Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை – பாகம் 3 - ஒரு கோட்டைக்கு ஒரு ராஜா

“நான் பதவிக்கு வந்தால், குடியிருப்பு வசதிகளை மேம்படுத்துவேன்; கூடுதல் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருவேன்; முதியோருக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவேன்”

வாசிப்புநேரம் -

“நான் பதவிக்கு வந்தால், குடியிருப்பு வசதிகளை மேம்படுத்துவேன்; கூடுதல் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருவேன்; முதியோருக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவேன்”

இப்படியெல்லாம் வாக்குறுதிகளை ஒருவர் அளிக்கமுடியுமா? முடியும், அது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தால். அதிபர் தேர்தலில் அத்தகைய வாக்குறுதிகளைக் கொடுப்பது சரியல்ல. அவ்வாறு செய்வது மக்களைத் திசை திருப்புவதற்குச் சமம். காரணம் கொள்கைகளை வகுக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை. பெரும்பாலான நாடுகளில் தவறான தகவல்களைத் தரும் வேட்பாளர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் வேட்பாளர்கள் அரசியல் பிரசாரத்தில் பொய்த் தகவல் கொடுத்தால் சிக்கல்தான். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏறக்குறைய 21,000 டாலர் அபராதமோ அதிகபட்சம் ஈராண்டுச் சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

1999ஆம் ஆண்டு திரு. லீ குவான் இயூ பேட்டி ஒன்றில் குறிப்பிட்டதை இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். ஒரு நாட்டுக்கு இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது. அது ஆதரவாக இருக்காது. குழப்பத்துக்கு இட்டுச் செல்லும் என்று திரு. லீ திட்டவட்டமாகக் கூறியிருந்தார். அதாவது ஒரு கோட்டைக்கு ஒரு ராஜாதான், ஓர் உறையில் ஒரு கத்திதான் இருக்கமுடியும். 

அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக அதிபர் பேசினாலோ செயல்பட்டாலோ நிச்சயம் பிரச்சினைதான். அவ்வாறு அதிபர் செய்ய நினைத்தால், அதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும். மற்றொன்று காலப்போக்கில் அவர் தமது கருத்துகளை அரசாங்கம் உட்பட பெரும்பான்மையினரை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என்றார் காலஞ்சென்ற திரு. லீ. 

ஏற்கெனவே திரு. ஓங் டெங் சியோங் அதிபராக இருந்தபோது, அரசாங்கத்துடன் உரசல் உண்டானது. அதிபர், நாட்டின் இருப்புக்குக் காவலர் என்கிறது சட்டம். எனவே அது குறித்த தகவல்களைத் தரும்படி கேட்டார் திரு. ஓங். அரசாங்கம் மூன்றாண்டில் அவற்றைக் கொடுத்தது. அசையாச் சொத்துகளின் விவரங்கள் வேண்டும் என்றார். அதனைச் செய்வதற்கு ஓர் அதிகாரிக்கு 56 ஆண்டு பிடிக்கும் என்றது அரசாங்கம். இறுதியில் அசையாச் சொத்துகளின் பட்டியலைத் தந்தது. சிக்கல் இருந்தாலும் எல்லாம் சுமுகமாக முடிந்தன. 

1999 ஆகஸ்ட் 30. திரு. ஓங்கிற்கு அப்போதைய பிரதமர் கோ சோக் தோங் பிரியாவிடை விருந்தளித்தார். பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்பதைத் திரு. ஓங்கின் உரை தெளிவாகப் புலப்படுத்தியது. அரசாங்கத்தை மனமுவந்து பாராட்டினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராகப் பொறுப்பேற்றது அனைவருக்கும் நல்ல அனுபவம் எனச் சொன்னார். மோசமான அரசாங்கத்தைச் சரிபார்க்கும் நல்ல அதிபரைக் காட்டிலும் நல்ல அரசாங்கம் ஆட்சியில் இருப்பது சிறந்தது என்றார். ஊழலற்ற, ஆற்றல்மிகு அரசாங்கம் கிடைத்திருப்பது சிங்கப்பூரர்களின் நல்லூழ் என்றுகூறி விடைபெற்றார் திரு. ஓங். 

அதன் பிறகு, 2009இல் உலக அளவில் பொருளியல் நெருக்கடி ஏற்பட்டது. திரு. S R நாதன் அதிபர் பொறுப்பிலிருந்தார். செலவினத்தைச் சமாளிக்க அரசாங்கம் 4.9 பில்லியன் வெள்ளியைக் கையிருப்பிலிருந்து எடுக்கவேண்டும் என்று கோரி அவரின் ஒப்புதலை நாடியது. ஊழியர்களின் வேலைகளைப் பாதுகாப்பதும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்குக் கடனுதவி அளிப்பதும் அதன் நோக்கம். ஆழ்ந்து ஆலோசித்த பிறகு, அதிபர் அதனை ஏற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு இதுவரை அத்தகைய நிலை வரவில்லை. 

சரி. 2011 அதிபர் தேர்தலில் தெரிந்துகொண்டது என்ன? வெற்றியாளர் யார் என்பதற்கு டாக்டர் டோனி டான் என்ற பதில் கிடைத்தது. ஆனால், அந்தத் தேர்தல் பல கேள்விகளையும் எழுப்பியது. அதிபர் என்பவரின் அதிகாரம் என்ன? அவர் மேம்பாட்டுத் திட்டங்களை முன்வைக்கலாமா? அவர்களின் பணிகள் என்னென்ன? அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து வெளிப்படையாகக் கருத்துரைக்கலாமா? மாற்று யோசனைகளைக் கூறலாமா? இப்படிப் பல கேள்விகள்.

இவற்றைப் பற்றியெல்லாம் பிரதமர் லீ சியென் லூங் நிச்சயம் சிந்தித்திருக்க வேண்டும். அதன் எதிரொலிதான் இவ்வாண்டு (2016) ஜனவரி மாதம் 27ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை.

அதிபரின் பணிகள் பற்றிப் பலருக்கும் தெரியவில்லை. ஆச்சரியம் என்னவென்றால் வேட்பாளர்கள் சிலருக்கே அவற்றைப் பற்றிய சரியான புரிதல் இல்லை. மாற்று அரசாங்கத்தை அமைக்கப்போவது போன்று சிலர் பிரசாரம் செய்ததைத் திரு. லீ சுட்டினார். ஒரு வானில் இரு சூரியன்கள் இருக்கமுடியாது என்றார் அவர். 

ஓரிரு நாடுகளில் ஒரே நேரத்தில் இரண்டு ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள். அது பிரச்சினையில்தான் முடிந்துள்ளது. அதிபர் என்பவர் அரசாங்கமும் அல்ல எதிர்க்கட்சியும் அல்ல. மாறாக அவர் ஒரு பாதுகாவலர், கோல்காவலர் என்றார் திரு. லீ.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை நடப்புக்கு வந்து, 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. நிறைய மாற்றங்கள். பொருளியல், வளர்ச்சி கண்டுள்ளது. அரசாங்கத்தின் செலவினம் உயர்ந்துள்ளது. நிதி இருப்பு கூடியுள்ளது. அரசாங்க அமைப்புகள் பெரிதாகியுள்ளன.

பிரச்சினைகளுக்கும் குறைவில்லை. எனவே இதுதான் சரியான தருணம். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறையை வலுப்படுத்துவதற்கு. அப்போதுதான் அதிபர் அவருடைய பணிகளையும் பொறுப்புகளையும் சரிவர நிறைவேற்ற முடியும் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கை.

நாட்டின் அரசியல் அமைப்புகளும் ஆட்சிமுறையும் எதிர்காலத் தலைமுறையினருக்குத் தொடர்ந்து சிறந்த வகையில் செயலாற்றுவதை உறுதிசெய்வது தமது கடமை என்கிறார் திரு. லீ. 

அதிபர் என்பவர் தமது பணிகளைத் தனியொருவராகச் செய்ய முடியாது. அவருக்கு உதவிகள் தேவை. அதிகாரங்களைச் செயற்படுத்துவதில் ஆலோசனைகள் தேவை. அவற்றைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுதுதான் அதிபர் ஆலோசகர் மன்றம். அந்த மன்றத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? அது என்ன செய்கிறது? தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறையில் முன்வைக்கப்பட்ட மாற்றங்கள் என்னென்ன? 

இவற்றைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

 



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்