Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அரசாங்க அமைப்புகள் சிலவற்றின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளில் குறைபாடுகள் : தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம்

அரசாங்க அமைப்புகள் சிலவற்றின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

வாசிப்புநேரம் -

அரசாங்க அமைப்புகள் சிலவற்றின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிற அமைப்புகளின் முந்தைய கணக்குத் தணிக்கைகளில் அடையாளங்காணப்பட்ட குறைபாடுகள் போன்றே தற்போதும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருடாந்திர அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றன.

மத்திய சேமநிதி வாரியம், SCORE நிறுவனம், தேசியப் பூங்காக் கழகம், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றின் தணிக்கைகளில் அந்தக் குறைபாடுகள் அடையாளங்காணப்பட்டன. 

தகவல் தொழில்நுட்பச் செயல்பாடுகளை போதிய அளவு மறுபரிசீலனை செய்யாதது, அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்தியது போன்றவை அவற்றுள் அடங்கும். 

அரசாங்கத் துறை அதிகம் தொழில்நுட்பச் செயல்பாடுகளையும் தகவல்களையும் சார்ந்துள்ளது. 

தகவல் தொழில்நுட்பத்தின் தொடர்பில் அதிகரித்துவரும் பாதுகாப்பு மிரட்டல்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அத்தகைய அம்சங்களில் போதிய அக்கறை செலுத்தாதது கவலைக்குரிய ஒன்று என அறிக்கை வலியுறுத்தியது.

சில அமைப்புகளில் நிதிக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சில கட்டணங்கள் உரிய நேரத்தில் வசூலிக்கப்படாதது, சொத்துக்களைச் சரியாக நிர்வகிக்காமல் போனது போன்ற குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டன.

சிங்கப்பூர் விளையாட்டு மன்றம், SCORE, பொருளியல் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் தணிக்கை அறிக்கைகளில் அந்தக் குறைபாடுகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் பல்வேறு வேளைகளில், அதற்குப் பொருள், சேவை வழங்கியோருக்குத் தாமதமாகக் கட்டணம் செலுத்தியிருப்பதாகத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் சொன்னது. 

முந்திய ஆண்டுகளில், வெவ்வேறு பொதுத்துறைப் பிரிவுகளில் மேம்பாட்டுப் பணிகள் சரியாகக் கண்காணிக்கப்படாதது தொடர்ந்து அக்கறைக்குரிய அம்சமாக இருந்துவருகிறது என்றது அலுவலகம். 

சுகாதார அமைச்சின் மேம்பாட்டுத் திட்டங்களில் போதுமான மேற்பார்வையில்லாதது தணிக்கையில் தெரியவந்துள்ளது. 

பொதுத்துறைப் பிரிவுகளின் சார்பில் மேற்பார்வையிட நியமிக்கப்படும் முகவர்களால் அத்தகைய குறைபாடுகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்