Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"என் நண்பர்கள் கவலை தெரிவித்ததால் சிங்கப்பூரை விட்டு வெளியேறினேன்": லீ ஷெங்வு

காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் பேரப் பிள்ளை திரு. லீ ஷெங்வு, தாம் தடுத்துவைக்கப்படலாம் என்று நண்பர்கள் கவலை தெரிவித்ததால் சிங்கப்பூரை விட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளார்..

வாசிப்புநேரம் -
"என் நண்பர்கள் கவலை தெரிவித்ததால் சிங்கப்பூரை விட்டு வெளியேறினேன்": லீ ஷெங்வு

(படம்: Screengrab via Prime Minister's Office/YouTube)

காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் பேரப் பிள்ளை திரு. லீ ஷெங்வு, தாம் தடுத்துவைக்கப்படலாம் என்று நண்பர்கள் கவலை தெரிவித்ததால் சிங்கப்பூரை விட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் அவ்வாறு கூறினார்.

ஆனால் தமது நண்பர்களின் அடையாளங்களைத் தெரிவிக்கவோ, அவர்களிடம் குறிப்பிடத்தகுந்த தகவல்கள் இருந்தனவா என்பதைத் தெரிவிக்கவோ திரு. லீ மறுத்துவிட்டார்.

சிங்கப்பூரில் ஒருவர், பிரதிநிதிக்க வழக்குரைஞர் இன்றி, சில காலத்துக்குத் தடுத்து வைக்கப்படவோ, விசாரணைக்கு உட்படுத்தப்படவோ சாத்தியம் இருப்பதாகத் திரு. Li அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆனால் தடுத்துவைக்கப்படுவது குறித்தும், விசாரணை குறித்தும் திரு. லீ ஷெங்வு முன்வைத்துள்ள கருத்துகள் சரியானவை அல்ல என்று பிரதமரின் பத்திரிகைச் செயலாளர் சாங் லீ லின் கூறியுள்ளார்.

திரு. லீ ஷெங்வு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் தொடர்பில் அவர்மீது வழக்குத் தொடுக்கப் போதிய ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கான விசாரணைக்குத் தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம் உயர்நீதி மன்றத்திடம் அனுமதி கேட்கவிருக்கிறது.

திரு. லீ சென்ற மாதம் 23ஆம் தேதி, சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா திரும்பினார். திட்டமிடப்பட்டிருந்ததைவிட ஒரு வாரத்துக்கும் முன்னதாகவே அவர் பயணம் அமைந்திருந்தது.

அதற்கு இரு நாட்களுக்கு முன்னர், தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம் சிங்கப்பூரின் நீதிமன்ற முறை குறித்து திரு. லீ சென்ற மாதம் 15ஆம் தேதி வெளியிட்ட Facebook பதிவின் தொடர்பில் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், அந்தப் பதிவை நீக்க வேண்டும் என்றும் கடிதம் அனுப்பியிருந்தது.

திரு. லீ அந்தப் பதிவை நீக்கப்போவதில்லை என்றும் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்றும் முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து இந்த மாதம் 4ஆம் தேதி அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தொடங்கியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்