Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திரு லீயின் அரசு பூர்வ இறுதிச்சடங்கு நாளை இடம்பெறும்

திரு லீ குவான் இயூவின் நாளைய அரசு பூர்வ இறுதிச்சடங்கு, இதுவரை யாருக்கும் கிடைத்திராத ஆக உயரிய மரியாதையோடு நடைபெறும் என்று தற்காப்பு அமைச்சர டாக்டர் இங் எங் ஹென் (Ng Eng Hen) தெரிவித்துள்ளார். மதியம் பன்னிரண்டரை மணிக்கு ஊர்வலம் தொடங்கும்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்:திரு லீ குவான் இயூவின் நாளைய அரசு பூர்வ இறுதிச்சடங்கு, இதுவரை யாருக்கும் கிடைத்திராத ஆக உயரிய மரியாதையோடு நடைபெறும் என்று தற்காப்பு அமைச்சர டாக்டர் இங் எங் ஹென் (Ng Eng Hen) தெரிவித்துள்ளார். மதியம் பன்னிரண்டரை மணிக்கு ஊர்வலம் தொடங்கும்.

நாடாளுமன்ற இல்லத்தில் கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டிருக்கும் திரு லீயின் நல்லுடல், நாளை இறுதி முறையாக அங்கிருந்து புறப்படவுள்ளது.

சுமார் 15 கிலோமீட்டர் தூரம் அவருடைய நல்லுடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும். அந்த நிகழ்வைக் காண பல்லாயிரம் பேர் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு லீயின் நீண்டகால அரசியல் வாழ்க்கையைக் குறிக்க, இறுதி ஊர்வலம், பழைய நாடாளுமன்ற இல்லம் வழியாகச் செல்லும். 

பிறகு, நகர மண்டபத்தையும் பாடாங்கையும் அவருடைய பேழை கடக்கும்போது அவருக்கு 21 மரியாதைக் குண்டு முழக்கம் இடம்பெறும். திரு லீயின் மறைவைக் குறிக்கும் விதத்தில், நான்கு Black Knights விமானங்கள் சிறப்பு அமைப்பில் பறக்கும். அவற்றில் ஒன்று, வேறு திசையை நோக்கிச் செல்லும். "MISSING MAN" எனும் அந்த அமைப்பு, பெரும்பாலும் மறைந்த  பிரமுகர்களையும், ஆகாயப்படை வீரர்களையும் கௌரவிப்பதற்கானது. 

Esplanade பாலம் வழியாகப் பேழை செல்லும்போது, RSS Dauntless, RSS Resilience ஆகிய கடற்படைக் கப்பல்கள், சடங்குபூர்வ இறுதி மரியாதையைச் செலுத்தும். சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்குத் திரு. லீ ஆற்றிய அரும்பணியைப் பறைசாற்ற, அவருடைய பேழை, Fullerton ரோடு, Collyer Quay, Raffles Quay, Shenton Way, Keppel ரோடு ஆகியவற்றைக் கடந்துச் செல்லும்.

திரு லீ, Fullerton சதுக்கத்தில்தான் பலமுறை மதிய உணவுநேரக் கூட்ட உரைகளை ஆற்றினார். திரு லீயின் அரசியல் வாழ்க்கை, ஊழியர்களையும் தொழிற்சங்கத்தையும் ஒரு சட்ட ஆலோசகராகப் பிரதிநிதித்தபோது தொடங்கியதைக் குறிக்க, அவருடைய பேழை, NTUC நிலையத்தையும் தொழிற்சங்க மாளிகையையும் கடக்கும்.

சிங்கப்பூரின் ஆக உயரமான பொது வீடமைப்புப் பகுதியான Pinnacle@Duxton-, ஆகப் பழைமையான குடியிருப்புப் பேட்டைகளான புக்கிட் மேரா, Queenstown ஆகியவற்றையும் பேழை கடந்துச் செல்லும்.

சிங்கப்பூரின் பொது வீடமைப்புக் கொள்கையை வடிவமைப்பதில் திரு லீக்கு முக்கியப் பங்கு இருந்தது. அனைவருக்கும் சொந்த வீடு இருக்கவேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார்.

ஊர்வலம், லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் அலுவலகத்தையும் கடக்கும். தூய்மையான அரசாட்சியை வலியுறுத்திய திரு லீ, ஊழலை ஒழிக்கவேண்டுமென, அப்பிரிவை அமைத்தார்.

பேழை அடுத்து, பள்ளிகளையும் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியையும் கடந்துச்செல்லும்.கல்விக்குத் திரு லீ அதிக முக்கியத்துவம் வழங்கினார். திறமைக்கு முன்னுரிமை வழங்குதலையும் சிங்கப்பூரர்களின் கலாசார அடையாளத்தைப் பாதுகாக்க, இருமொழிக் கற்றலையும் அவர் ஊக்குவித்தார்.

பல்கலைக்கழகக் கலாசார நிலையத்தில் ஊர்வலம் நிறைவடையும். துக்கத்தை அனுசரிக்க, நாளை மாலை நான்கு மணியளவில், ஒரு நிமிட மௌன அஞ்சலியின் தொடக்கத்தையும் முடிவையும் குறிக்கும் வகையில்  குடிமைத் தற்காப்புப் படையின் பொது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்