். அதில் தவறில்லை என்று சொல்வோரும் உண்டு. ஆனால் சிங்கப்பூருக்கு அதில் நம்பிக்கை இல்லை. அனுபவம் பெற்ற ஒருவரே நல்ல முறையில் சவால்களைச் சமாளிக்கமுடியும் என்ற எண்ணம் இங்கு ஆழ்மனத்தில் ஊறிப்போன ஒன்று. 

தலைமைத்துவ மாற்றத்தைப் பொறுத்தவரை மற்ற நாடுகள் சிங்கப்பூரை முன்மாதிரியாகக் கருதுவதற்குக் காரணம் சிங்கப்பூர் சொல்வதைச் செய்யும். செய்வதையே சொல்லும்.



- சபா. முத்து நடராஜன்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்