Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை – பாகம் 1 - சடங்குபூர்வப் பணிகளும் மரபும்

நவீன சிங்கப்பூரின் வரலாறு என்பது 1819இல் தொடங்குகிறது. அதற்கு வித்திட்டவர் சர் தாமஸ் ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ். வர்த்தகத் துறைமுகத்தை இங்கு நிறுவ பிரிட்டிஷாருக்கு ஜொகூர் அனுமதியளித்ததைத் தொடர்ந்து, அது சாத்தியமானது. 

வாசிப்புநேரம் -

நவீன சிங்கப்பூரின் வரலாறு என்பது 1819இல் தொடங்குகிறது. அதற்கு வித்திட்டவர் சர் தாமஸ் ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ். வர்த்தகத் துறைமுகத்தை இங்கு நிறுவ பிரிட்டிஷாருக்கு ஜொகூர் அனுமதியளித்ததைத் தொடர்ந்து, அது சாத்தியமானது. அதன் பிறகு 1942இலிருந்து 1945 வரை இரண்டாம் உலகப் போர். ஜப்பானின் கைக்குச் செல்கிறது சிங்கப்பூர்.

போர் முடிந்தது. காட்சி மாறியது. மீண்டும் பிரிட்டனின் வசம் சிங்கப்பூர். 1959இல் தன்னாட்சி உரிமை கிடைத்தது சிங்கப்பூருக்கு. ஆனாலும் அதிகாரமெல்லாம் உள்ளுக்குள்தான். வெளிவிவகாரங்களையும் பாதுகாப்பையும் பிடியில் வைத்திருந்தது பிரிட்டன். அப்போதுதான் சிங்கப்பூரின் முதல் தலைமகனாக நியமிக்கப்படுகிறார், சர் வில்லியம் கூட். இது நடந்தது அதே ஆண்டின் ஜூன் மாதம் 3ஆம் தேதி. ஆறு மாதம் பதவியில் இருந்தார் சர் கூட். அவ்வாண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெறுகிறது மக்கள் செயல் கட்சி. டிசம்பர் 3ஆம் தேதி சிங்கப்பூரின் தலைமகனாகிறார் திரு. யூசோஃப் இஷாக். 

1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி, மலேசியக் கூட்டரசில் சிங்கப்பூர் இணைகிறது. அதன் 14ஆவது மாநிலமாகிறது. டிசம்பர் 4ஆம் தேதி திரு. யூசோஃப் இஷாக்கை மீண்டும் அதே பதவியில் அமர்த்துகிறார் மலேசியப் பேரரசர். இது தொடர்ந்தது 1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை. மலேசியக் கூட்டரசிலிருந்து பிரிந்தது சிங்கப்பூர்.

உதயமானது சுதந்தர சிங்கப்பூர். தனி நாடு. தனி அரசமைப்புச் சட்டம். பிரதமர், அரசாங்கத்துக்குப் பொறுப்பு வகிப்பார். தலைமகன் என்பது அதிபர் என்று பெயர் மாற்றம் காண்கிறது. அதிபர் என்பவர் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவார். அவர் நாட்டின் தலைமகன். சிங்கப்பூரின் முதல் அரசதந்திரி. அதிபரின் பதவிக் காலம் ஒவ்வொரு தவணையும் 4 ஆண்டு நீடிக்கும்.

சிங்கப்பூரின் முதல் அதிபர் எனும் பெருமை திரு. யூசோஃப் இஷாக்கிற்கு. 1970ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி இதய நோய் காரணமாகக் காலமாகும்வரை அதிபராக இருந்தார் அவர். திரு. யூசோஃப் இஷாக், மலாய் நாளிதழான ‘உத்துசான் மலாயூ’வைத் தோற்றுவித்தவர். சிங்கப்பூர்ப் பொதுச் சேவைத் துறையின் தலைவராக இருந்தவர்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி மகப்பேற்று மருத்துவர் பெஞ்சமின் ஷியர்ஸ் சிங்கப்பூரின் இரண்டாவது அதிபராகிறார். மூன்றாம் தவணைக்காலத்தின்போது நோயுற்றார். 1981ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி காலமானார். அன்றுவரை அதிபராக இருந்தார் டாக்டர் பெஞ்சமின் ஷியர்ஸ்.

அதே ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி மூன்றாவது அதிபராகப் பொறுப்பை ஏற்றார் திரு. சி. வி. தேவன் நாயர். சிங்கப்பூர் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் முதல் தலைமைச் செயலாளர். 1985ஆம் ஆண்டு மார்ச் மாதம், தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகினார் திரு. தேவன் நாயர். 2005ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி திரு. தேவன் நாயர், தமது 82ஆவது வயதில் கனடாவில் காலமானார்.  

பின்னர் செப்டம்பர் மாதம் திரு. வீ கிம் வீ, நாட்டின் நான்காவது அதிபரானார். செய்தியாளர், அரசதந்திரி. 1993ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதிவரை, இரண்டு முழுத் தவணைக் காலத்துக்கு அதிபர் பதவியில் இருந்தார் திரு. வீ. அதன் பிறகுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை நடப்புக்கு வருகிறது. அதில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்து ஓய்வுபெற்றார் திரு. வீ. 2005ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி, ஆண் சுரப்பிப் புற்றுநோய் காரணமாகத் திரு. வீ காலமானார். அப்போது அவருக்கு வயது 89.

சிங்கப்பூரின் முதல் 4 அதிபர்கள் யார் யார் என்று பார்த்தால் ஒன்று புரியும். முதலாமவர் திரு. யூசோஃப் இஷாக். மலாய் இனத்தைச் சேர்ந்தவர். அடுத்தவர் டாக்டர் பெஞ்சமின் ஷியர்ஸ். யுரேஷியர். மூன்றாமவர் இந்தியரான திரு. தேவன் நாயர். நான்காமவர் திரு. வீ கிம் வீ. சீனர். அப்படிப் பார்க்கையில் நான்கு இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நாட்டின் உயரிய பதவி கிடைத்திருக்கிறது.

திரு. வீ கிம் வீ பதவியிலிருந்தவரை, அதிபர் பொறுப்பு என்பது பெரும்பாலும் சடங்குபூர்வப் பணியாகவே இருந்தது. அதிபர் என்பவர் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் சிங்கப்பூரின் முகமாகத் திகழவேண்டும்; மற்ற நாடுகளுடன் சிங்கப்பூருக்குள்ள உறவை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும். தேசிய தின அணிவகுப்பில் முதல் மரியாதை அதிபருக்குத்தான்.

அமைச்சரவையின் ஆலோசனையுடன் தேசிய தின விருதுகளை வழங்குவதும் அவரே. பிரதமர், அமைச்சர்கள், தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரின் பதவியேற்புச் சடங்குகளும் அதிபரின் தலைமையிலேயே நடைபெறும்.

சரி. இப்படி சடங்குபூர்வப் பணிகளில் மட்டும் ஈடுபட்டுவந்த அதிபர், நாட்டின் நிதி இருப்புகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற மாற்றம் ஏன் வந்தது?
அது பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்…

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்