Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தியோங் பாரு சமூக மன்றம் ஈராண்டு மறுசீரமைப்பு பணிகளுக்குப் பிறகு மீண்டும் திறப்பு

சிங்கப்பூரில் நிறுவப்பட்ட முதல் சமூக மன்றம் ஈராண்டு மறுசீரமைப்பு பணிகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தியோங் பாரு சமூக மன்றம் ஈராண்டு மறுசீரமைப்பு பணிகளுக்குப் பிறகு மீண்டும் திறப்பு

படம்: Rachel Phua

சிங்கப்பூரில் நிறுவப்பட்ட முதல் சமூக மன்றம் ஈராண்டு மறுசீரமைப்பு பணிகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தியோங் பாரு சமூக மன்றம் ஏப்ரல் 2015இல் மூடப்பட்டது. குடியிருப்பாளர்களின் தேவைகளுக்கேற்ப புதிய வசதிகளும், நடவடிக்கை திட்டங்களும் அதில் அறிமுகம் கண்டுள்ளன.

1951ஆம் ஆண்டு தியோங் பாரு சமூக மன்றம் கட்டப்பட்டது. இது குடியிருப்பாளர்கள் கூடும் இடம் மட்டுமல்ல.

படம்: Rachel Phua

புதிய நட்புகள் அரும்பி, சமூகப் பிணைப்பை ஏற்படுத்திய இடமும்கூட. நாடளவில் நடைபெற்ற சம்பவங்களின் பிரதிபலிப்பாக இந்தச் சமூக மன்றம் அமைந்துள்ளதைப் பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் சுட்டினார்.

சிங்கப்பூரின் வெற்றிக்குச் சமூகப் பிணைப்பு மிகவும் அவசியம் என்று தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார். அதைப் பேணிக் காக்கும் முயற்சியில் அடித்தளத் தலைவர்களுடன் பல்லாண்டுகளாக அரசாங்கம் இணைந்து பணியாற்றி வருவதாய் அவர் கூறினார்.

குடியிருப்பாளர்களைச் சமூக மன்றத்திற்கு தொடர்ந்து ஈர்க்க, 5ஆவது முறையாக இங்கு மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

படம்: Rachel Phua

முதியவர்கள், உடற்குறையுள்ளோர், இளம் குடும்பங்கள் முதலியோருக்காக மேலும் பல பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

மன்றத்தின் இரு கட்டடங்களை இணைக்கும் பாலம், இரண்டாம் மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. அது முதல் மாடியின் கூரைவேய்ந்த நடைபாதையாகவும் பயன்படுகிறது.

பல பயன் கூடத்தின் உட்கூரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இனி, பூப்பந்து, சீருடற்பயிற்சி போன்ற நடவடிக்கைளிலும் இங்கு ஈடுபடலாம்.

முன்னர், குண்டு வீச்சின்போது பதுங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்ட அறை, சமையல் கலைக்கூடமாக உருமாற்றப்பட்டுள்ளது.

முன்பு, 10 பேர் மட்டுமே பங்கேற்க முடிந்த சமையல் வகுப்புகளில் இப்போது 30 பேர் கலந்துகொள்ள முடியும்.

 

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்