Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஆனைக்கும் அடி சறுக்கும்

அடுத்த ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இத்தாலி இடம்பெறாது.

வாசிப்புநேரம் -

அடுத்த ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இத்தாலி இடம்பெறாது.

4 முறை உலகக் கிண்ணத்தை வென்ற இத்தாலி, காற்பந்து வரலாற்றில் ஆக  வெற்றிகரமான அணிகளில் ஒன்று.

ஆனால் பல காலமாகவே இத்தாலியக் காற்பந்தில் இருந்த பிரச்சினைகளின் இறுதிக் கட்டம் தற்போதைய பின்னடைவு. அதாவது, இத்தாலியக் காற்பந்தில் உள்ள விரிசல்கள் தேசிய அணியை இப்போது முழு வீச்சில் தாக்கியிருக்கக்கூடும்.

தொண்ணூறுகளில் இத்தாலியின் சரீ A உலகின் ஆகச் சிறந்த காற்பந்து லீகாகக் கருதப்பட்டது. காற்பந்து விமர்சகர்கள், ரசிகர்கள் இரு தரப்பினரும் இங்கிலாந்து, ஸ்பானிய, ஜெர்மானிய அணிகள் இத்தாலிய அணிகளைப் போல் விளையாடவேண்டும் என்று சொல்வார்கள். பல நட்சத்திர விளையாட்டாளர்களுக்கு சரீ Aவில் விளையாடுவது கனவாக இருக்கும்.

தற்போது இத்தாலியக் காற்பந்தின் நிலை? உலகின் ஆகச் சிறந்த 4 காற்பந்து லீகுகளில் ஒன்றாக இன்னமும் இருக்கிறது சரீ A. ஆனால் இங்கிலீஷ் பிரிமியர் லீக், ஸ்பானிய லீக், ஜெர்மானிய பண்டஸ்லீகாவிற்கு அடுத்தபடியாகவே அது உள்ளது. இடையில் 2, 3 முறை லீக் மிகப் பெரிய அளவிலான ஊழல் சர்ச்சையில் சிக்கியது (இது இத்தாலியக் காற்பந்தில் அடிக்கடி நடக்கும் ஒன்று). இன்று பல நட்சத்திரங்கள் இங்கிலாந்து அல்லது ஸ்பெயினில் விளையாடுவதைத்தான் அதிகம் விரும்புகின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால் கடந்த சுமார் 12 ஆண்டுகளாகவே சரீ A களையிழந்துவிட்டது.  

தேசிய அணி உட்பட இத்தாலியக் காற்பந்தில் ஏதோ ஒன்று குறைவது போன்ற  உணர்வு இருந்துவந்துள்ளது.

"நாம் காற்பந்துக்குப் பெயர் போனவர்கள். கண்டிப்பாக பிழைத்துக்கொள்வோம்," என்ற அலட்சியப் போக்கு இத்தாலியக் காற்பந்து  முழுவதையும் ஆட்கொண்டிருந்தது.

1998 உலகக் கிண்ணப் போட்டியில் அவமானத்தைச் சந்தித்தது ஜெர்மனி. அணிக்குப் புத்துயிர் தேவைப்பட்டது, நாட்டின் காற்பந்து உள்கட்டமைப்பையே மாற்றியமைக்கவேண்டும் என்ற நிலை எழுந்தது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சென்ற உலகக் கிண்ணத்தை வென்று தன்னை மீண்டும் உச்சிக்குக் கொண்டு சென்றது ஜெர்மனி.

ஜெர்மனியைப் போல் அடுத்த தலைமுறை விளையாட்டாளர்களை இப்போதிருந்தே அடையாளம் கண்டு, அவர்களைத் தயார்படுத்தி, சரீ Aவின் தரத்தை மேம்படுத்தி இத்தாலியக் காற்பந்தின் விரிசல்களைச் சரிசெய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது இத்தாலி.

அமைப்பில் விரிசல்கள் இருந்தால் அவை நாளடைவில் தெரியவரும், வெற்றி கிட்டாமல் போகும் அல்லது சம்பாதித்த நற்பெயர் ஒரு நொடியில் மறைந்துவிடும்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்