Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பிரிமியர் லீக் உச்சக்கட்டத்தில்!

இந்த இங்கிலீஷ் பிரிமியர் லீக் பருவத்தில் திருப்பங்கள் இல்லை. அதே வேளையில் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லை.

வாசிப்புநேரம் -

இந்த இங்கிலீஷ் பிரிமியர் லீக் பருவத்தில் திருப்பங்கள் இல்லை. அதே வேளையில் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லை.

பட்டியலில் முதல் 6 இடங்களில் உள்ள அணிகள், செல்சி, டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், லிவர்ப்பூல், மென்செஸ்ட்டர் சிட்டி, மென்செஸ்ட்டர் யுனைட்டட், ஆர்சனல் ஆகியவை.

செல்சி, பருவத்தின் தொடக்கத்தில் திக்குமுக்காடியது. ஆனால் விரைவில் மீண்டுவந்து முதலிடத்தைத் தன்வசப்படுத்திக்கொண்டது. அணியின் அபார விளையாட்டுக்கான பெருமை அதன் நிர்வாகி என்டோனியோ கொன்டேயைச் சேரும்.

இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்பர்ஸ், சென்ற பருவத்தைப் போலவே இம்முறையும் சிறப்பாக ஆடிவருகிறது. செல்சிக்கும் அதற்கும் உள்ள வித்தியாசம் 7 புள்ளிகள். இரு அணிகளும் எஞ்சியிருக்கும் 7 ஆட்டங்களில் தடுமாறாமல் இருத்தல் அவசியம், குறிப்பாக ஸ்பர்ஸ். அதே வேளையில் செல்சி சற்று நழுவினாலும் அது ஸ்பர்ஸுக்குப் புத்துயிர் அளிக்கும்.

தற்போதைய நிலையை வைத்துப்பார்க்கும்போது இறுதிவரை பட்டியலின் முதல் இரு இடங்களை அந்த இரு அணிகளுமே தக்கவைத்துக்கொள்ளும் என்றே தெரிகிறது.

மூன்றாம் இடத்தில் லிவர்ப்பூல். அணி, பருவத்தின் தொடக்கத்தில் மிகச் சிறப்பாக ஆடியது. பிறகு நடுப்பகுதியில் சரிவை எதிர்கொண்டது. கடந்த சில வாரங்களாக மீண்டுவந்தாலும் ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் இல்லை லிவர்ப்பூலிடம்.

நான்காம் இடத்தில் இருக்கும் மென்செஸ்ட்டர் சிட்டி, எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை. பருவம் தொடங்குவதற்கு முன் அணியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார் பெப் குவார்டியோலா. அவரின் நிர்வாகத்தில் அணி லீகையே கலங்கவைக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால் இப்போது இரண்டாம் இடத்திற்குக்கூட அதனால் செல்லமுடியுமா என்ற நிலை!

ஐந்தாம் இடத்தில் மென்செஸ்ட்டர் யுனைட்டட். அதன் ஆட்டமும் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கவில்லை. எனினும் சிட்டியுடன் ஒப்பிடுகையில் பரவாயில்லை. பருவத்தின் தொடக்கத்தில் இருந்ததற்கு யுனைட்டட் இப்போது ஓரளவு நன்றாக ஆடிவருகிறது என்றாலும் அணியிடம் உத்வேகம் இல்லை. 

உலகின் ஆக விலை உயர்ந்த காற்பந்து வீரரான பால் பொல் பொக்பா இதுவரை தந்துள்ளது ஏமாற்றத்தையே.

இருந்தாலும் பருவத்தின் இறுதியில் யுனைட்டட் மூன்றாம் இடத்தில் முடித்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. லிவர்ப்பூல், சிட்டி, யுனைட்டட் மூன்றுக்கும் புள்ளிகள் வித்தியாசம் அவ்வளவு இல்லை.

ஆறாம் இடத்தில் ஆர்சனல். அணி, மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. ஆர்சின் வெங்கரின் நிர்வாகத்தில் அணி நான்காவது இடத்திலாவது வந்துவிடும். இந்தப் பருவம் அதுவும் சந்தேகம். 

ஒரு காலத்தில் வெங்கரைக் கொண்டாடிய ரசிகர்கள் இப்போது அவரைத் திட்டித் தீர்ப்பதைப் போன்ற வீடியோக்கள் பல இணையத்தில் வெளிவருகின்றன. 

21 ஆண்டுகளாக ஆர்சனல் நிர்வாகியாக இருந்துவந்துள்ள வெங்கர் அடுத்த பருவம் அணியில் இருப்பாரா என்பது இன்னும் தெரியவில்லை.

லீகின் நடப்பு வெற்றியாளரான லெஸ்ட்டர் சிட்டி பெரிதும் சிரமப்பட்டு இப்போது மீண்டுவருகிறது. அணி தற்போது பட்டியலில் 11ஆவது இடத்தில் உள்ளது. 

எவர்ட்டன், 7ஆம் இடத்தில் உள்ளது. ரோனல்டு கூமன் நிர்வாகத்தில் சென்ற பருவத்தில் ஆடியதைக் காட்டிலும் இம்முறை நன்றாக விளையாடியுள்ளது எவர்ட்டன்.

பருவம் முடிவதற்கு முன்னர் பெரும்பாலான அணிகளுக்கு 6 அல்லது 7 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. முதல் 7 இடங்களில் இருக்கும் அணிகள் இடம்பெறும் ஆட்டங்கள் சிலவற்றில் எதிர்பாராத் திருப்பங்கள் ஏற்படக்கூடும் என்ற உணர்வு தொடர்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்