Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

கோபத்திற்கா கணக்கு?

வெளிப்பிரபஞ்சத்தைவிட அகலமாகவும் ஆழமாகவும் உள்ளது நம் எண்ணங்களைக் கொண்ட உள் மனது.

வாசிப்புநேரம் -

வெளிப்பிரபஞ்சத்தைவிட அகலமாகவும் ஆழமாகவும் உள்ளது நம் எண்ணங்களைக் கொண்ட உள் மனது. நிஜ உலகிற்குரிய முப்பரிமாணப் பொருட்கள்நமது புறக்கண்களுக்குச் சுலபமாகக்தெரிகின்றன. அகக்கண்ணில் பார்க்கும் பொருளை வர்ணிக்கும் ஆற்றல் வெகு சிலருக்கேஉண்டு.

"நமது ஆசை இதுதான்" என்பதைப் பல நேரங்களில் நம்மால் உறுதியாகக் கூற முடியாது. ஆயினும், ஆசைப்பட்டது நம்மைவிட்டு நழுவும்போது அதை உடனடியாக உணர்கிறோம். ஆசை நிறைவேறாமல் போனால் அந்த வேதனை கோபமாக மாறுகிறது. அத்துடன், மற்றவர்கள் நமக்குத் தவறு இழைக்கும்போது, கோபம் அருவியெனப் பொங்கி வழிகிறது. 

அடிக்கடி கோபப்பட்டு, அந்தக் கோபஉணர்வை உள்ளுக்குள்ளே வைத்திருந்தால் உடல்நலத்திற்கு ஊறு ஏற்படலாம். கோபத்தை வெளிப்படுத்தினாலும் பிறர் புண்படுவர். மனச்சாட்சி உடையவரின் கோபம் அவரையே புண்படுத்திவிடும்.

தமிழ் மூதாட்டிஒளவையார், இவ்வாறு கூறுகிறார்:
"கற்பிளவோ (டு) ஒப்பர் கயவர்
கடுஞ்சினத்துப் பொற்பிளவோ (டு)
ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்" - மூதுரை 23

பிளவுபட்ட கல் எப்படி மீண்டும் ஒன்றுசேராதோ,அதைப் போன்று தீயவர்கள் கோபப்பட்டால் அவர்கள் ஒன்று சேரமாட்டார்கள். ஆனால், பிளவுபட்ட தங்கத்தை எப்படி உருக்கி மீண்டும் இணைக்க முடியுமோ, அதனைப் போலவே சான்றோர்கள் தங்களது கோபத்தால் பிரிந்தாலும், அந்தப் பிரிவு நிலைக்காது.

கோபம் என்பது இயல்பான உணர்ச்சி. ஆனால், முடிந்தபோதெல்லாம் நாம் சான்றோர்களின் வழியைப் பின்பற்றுவோமே! கானல் நீராய்த் தோன்றி மறையும் மண்ணுலக வாழ்க்கையில் கோபத்தை வருடக்கணக்கில் சுமப்பதுஎதற்காக? கணக்கியலில் 'writing off' என்ற பதம் உள்ளது. தமக்குக் கொடுக்கப்பட வேண்டிய பணத்தைக் கணக்கிலிருந்து அழிப்பது என்பது அந்தப் பதத்தின் பொருள்.

நாம் பிழை செய்துவிட்டு, மற்றவர்கள் மீது சினம் கொள்வது, மடமையின் உச்சம். நமது தவறுகளை முதலில் நாம் சரிசெய்யவேண்டும். பிறகு, வாழ்க்கையை இளகிய மனத்துடன் இலகுவாக வாழும் போக்கைநாம் கடைப்பிடிக்கலாம். நமக்குக் கோபத்தை ஏற்படுத்தும் நபர்களின் செயல்களைப்பேசித் தீர்த்துக்கொள்ள முடியாவிட்டாலும்பரவாயில்லை. நம் மனக்கணக்கில் வைத்துக்கொள்ளவேண்டாமே. Just write it off!


 -          ஜனார்த்தனன் 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்