Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

இலக்கியம் தேவையா? - 3

"கடைசியாக நீங்கள் எப்போது சிந்தித்தீர்கள் ?"

வாசிப்புநேரம் -

"கடைசியாக நீங்கள் எப்போது சிந்தித்தீர்கள் ?"

இதைப் படிக்கும்போது எனக்கு 20, 22 வயது இருக்கலாம். கல்கண்டு வார இதழில், லேனா தமிழ்வாணன் தம்முடைய ஒருபக்கக் கட்டுரையில் எழுப்பியிருந்த கேள்வி இது. இந்தக் கேள்வி என்னைப் பெரிதும் சிந்திக்கவைத்தது.

காலைக் கடன்களை முடிக்க, சாப்பிட, பாடம் படிக்க, கதைப் புத்தகம் வாசிக்க, விளையாட, பொழுதுபோக்க, நண்பர்களோடு ஊர்சுற்ற-என எல்லாவற்றையும் நேரம் ஒதுக்கிச் செய்கிறோம். ஆனால், என்றைக்காவது சிந்திக்க நேரம் ஒதுக்கியிருக்கிறோமா ? இல்லையென்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ நம் வாழ்க்கையில் (பதின்ம வயதில்) சில முடிவுகளை நாமாக எடுக்கத்தான் வேண்டியிருக்கிறது. எல்லா நேரமும் பெற்றோரும் மற்றாரும் நமக்காக முடிவெடுப்பதில்லை. பெரும்பாலும் ஒரு முடிவை எடுக்கும்முன் அதுபற்றிச் சிந்திக்க நமக்கு நேரம் இருக்கும். அந்த நேரத்தில், குறிப்பிட்ட பிரச்சினை எப்படிப் போகும் ? அதை எப்படிக் கையாண்டால் நமக்கு நல்லது என்று சிந்தித்தால், நல்ல பலன்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். எத்தனையோ சந்தர்ப்பங்களில், எவ்வளவோ பேர் நம்மிடம் "யோசிக்காம செஞ்சிட்டேன்" என்று புலம்பியதைக் கேட்டிருப்போம்.

சிந்திப்பதற்கென்று நேரம் ஒதுக்கமுடிந்தால் அது சிறப்பு. இல்லையென்றால், கிடைக்கும் நேரத்தைப் புத்திசாலித்தனமாக, சிந்திக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். லேனா தமிழ்வாணனின் பரிந்துரைப்படி, சிந்திக்கக் கிடைக்கும் மிகச் சிறந்த நேரம் பயணங்களின்போது.

என்னுடைய அனுபவத்தில் அதை நானும் முழுமையாக ஒப்புக்கொள்வேன். என்னுடைய வாழ்வில் நான் படித்த புத்தகங்களில் பாதிக்கும்மேல் பயணத்தின்போதுதான் என்றாலும்கூட, நான் சிந்தித்ததும், சிந்திப்பதும் பயணத்தில்தான் அதிகம்.

ஏனென்றால், பயணத்தின்போது அநேகமாகத் தனித்திருப்போம். தொடக்ககட்டத் தொந்தரவுகள் தவிர வேறு இடையூறு இருக்காது. நீண்ட பேருந்து, ரயில், விமானப் பயணங்களின்போது விளக்கை அணைத்தபிறகு தூக்கம் வராமல் எவ்வளவு நேரம் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருப்பது ? கொஞ்சம் சிந்திக்கலாமே.. சிந்திப்பதற்கென்று விஷயமா இல்லை ?

சிந்தித்து எடுத்த முடிவுகள் நம்மைப் படுகுழியில் தள்ளுவதில்லை. ஆனால், நம்மில் பலருக்கு அதற்குப் பொறுமை இருப்பதில்லை. இந்தப் பொறுமையை நான் வலிந்து உருவாக்கிக் கொள்கிறேன். அதற்காக இன்றுவரை லேனாவுக்கு மனத்துக்குள் நன்றி கூறிக்கொள்வேன். எதையும் சிந்தித்துத் திட்டமிட்டுச் செய்ய வேண்டுமென்ற பழக்கத்தைப் புத்தகம் படித்துத்தான் நான் கற்றுக் கொண்டேன். பொதுவாக எல்லாப் பெற்றோரும் சொல்லக்கூடிய "எதையும் யோசிச்சுச் செய்" என்ற அறிவுரை என்னிடம் போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால், போகிறபோக்கில் ஒரு வாரப் பத்திரிகையில் படித்த கேள்வி என்னைப் புரட்டிப் போட்டது. நண்பர்கள் சிலரிடம் இதே கேள்வியைக் கேட்கும்போது அவர்கள் திடுக்கிட்டு விழிப்பதைப் பார்த்திருக்கிறேன். சிந்திக்காத மனிதரில்லை. ஆனால், அதற்கென ஒரு நேரத்தை ஒதுக்கி, முறைப்படி, போதுமான அளவு சிந்திக்கிறோமா என்பதே கேள்வி.

"என்னடா எப்பப் பார்த்தாலும் புஸ்தகம் புஸ்தகம்-னு கட்டிக்கிட்டு அழற?" என்று என் நண்பர்கள் சிலர் என்னிடம் வேடிக்கையாகக் கேட்கும்போது பதில் சொல்லாமல் புன்னகைத்துக் கொள்வேன். புத்தகங்கள் எனக்குச் செய்திருக்கும் சகாயங்கள்தான் எத்தனையெத்தனை ?

"புத்தகமோ இலக்கியமோ படிக்காவிட்டால் என்ன குடியா முழுகிவிடப் போகிறது ? நாங்களெல்லாம் முன்னேறலையா ?" என்று கேட்பவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை. அது உங்கள் தெரிவு. நமக்கு அறிமுகமில்லாத ஓர் உலகத்தை இலக்கியத்தின் வழியாக, தொடர்ந்து அறிமுகம் செய்து கொள்ளும்போது கிடைக்கும் அனுபவமும் ஆனந்தமும் உங்களுக்கு வேண்டாமென்றால் நான் என்ன செய்யமுடியும் ?

இலக்கியம் என்பது ஒளியைப் போல். அதன் வெளிச்சத்தில் மற்றவருக்குத் துலங்காததெல்லாம் நமக்குத் துலங்கும். வாழ்க்கையைப் புதிய கோணத்தில் தரிசிக்க, இலக்கியங்கள்தாம் நமக்குச் சொல்லாமல் சொல்லித் தருகின்றன.

இலக்கிய அறிமுகமில்லாதவர், இயற்கையின் பிரமாண்டத்தை உணர்வது சிரமம். இலக்கியத்தில் தோய்ந்த மனம், உலகெங்கும் பூத்துக் குலுங்கும் சௌந்தர்யங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கும். எந்தச் சூழலையும் நேர்மறையாகப் பார்க்கும்.

ஆதலினால் மானிடரே....

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்