Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

இலக்கியம் தேவையா ? – 2

“சந்தோஷமோ கோபமோ எதுனாவானாலும் ஐந்து நிமிடம் தள்ளிப் போடு”

வாசிப்புநேரம் -

“சந்தோஷமோ கோபமோ எதுனாவானாலும் ஐந்து நிமிடம் தள்ளிப் போடு”

எழுத்தாளர் பாலகுமாரன் தம்முடைய கதாபாத்திரம் வழியாகச் சொல்லும் இந்த ஆலோசனை எனக்கு மிகவும் பிடித்தமானது. இதை நான் என்னுடைய இள வயதில் படிக்க நேர்ந்தது என் நல்லூழ்.. கோபம் வரும்போது ஒரு குவளை குளிர்நீர் குடிக்கச் சொல்லும் ஒரு கட்டுரையை முன்னரே படித்திருக்கிறேன். அதன் நோக்கம் எனக்குப் புரிகிறது. 

எதையுமே தள்ளிப் போடும்போது அதன் வீரியம் குறைகிறது. கோபத்தைச் சில நிமிடங்கள் (விநாடிகள்கூடப் போதும்) தள்ளிப் போட்டால் கூட அது 99 விழுக்காடு குறைந்து நாம் சாந்தமடைவதைப் பல தருணங்களில் உணர்ந்திருக்கக் கூடும். கொலை, கொள்ளை உள்ளிட்ட மாபாதகச் செயல்களில் ஈடுபடுவோர் கூடக் கண நேரக் கோபம், கண நேர சபலத்தை அதற்குக் காரணமாகக் கூறியிருக்கிறார்கள். அந்தக் கண நேரத்தைக் கடந்துவிட்டால் பிரச்சினையில்லை. ஆனால் அது எளிதல்ல. அதைச் சாதிப்பது எப்படி ?
முயன்றால் முடியாதது இல்லை. தொடக்கப் பள்ளியில் உடன் பயின்ற தோழனைப் பலகாலம் கழித்து எங்கோ திடீரெனச் சந்திக்கிறீர்களா ? 

உடனே ஓடிப் போய் மேலே விழுந்து, பிறாண்டி, கூச்சலிட்டு உங்கள் அன்பைத் தெரிவிக்கவேண்டும் என்பதில்லை. தொலைவிலிருந்து அவர் நடவடிக்கையை கவனித்து, அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் ? யாரோடு இருக்கிறார் ? காலம் அவர் முகத்தில் என்னென்ன மாற்றங்களை எழுதியிருக்கிறது ? என்பதையெல்லாம் அவதானித்து நிதானமாக உங்களை அறிமுகம் செய்து கொள்ளலாமே. எந்தச் சூழலிலும் நிதானமாக இருப்பது நம்மைப் பல இக்கட்டுகளில் இருந்து காப்பாற்றும். 

கோபம் வருகிறதா ? உடனே அதை வெளிப்படுத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைக் கணநேரம் யோசித்துப் பார்க்க வேண்டும். பாதிக் கோபம் பறந்துவிடும். கோபத்தைத் தள்ளிப் போடுவதால் அதன் பாதிப்புகளைக் குறைக்க முடியும் என்பது புரிகிறது. மகிழ்ச்சியை ஏன் ஐயா தள்ளிப் போட வேண்டும் என்று உங்களில் பலர் இப்போது யோசிக்கக்கூடும். எனக்கும் அது இளவயதில் அவ்வளவாகப் புரியவில்லை. 

வாழ்க்கை அனுபவம் அதை எனக்கு விளக்கியது. நாம் மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்போது நம் சக்திக்கு மீறிய வாக்குறுதிகளை அளித்துவிடும் ஆபத்து அதிகமிருக்கிறது. வாக்குக் கொடுத்துவிட்டோமே என்ற ஒரே காரணத்திற்காக நம்மால் முடியாததை, விரும்பாததைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாவோம். ஆகவே, சந்தோஷத்தையும் ஐந்து நிமிடம் தள்ளிப் போட்டு ஆறவிடுவது நல்லது.

இவற்றையெல்லாம், புத்தகங்களே எனக்குக் கற்றுத் தந்தன. யாரும் வாய் வார்த்தையாக உபதேசிக்கவில்லை. இலக்கியம் எனக்குத் தந்த கொடைகளை என் பிள்ளைகளுக்குப் புரியும் விதத்தில் அவ்வப்போது சொல்லி அவர்களையும் நல்ல புத்தகங்கள் வாசிக்கத் தூண்டிக் கொண்டே இருப்பேன். புத்தகக் கண்காட்சிக்குச் சென்றால் பிள்ளைகள் கேட்கும் புத்தகத்தை வாங்கித் தரத் தயங்கவே மாட்டேன். “கிண்டில் மூலம் படிக்கிறேன் செலவு குறையும்” என்று என் மகன் கேட்பதுண்டு.

ஆனாலும் தாள் புத்தகங்களே என்னுடைய தேர்வு. அதைக் கையில் பிடித்து, புரட்டி, வாசம் பிடித்து வாசிக்கும் இன்பம் அலாதிதான். அதை மின்புத்தகம் எனக்கு அளிப்பதில்லை. இது ஆளாளுக்கு வேறுபடலாம். எப்படியோ நல்ல இலக்கியம் வாசித்தால் சரி. பிள்ளைகளுக்கு இளயவதிலேயே இலக்கியம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டால் அவர்களின் பதின்ம வயதுத் தொல்லைகள் பெரும்பாலும் எல்லை கடக்காது என்பது என்னுடைய அனுபவம்.

குழந்தைப் பருவத்தில், கதை கேட்டு வளரும் பிள்ளைகளை இலக்கியத்தின் பக்கம் திருப்புவது எளிது. படிப்பறிவு வரும்வரை நாமே நம் பிள்ளைகளுக்கு இலக்கியகர்த்தா. என் பிள்ளைகளுக்குக் கதை சொல்வதற்காகவே நான் நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து வந்து படித்து என்னைத் தயார் செய்திருக்கிறேன். புரியாத வயதில் வண்ணமயமான படக் கதைகளில் தொடங்கலாம் அந்த ஆர்வத்தை.

இன்றைய போட்டிமிக்க உலகில், தனித்துவமே வெற்றிக்கு ஆதாரம். மதிப்பெண் தேர்வு முறையைக் காட்டிலும் ஒரு மாணவரின் தனிப்பட்ட திறமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சிங்கப்பூர்க் கல்வி முறை மாறத் தொடங்கியிருக்கிறது. இது ஆரோக்கியமான மாற்றம். கற்பனை செய்யும் பிள்ளைகளே வாழ்க்கையில் மகத்தான சாதனைகளைப் படைக்கின்றனர். 

இது தகவல் யுகம். கோடிக்கணக்கான தகவல்கள் நம்மையும் அறியாமல் நம் மீது வந்து கொட்டிக் கொண்டே இருக்கின்றன. தகவல்களைத் திரட்டித் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வது ஒரு திறமைதான். மறுப்பில்லை. ஆனால், சேகரித்த தகவல்களை நமக்குப் பயனுள்ள வகையில் மாற்றுவதற்குத் தேவை, சிந்தனை.. சிந்தனையின் மூலாதாரம் கற்பனைத் திறன்...

புத்தகங்களும் நாம் சொல்லும் கதைகளுமே பிள்ளைகளின் கற்பனைத் திறனைத் தூண்டுகின்றன. தொலைக்காட்சி, வீடியோ விளையாட்டுகள், கைத் தொலைபேசி விளையாட்டுகள் எல்லாமே படத்தைத் தெளிவாகக் காட்டிவிடுவதால் கற்பனைக்கு இடமிருப்பதில்லை. பச்சைப் பசேலென்ற காடு என்று சொல்லித் தொலைக்காட்சியில் காட்டினால், படத்தில் என்ன பச்சை இருக்கிறதோ அதுதான். 

ஆனால், புத்தகத்தில் வரும் பசுங்காட்டின் பச்சை எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அதை நம் பிள்ளைகள் தங்கள் விருப்பத்திற்கும் முதிர்ச்சிக்கும் அனுபவத்திற்கும் ஏற்றவாறு மனத்துக்குள் விரித்தெடுக்க முடியும். கதை மேலே செல்லச் செல்ல அது தொடர்பான கற்பனையும் நமக்குள் விரிந்து கொண்டே செல்லும். இதனால்தான் பிரபலமான கதைகளைப் படமாக எடுக்கும்போது இயக்குநரின் பணி சவால் மிக்கதாகிறது.

ஒரு புகழ்பெற்ற நாவல் இருக்கிறதென்றால், அதைப் படித்த லட்சம் வாசகர்களும் மனத்துக்குள் லட்சம் விதமான கற்பனையில் அதைக் கண்டிருப்பார்கள். திரையில், இயக்குநர் ஒருவரின் கற்பனையில் காண்பது ரசிகனின் கற்பனையோடு ஒத்துப் போகவில்லையென்றால் அவனுக்குள் இருக்கும் வாசகன் ஏமாற்றமடைகிறான். மோகமுள் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். தி. ஜானகிராமன் வார்த்தெடுத்த யமுனாவும் பாபுவும் ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் ஒரு விதமாக இருந்திருப்பார்கள். அதைத் திரையில் எதிர்பார்த்துத் தேடிய சிலருக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். 

புத்தாக்கத்துக்குக் கற்பனைதான் ஆதாரம். அந்தக் கற்பனைக்கு இலக்கியம்தான் ஆணிவேர். புத்தகப் புழுக்களாய் வளர்க்கப்படும் பிள்ளைகள் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாகத்தான் மாறுகின்றன. நாளை அவர்கள் நிஜமான வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது திடுக்கிட்டு நின்றுவிடக்கூடும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமென்றால், புத்தக வாசிப்பை இளமையிலேயே அறிமுகம் செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. 

அதற்கு முதலில், நாம் நல்ல முன்மாதிரிகளாக நடந்து காட்ட வேண்டும். வீட்டில் அம்மாவும் அப்பாவும் ஓய்வு நேரத்தை நல்ல புத்தகங்களில் கழிக்கக் கூடியவர்களாக இருந்தால் பிள்ளைகளும் தாமாகவே புத்தகங்களைக் கையில் எடுத்து விடுவார்கள். மாறாக, பெற்றோரே 24 மணி நேரமும் கைத் தொலைபேசியில் தொங்கினால் பிள்ளைகளை எப்படிப் புத்தகங்களின் பக்கம் திருப்ப முடியும் ? தொடர்ந்து பேசுவோம்.


தோழமையுடன்,
பொன். மகாலிங்கம்


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்