Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

எல்லைக்குள் இருந்தால் எல்லாம் சுகமே

உயர்ந்த சிந்தனைகள் பொதுவாக அனைவரிடத்திலும் உதயமாகின்றன. அவற்றின் மீதான உறுதியின்மையால் பல வேளைகளில் நாம் அறிந்தே பிழை செய்கிறோம். பிள்ளைப் பருவத்திலிருந்தே படிப்பினைகள் பலவற்றை நாம் உள்வாங்குகிறோம்.

வாசிப்புநேரம் -

உயர்ந்த சிந்தனைகள் பொதுவாக அனைவரிடத்திலும் உதயமாகின்றன. அவற்றின் மீதான உறுதியின்மையால் பல வேளைகளில் நாம் அறிந்தே பிழை செய்கிறோம். பிள்ளைப் பருவத்திலிருந்தே படிப்பினைகள் பலவற்றை நாம் உள்வாங்குகிறோம். தமிழில் கற்பதன்வழி வள்ளுவர், ஔவையார் போன்ற சான்றோர்களின் அறச்சொற்களை மிக இளமையில் கற்கிறோம்;  அரிய கருத்துகளை ரசிக்கிறோம்.

ஆனால் நமக்குள் இருக்கும் அறத்துக்கு அப்பாற்பட்ட ஒரு சில பழக்கங்களை நாம் நினைத்தாலும் கைவிடமுடிவதில்லை. பற்றும் பயமும் இல்லா ஆன்மாவுக்கு நல்லவை பிடித்திருக்கிறது. மனத்தின் மாய அலைகளோ நம்மைச் சுண்டி இழுத்து மீண்டும் மீண்டும் பாவப் புதருக்குள் தள்ளிவிடுகின்றன. மனச்சாட்சி நம்மை வருத்தும். ஆனாலும் மீண்டும் பிழைகள், மீண்டும் வேதனை...

{'கோலரிட்ஜின் நரகம்' என்ற ஓவியம் }

நமக்கே பிடிக்காத சில பண்புகள் நமது சில நடவடிக்கைகளில் எங்கோ பதுங்கியே இருக்கின்றன. ஒரு சிலர், எளியோருக்கு அள்ளிக்கொடுக்கும் தர்மவான்கள். ஆனால் அவர்கள் அளவுக்கு மீறி மது அருந்துவோராக இருக்கலாம். அதே நேரம் சிலர் அயராது உழைத்துத் தங்கள் துறைகளில் உயர்ந்திருப்பர். ஆனால், அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாமல் கோபக்காரர்களாக இருக்கலாம். அறிவாளிகள் பலரும்கூட அடுத்தவரை மதித்து நடக்காமல் இருக்கலாம்.  

லோர்ட் பைரன் என்ற ஆங்கிலப் புலவர் ஓர் உதாரணம். அவரது பேனாவிலிருந்து இனிய காதல் சொற்கள் அருவியெனப் பொழியும். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டு இறுதியில் அவர் வேதனையில் மடிந்தார். 'குப்லா கான்' போன்ற கவிதைகளால் வாசகர்களை மெய்மறக்கச் செய்து அருமையான கருத்துகளை முன்வைத்த சாமுவெல் டெய்லர் கோலரிட்ஜ், போதைப்புழக்கத்துக்கு அடிமையாகிப் பின்னர் மரணமடைந்தார். இரண்டாம் உலகப் போரின்போது, தமது உரைகளால் மக்களுக்கு ஊக்கமூட்டிய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும், சுடுசொல் வீசி மற்றவர்களைப் புண்படுத்தியதாகக் கூறுவார்கள். சாதனையாளர்கள் சிலரின் வாழ்க்கையிலும் கரும்புள்ளிகள் சில இருக்கவே செய்தன.

{கட்டுப்பாடில்லாமல் உண்பவரின் வேதனையைச் சித்தரிக்கும் படம் }

அப்படியென்றால், குணத்தளவில் முன்னேற முயன்றாலும், சில பண்புகள் நம்மைவிட்டுப் போகாமல் இருக்குமா?  பழம்பெரும் எழுத்தாளர் ஜேன் ஆஸ்டன், Pride and Prejudice என்ற தமது நாவலில் அது குறித்து எழுதியுள்ளார். மிகச் சிறந்த முறையில் கல்வி கற்று, அறத்தைப் பற்றி தெரிந்துகொண்டாலும், உலகம் ஏற்றுக்கொள்ளாத சில பண்புகளை நம்மால் முற்றிலும் அகற்ற முடியாது என்பது அந்த நாவலில் வரும் 'டார்சி' என்ற கதாபாத்திரத்தின் கருத்து. அதில் "கர்வம்" என்ற குணத்தைப் பற்றிப் பேசும்  டார்சி, இறுமாப்பு ஒருவரைப் பலவீனமாக்கும் என்கிறார். ஆனாலும், பக்குவப்பட்ட அறிவில் உருவாகும் நியாயமான கர்வம், என்றுமே கட்டுப்பாட்டுடன் இயங்கும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

{'Pride and Prejudice' புத்தகத்தைக் கருப்பொருளாகக் கொண்ட திரைப்படக் காட்சி}

குறிப்பிட்ட சில நல்ல குணங்களை அடையவேண்டும் என்று நம்மில் சிலர் இலக்கை வைத்திருப்பர். நம்மையே நாம் நன்றாக அறிந்துகொண்டு, நம்மிடம் மற்றவர்களுக்குப் பிடிக்காத குணங்கள் எவை என்பதையும் நாம் கவனமாக நிர்ணயித்துவிடவேண்டும். அவற்றை அறிந்து நம் கட்டுக்குள் கொண்டுவந்து முறையாகக் கையாண்டால் பெரும் நன்மைகளின் உருவாக்கத்திற்கு  வித்திடலாம்.

சில வேளைகளில் பெற்றோரும் ஆசிரியர்களும் பொய்யாகக் கோபித்துச் சிறுவர்களை நெறிப்படுத்துவார்கள். இதே உத்தியைப் பயன்படுத்தி, விளையாட்டாளர்கள் சாதனைகள் நிகழ்த்துவதற்குக் காரணமாக இருக்கிறார்கள் அவர்களின் பயிற்றுவிப்பாளர்கள். செல்வத்தைத் திரட்டும் நோக்கில் முதலீட்டாளர்கள் முனைப்புடன் அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள். இத்தகைய செயல்கள் எல்லை தாண்டாவிட்டால் சிக்கல் இல்லை. டார்சி பரிந்துரைத்தது போல், நமக்குள் இருக்கும் சில தீய குணங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி அவற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவது விவேகமானது. எல்லைக்குள் இருந்தால் எல்லாம் சுகம்தான்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்