Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மூத்தோர் ஆதரவுத் திட்டம்: பணம் பெறவிருக்கும் மூத்தோர்

சிங்கப்பூரிலுள்ள 140 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியோர் வரும் ஜூலை மாதம் மூத்தோர் ஆதரவுத் திட்டத்தின்கீழ் பணம் பெறவிருக்கின்றனர். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரிலுள்ள 140 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியோர் வரும் ஜூலை மாதம் மூத்தோர் ஆதரவுத் திட்டத்தின்கீழ் பணம் பெறவிருக்கின்றனர். 

அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் முதல் ஆண்டில் அரசாங்கத்திற்குக் கிட்டத்தட்ட 320 மில்லியன் வெள்ளி செலவாகும்.

சிங்கப்பூரில் தற்போது எட்டில் ஒருவர், 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவராக இருக்கிறார். 

2030ஆம் ஆண்டுக்குள் அந்த விகிதம், நான்கில் ஒருவர் என அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை எப்படி நமது வலிமையாக்கிச் சமூகத்தை வடிவமைக்க முடியுமென யோசிக்க வேண்டுமென்றார் திரு. ஹெங். 

வெற்றிகரமாக முதுமையடைவதில், சிங்கப்பூரை ஒரு முன்மாதிரி நாடாக ஆக்குவதில் ஒன்றிணைந்து நாம் பாடுபட்டாக வேண்டும். 

அதற்கு ஒரு வழி, மூத்தோர் ஆதரவுத் திட்டத்தின் மூலம் வசதி குறைந்த மூத்தோரின் ஓய்வுக்கால ஆதரவை அதிகரிப்பது. 

65ம் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களில் வருமானம் குறைந்த 20 விழுக்காட்டினரின் ஓய்வுக்கால வருமானத்தைச் சற்று உயர்த்துவது, அந்தத் திட்டத்தின் இலக்கு. 

அந்தப் பிரிவிலுள்ள 30 விழுக்காட்டினர் வரை, ஏதோ ஒரு விதத்தில் ஆதரவை நீட்டிப்பது திட்டம். 

மூத்தோர் ஆதரவுத் திட்டத்திற்குத் தகுதி பெற வேண்டுமானால், 55 வயதுக்குள், மத்திய சேமநிதியின் மொத்தப் பங்களிப்பு 70 ஆயிரம் வெள்ளிக்கு மேல் இருக்கக் கூடாது. 

அவர்கள், நான்கு அறை அல்லது அதற்கும் குறைவான அறைகள் கொண்ட வீட்டில் வசிப்பவராகவும் உரிமையாளராகவும் இருக்க வேண்டும். 

5 அறை வீட்டில் வசிக்கும் முதியோரும் தகுதி பெற வேண்டுமானால், அந்த வீடு அவருக்குச் சொந்தமான வீடாக இருக்கக் கூடாது. 

மற்ற தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். 

மேலும், 1,100 வெள்ளிக்கு மேற்படாத தனிநபர் மாதவருமானத்தைக் கொண்ட குடும்பத்தில் வசிப்பவராக அவர் இருக்க வேண்டும். 

ஓரறை, ஈரறை வீடுகளில் வசிப்போர், ஒரு காலாண்டுக்கு 750 வெள்ளி பெறுவர். 

மூவறை வீட்டில் வசிப்போர் 600 வெள்ளி பெறுவர். 

4 அறை வீட்டில் வசிப்போர் 450 வெள்ளி பெறுவர். 

5 அறை வீட்டில் வசிப்போர் 300 வெள்ளி பெறுவர். 

முதற்கட்டமாக, ஜூலை மாதக் கடைசியில் பணம் வழங்கப்படும். அது இரண்டு காலாண்டுகளுக்கான தொகையாக இருக்கும். 

அடுத்தடுத்து, ஒவ்வொரு காலாண்டுக்கும் பணம் வழங்கப்படும். தகுதியுள்ள மூத்தோருக்கு, மத்திய சேமநிதிக் கழகம் கடிதம் அனுப்பும். 

அது இயல்பாகவே நடக்கும் என்பதால், மூத்தோர் தனியாக அதற்கென விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றார் நிதியமைச்சர். 

பணம், நேரடியாக வங்கிக் கணக்கிற்குச் செல்லும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்