Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை – பாகம் 5 - அமைந்தது அரசமைப்புச் சட்ட ஆணைக்குழு

அரசமைப்புச் சட்ட ஆணைக்குழு அமைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் இவ்வாண்டு (2016) பிப்ரவரி 10ஆம் தேதி அறிவித்தது. 

வாசிப்புநேரம் -
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை – பாகம் 5 - அமைந்தது அரசமைப்புச் சட்ட ஆணைக்குழு

சிங்கப்பூர் நாடாளுமன்ற இல்லம். (படம்: Reuters)

அரசமைப்புச் சட்ட ஆணைக்குழு அமைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் இவ்வாண்டு (2016) பிப்ரவரி 10ஆம் தேதி அறிவித்தது. சுயேச்சையாகச் செயல்படும் அதிகாரம் கொண்டது அந்தக் குழு. அதன் தலைவர், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன். 8 உறுப்பினர்கள். அவர்களில் நால்வர் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள்.

• நீதிபதி டே யோங் குவாங், உச்ச நீதிமன்றம்
• திரு. எடி தியோ, தலைவர், பொதுச் சேவை ஆணையம்
• திரு. அப்துல்லா தார்முஜி, உறுப்பினர், சிறுபான்மையினருக்கான உரிமைகள் குறித்த அதிபர் மன்றம்
• பேராசிரியர் சான் ஹெங் சீ, தலைவர், புத்தாக்க நகரங்களுக்கான லீ குவான் இயூ கல்வி நிலையம், SUTD
• திரு. சுவா தியான் போ, தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி, ஹோ பீ லேண்ட்
• திரு. ஃபிலிப் இங், தலைமை நிர்வாக அதிகாரி, ஃபார் ஈஸ்ட் நிறுவனம்
• திரு. பீட்டர் சியா, தலைவர், DBS வங்கி
• திரு. வோங் ஙிட் லியோங், தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி, வென்ட்சர் நிறுவனம்

குழு, துரிதமாகப் பணிகளைத் தொடங்கியது. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை குறித்த யோசனைகளையும் கருத்துகளையும் முன்வைக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எழுத்துபூர்வமாக நூற்றுக்கும் மேற்பட்ட கருத்துகள் குவிந்தன. முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை விளக்கமாகக் கூறுவதற்கு ஏப்ரல், மே மாதங்களில் நான்கு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 20 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் குழுவினர், சிலர் தனிநபர்கள்.  மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை முன்வைத்த 19 பேரில் முன்னாள் அமைச்சர் எஸ். தனபாலன் உட்பட கல்வியாளர்கள் சிலரும் இருந்தனர். அவேர் (AWARE) போன்ற அரசாங்கம் சாரா அமைப்பினரும் தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

{திரு. எஸ். தனபாலன். படம்: CNA}

20 ஆண்டுகளில் 4 ஆண்டு காலத்துக்காவது, சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராக வருவது உறுதிசெய்யப்படவேண்டும் என்றார் திரு. தனபாலன். மற்ற சிலரும் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்தனர். அவர்களில் ஒருவர் சட்டப் பேராசிரியர் கெவின் டான். அதிபரைத் தேர்ந்தெடுக்கும் முறை 1991ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றார் அவர். அதாவது, நாடாளுமன்றமே அதிபரை நியமிக்கும் முறைக்கு.

யுரேஷியச் சங்கம் இன்னொரு பரிந்துரையை முன்வைத்தது. 2 அல்லது 3 பேர் கொண்ட குழுவாகத் தேர்தலில் களம் இறங்கவேண்டும். வெற்றிபெற்ற குழுவை வழிநடத்திச் செல்பவர், அதிபராகலாம். மற்றவர்கள் அதிபர் ஆலோசகர் மன்றத்தின் உறுப்பினர்களாகலாம் என்பது அதன் யோசனை.
அதிபர் பொறுப்பிலும் அதிபர் ஆலோசகர் மன்றத்திலும் இதுவரை எந்தப் பெண்மணியும் இல்லையே என்பது அவேர் அமைப்பின் குறை.

உயர்பதவிகளில் மகளிர் பலர் இருந்தும் இத்தகைய பொறுப்புகளுக்கு அவர்கள் பரிசீலிக்கப்படவில்லையே என்பது அதன் வருத்தம். பெண்களையும் உள்ளடக்கிய விதத்தில் தகுதி அடிப்படைகளில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பது அதன் எதிர்பார்ப்பு.

கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஆய்வாளர்கள் டாக்டர் ஜிலியன் கோவும் டான் மின் வெயும் வேட்பாளருக்கான தகுதி என்பது இனத்தைச் சார்ந்து இருக்கக்கூடாது என்று வாதிட்டனர். மாறாக அது திறனை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்றனர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையைச் சேர்ந்த மூன்று மாணவர்களின் கருத்து வேறுபட்டிருந்தது. தகுதி அடிப்படைகள் தளர்த்தப்பட வேண்டும்; தற்போதுள்ள முறைப்படி, தகுதிபெறும் வேட்பாளர்கள் சிங்கப்பூர்ச் சமுதாயத்தைப் பிரதிநிதிக்கும் வகையில் இல்லை என்பது அவர்களின் எண்ணம். ஆனால் வழக்குரைஞர் திரு. ரன்வீர் குமார் சிங்கின் கருத்து அதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. அவர் தகுதி அடிப்படைகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றார். நிறுவனங்களின் செலுத்தப்பட்ட மூலதனம் 100 மில்லியன் வெள்ளி என்பதிலிருந்து 500 மில்லியன் வெள்ளிக்கு உயர்த்தப்பட வேண்டும் என்பது அவரின் கருத்து. காரணம், 1990இல் 41 பில்லியன் வெள்ளியாக இருந்த மத்திய சேம நிதி இருப்பு, 25 ஆண்டில் 275 பில்லியன் வெள்ளிக்குக் கூடியதை அவர் சுட்டினார்.

எதிர்த்தரப்பு பாட்டாளிக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அக்கட்சி அதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க விரும்புவதாக அது கூறிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறையை அகற்ற வேண்டும் என்பது அதன் நிலைப்பாடு. காரணம் அந்த முறை, நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கீழறுப்பதாக அது குறைபட்டுக்கொண்டது. தற்போதுள்ள தகுதி அடிப்படைகளைப் பூர்த்திசெய்வதில் பெரும்பாலோர் மக்கள் செயல் கட்சி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரிகளே என்று பாட்டாளிக் கட்சி கூறியது.

முன்வைக்கப்பட்ட கருத்துகள் திரட்டப்பட்டன. பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டன. எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தது அரசமைப்புச் சட்ட ஆணைக்குழு. மறுஆய்வை நிறைவுசெய்தது. பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை செப்டம்பர் 7ஆம் தேதி அனைவரின் பார்வைக்கும் வந்தது. அரசாங்கம் அதன் வெள்ளை அறிக்கையை அதே மாதம் 15ஆம் தேதி வெளியிட்டது.
சரி அரசமைப்புச் சட்ட ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகள் யாவை? அவற்றில் எவற்றை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது?

அந்த விவரங்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்