Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

நூலகம் நுழைவோம்

நம்மில் பெரும்பாலோர் அன்றாடப் பணிச்சுமையில் அல்லாடிக்கொண்டிருக்கிறோம்.

வாசிப்புநேரம் -

நம்மில் பெரும்பாலோர் அன்றாடப் பணிச்சுமையில் அல்லாடிக்கொண்டிருக்கிறோம்.

இளைப்பாறுவதற்கே நேரமில்லை எனும்போது நூலகம் செல்வதென்பது கடினம்தான்.

அசதி நீக்கிப் புத்துணர்ச்சி தரும் அருமருந்து புத்தகங்கள் என்பது நூலகங்களுக்கு அடிக்கடி சென்றுவருவோர் அறிந்த இரகசியம்.

சிங்கப்பூர் நூலகங்களின் தனிச்சிறப்பு மிகச்சிறந்த தமிழ் இலக்கியப் புத்தகங்கள்.

அனைத்துத் தரப்பு வாசகர்களும் அவரவர் வாசிப்புத்திறனுக்குத் தகுந்தார் போல் புத்தகங்களைத் தெரிவுசெய்து பயன்பெற முடிகிறது.

நாஞ்சில் நாடன், ஜெயமோகனின் தீவிர வாசகன் என்று என்னைச் சொல்லலாம்.

அவர்கள் பிறந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவன் என்றாலும் சிங்கப்பூர் நூலகங்களில்தான் அவர்களின் பல புத்தங்களை வாசித்தேன்.

நம் நூலகங்களின் இன்னொரு சிறப்பம்சம் - அடையாளம் காணப்பட்ட சிறந்த நூல்கள் பலவற்றை எளிதாகப் பெற முடிவது.

நாஞ்சில் நாடனின் புத்தகத்தை வாசிக்கும்போது, அவரின் “தலைகீழ் விகிதங்கள்” (இந்நாவலைத் தழுவி “சொல்ல மறந்த கதை” திரைப்படம் எடுக்கப்பட்டது), நீல பத்மநாபன் அவர்களின் “தலைமுறைகள்” நாவலின் பாதிப்பில் எழுதியதெனக் குறிப்பிட்டிருந்தார்.

”தலைமுறைகள்” 1968இல் வெளிவந்து 1992இல் வானதி பதிப்பகத்தின் முதற்பதிப்பாக வந்த புதினம்.

நம் நூலகத்தில் முதல் முயற்சியிலேயே “PAD” வரிசையில் பளிச்செனத் தென்பட்டது.

தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளின் புதினங்களும் புதினமல்லாதவையும் எட்டிய தூரத்தில் நம் வருகைக்காகக் காத்திருக்கின்றன.

சில நூலகங்களில் தமிழ்ப் புத்தக அணிவகுப்பின் அருகில் நம்மவர்களைக் காண்பது அரிதாக உள்ளது.

வாரம் ஒரு முறை முயற்சி செய்வோம். முடியாவிடில் மாதமொரு முறையாவது முயன்று பார்ப்போமே.

மகிழ வைத்தது மற்றொரு நிகழ்வு.

அடுத்த ஆண்டு தொடக்கக்கல்லூரி செல்லும் என் மகனின் பள்ளியிலிருந்து புதினங்களும் புதினமல்லாதவையும் அடங்கிய ஆங்கிலப் புத்தகப் பட்டியலைப் பரிந்துரைத்தனர் விடுமுறையில் வாசிப்பதற்காக.

“1984” by George Orwell அதிலொன்று. அப்புத்தகம் ஏற்கனவே மற்றொருவரால் இரவல் பெறப்பட்டிருந்ததால் சிறிது ஏமாற்றம் அவருக்கு.

அந்தப் புத்தகத்தின் தமிழாக்கம் (தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான க.நா.சு அவர்களுடையது) கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.

“வாசிக்கும் புத்தகங்களுக்கும் சந்திக்கும் நபர்களுக்கும் நம் வாழ்க்கையை மாற்றும் வல்லமை உண்டு” என்பது பொன்மொழி.

பின்னது முழுவதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் முன்னது நம் முழுக்கட்டுப்பாட்டில்.

நூலகம் நுழைவோம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்