Images
  • 130917 boss ined
    (படம் : சேனல் நியுஸ்ஏசியா)

பணிப்பெண்ணுக்கு ஊதியம் கொடுக்காத முதலாளிக்கு $15,000 அபராதம்

வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்குச் சுமார் $5,700 சம்பளம் கொடுக்கத் தவறியற்காக சிங்கப்பூரர் லீ ஜூனுக்கு $15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதைச் செலுத்தத் தவறினால் அவர் 6 வாரச் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டியிருக்கும்.

லீ மீது,13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. அவற்றுள் மூன்றை லீ ஒப்புக்கொண்டார்.

மீதமுள்ள பத்துக் குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கப்படும்போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இனிமேல் எந்த ஒரு வெளிநாட்டுப் பணிப்பெண்ணையும் லீ வேலைக்கு அமர்த்த தடை விதிக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.

லீ அவரின் பணிப்பெண்ணுக்கு மாதச் சம்பளமாக $420 கொடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 21ஆம் தேதிவரை லீ பணிப்பெண்ணுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்பட்டது.

இந்த மாதம் 7ஆம் தேதி முழு ஊதியத்தையும் அவர் பணிப்பெண்ணுக்கு வழங்கியுள்ளார். 

பணிப்பெண்கள் வெளிநாட்டிலுள்ள தங்கள் குடும்பங்களை ஆதரிக்கத் தங்களுடைய சம்பளத்தையே சார்ந்திருப்பதாக மனிதவள அமைச்சு கூறியது. 

சட்டப்படி நேரத்துக்கு மாதந்தோறும் அவர்களுக்கான ஊதியம் பணிப்பெண்களைச் சேர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பணிப்பெண்கள் தங்களுக்குச் சேர வேண்டிய ஊதியம் உரிய காலக்கட்டத்துக்குள் வரவில்லை என்றால் அது குறித்து முதலாளியிடம் பேச வேண்டும். 

பிரச்சினை நீடித்தால், மனித வள அமைச்சிடமோ வேலை வாய்ப்பு முகவையிடமோ தெரிவிக்க வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Top