Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

லிட்டில் இந்தியாவில் மீண்டும் கலவரம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

லிட்டில் இந்தியாவில் மீண்டும் கலவரம் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்று உள்துறை மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ  உறுதிப்படுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: லிட்டில் இந்தியாவில் மீண்டும் கலவரம் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்று உள்துறை மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ உறுதிப்படுத்தியுள்ளார். வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பாதுகாப்பு, ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் கூறினார்.

மத்திய சிங்கப்பூர் நகர மன்ற மேயர் டெனிஸ் புவாவின் (Denise Phua) கேள்விகளுக்குத் திரு லீ பதிலளித்தார். லிட்டில் இந்தியா, Golden Mile கடைத் தொகுதி போன்ற வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் நிர்வாக முறைகளை உள்துறை அமைச்சு தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகத் திரு லீ சொன்னார்.

2013-ஆம் ஆண்டு லிட்டில் இந்தியாவில் நடந்த கலவரத்தில் சுமார் 300 வெளிநாட்டு ஊழியர்கள் ஈடுபட்டனர். சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு நடந்த இரண்டாவது கலவரம் அது. அதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான சுற்றுக்காவல் நடவடிக்கைகளைப் போலீஸார் அதிகரித்தனர். இரவு நேரங்களில் லிட்டில் இந்தியா, கேலாங் உட்பட அனைத்து இடங்களிலும் மதுபான விற்பனை கட்டுப்படுத்தப்பட்டது. பொது இடங்களில் மதுபானம் அருந்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது.கேலாங்கிலும் லிட்டில் இந்தியாவிலும் மது அருந்த வாரயிறுதி, பொதுவிடுமுறைகள் முழுவதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

எனினும் சமீபமாக லிட்டில் இந்தியாவுக்குச் சென்று வந்த திருவாட்டி புவா, அந்தப் பகுதிக்குப் பழையபடி கூட்டம் திரும்பியிருப்பதைக் கவனித்ததாகச் சொன்னார். அவ்வளவு பேர் ஒன்றாக ஒரே இடத்தில் கூடுவது பொது ஒழுங்கிற்குப் பங்கமாக அமையலாம் என்றார் அவர். Jalan Besar குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி புவா அது குறித்து சில பரிந்துரைகளை முன்வைத்தார். கூட்ட நெரிசலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் கையாள பல அமைப்புகளை உள்ளடக்கிய பணிக்குழு ஒன்றை நிறுவுவது அவற்றுள் ஒன்று.
வீடமைப்புப் பகுதிகளைச் சுற்றி வேலிகள் போடுவது, லிட்டில் இந்தியாவுக்கு வெளியே கூடுதல் பொழுதுபோக்கு நிலையங்களை அமைத்தல் போன்றவை குறித்தும் அவர் பேசினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்