Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

எங்கே தேடுவேன்?

நாம் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருப்பதே இல்லை. எத்தனை நாட்கள் நம்மில் பலர் இப்படிப் புலம்பியிருப்போம்? 

வாசிப்புநேரம் -
எங்கே தேடுவேன்?

(நன்றி: Pinterest/ David Kruisheer)

நாம் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருப்பதே இல்லை. எத்தனை நாட்கள் நம்மில் பலர் இப்படிப் புலம்பியிருப்போம்?

பொருள் நம்முடையது. வைத்த இடமும் நமக்குத் தெரிந்த ஒன்றுதான். இருப்பினும் சில நாட்களில் நினைவில் இருந்து மறைந்துவிடுகிறது அந்த முக்கியமான தகவல். உடனே என்ன செய்வோம்?

கண்ணில் தென்படுவோரைக் கடிந்துகொள்வோம். வீடு அலங்கோலமாக இருக்கிறது என அன்னை புலம்பும்போதெல்லாம் இது என்ன அறையா அரும்பொருளகமா எல்லாம் சரியாக இருக்க? என்று அடிக்கடி நம்மில் பலர் கேட்டிருப்போம். 

எனினும் வீடு ஒழுங்கான முறையில் இருப்பதில் தனி மகிழ்ச்சி இருக்கிறது எனத் தாய்மார்கள் மட்டுமின்றி பலரும் ஒப்புக்கொள்வர். மன உளைச்சல் குறையும் சாத்தியமும் அதில் அதிகம் இருப்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம். மறதியையும் மற்றவர்களையும் குறைகூறுவதைவிட, பொருட்களை வைப்பதற்குக் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்குவதற்குப் பழகிக்கொண்டால் பல நன்மைகள் உண்டாகும். 

பொருட்களைத் தேடுவதில் நேரத்தை வீணாக்கத் தேவையிருக்காது. 

அந்தந்த இடங்களைக் குறித்துவைத்துக்கொள்வது நல்லது. அவ்வாறு பொருட்களை வகைப்படுத்தி வைத்துக்கொள்வது மேலும் இடத்தை விசாலமாகக் காட்டவும் உதவும். ஒழுக்கமாகவும் தூய்மையாகவும் இருப்பது உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் பெரிதும் நன்மை அளிக்கும்.

தொலைத்துவிட்டோம் என நினைத்து மீண்டும் அதே பொருளை வாங்கவேண்டிய தேவையிருக்காது. பணத்தைச் சேமிக்கலாம்.

சிறியவர்களும் பெரியவர்களும் ஒன்றாகச் சேர்ந்து புதிய யோசனைகளைச் செயற்படுத்தி வசிக்கும் இடத்தை அழகாக வைத்துக்கொள்ளலாம். விருந்தாளிகள் திடீரென்று வீட்டுக்கு வந்துவிட்டால், பதற்றம் அடையத் தேவையில்லை. அவர்களை வரவேற்கப் புன்னகையுடன் தயாராகலாம். 

வேலை இடத்திலும் பள்ளியிலும் அதே போக்கைப் பின்பற்ற அந்தப் பழக்கங்கள் கைகொடுக்கும். 

பிறரின்மீது எரிச்சல்கொள்வதைவிட நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் அத்தகைய முறையான பழக்கங்கள். எதனை எங்கிருந்து எடுக்கிறோமோ அதனை அதற்குரிய இடத்தில் பத்திரமாக வைக்கவேண்டும் என்பதைப் பிள்ளைகளிடம் சிறுவயதிலிருந்தே ஊக்குவிக்க வேண்டும். நாம் இருக்கும் இடம் தூய்மையாக இருப்பதன்வழி, தன்னம்பிக்கை, நிம்மதி போன்றவை நமக்குக் கிட்டும். ஒருவர் வசிக்கும் இடத்தைப் பார்த்து அவரின் பழக்க வழக்கங்களைக் கணிக்கலாம் எனப் பெரியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். 

சோம்பேறித்தனத்துக்கு ஆளாகாமல் சற்று நேரம் ஒதுக்கினால் அதிக நேரத்தை மிச்சப்படுத்தலாம் அல்லவா? அதைவிட, சுய முன்னேற்றத்துக்கு ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பது பெரிதும் பலனளிக்கும். 

வீடு தூய்மையடைந்தால், மனம் நிறைவடையும். அடுத்த ஓய்வுநாளில், வீட்டை நன்றாகச் சுற்றிப் பாருங்கள். கற்பனை துளிகளைச் சிதற விடுங்கள். 

சிதறிக்கிடக்கும் பொருட்களுக்கு இடம் ஒதுக்குங்கள். சீரான சூழல் தெளிவான எண்ணங்களை விதைக்க வழிவகுக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்