Images
  • Holland
    படம்: Reuters

காற்பந்து - நெதர்லந்துக்கு அடி மேல் அடி

ஐரோப்பியக் கண்டத்துக்கான உலகக் கிண்ண A பிரிவுத் தகுதி ஆட்டத்தில் பிரான்ஸ் நெதர்லந்தை 4-0 என வென்றது. நெதர்லந்து அடுத்த ஆண்டுப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகின்றன.


பிரிவில் முதலிடத்தை வகித்து சீறிக்கொண்டிருக்கும் பிரான்ஸ் அடுத்து ஞாயிற்றுக்கிழமையன்று  லக்செம்பர்க்கைச் சந்திக்கும். நெதர்லந்துக்குத் திங்கட்கிழமையன்று பல்கேரியாவை வென்றே தீரவேண்டும் என்ற நிலை!

B பிரிவில் போர்ச்சுகல் ஃபாரோ தீவுகளை 5-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. பிரிவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது போர்ச்சுகல். முதலிடத்தில் உள்ளது அண்டோராவை 3-0 என வென்ற சுவிட்ஸர்லந்து.

அடுத்து ஞாயிற்றுக்கிழமையன்று சுவிட்ஸர்லந்து லாட்வியாவைச் சந்திக்கிறது, திங்கட்கிழமையன்று ஹங்கேரியைச் சந்திக்கிறது போர்ச்சுகல்.

B பிரிவில் சுவிட்ஸர்லந்து, போர்ச்சுகல் இரண்டுக்கும்தான் உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறும் வாய்ப்புகள் அதிகம்.

H பிரிவில் பெல்ஜியம் ஜிப்ரால்ட்டாவை 9-0 எனச் சுக்குநூறாக்கியது! உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறுவது கிட்டத்தட்ட உறுதி என்ற வைராக்கியத்துடன் ஆடிவரும் பெல்ஜியம் பிரிவின் முதலிடத்தில்.

 

 ஞாயிற்றுக்கிழமையன்று அதுவும் இரண்டாம் இடத்தில் இருக்கும் கிரீசும் மோதுகின்றன!

C பிரிவில் சிங்கப்பூர் நேரப்படி இன்று பின்னிரவு இரண்டேமுக்கால் மணிக்குச் செக் குடியரசும் ஜெர்மனியும் மோதுகின்றன. உலகக் கிண்ணத்திற்குச் செல்லும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள பிரிவில் முதலிடத்தில் இருக்கும் ஜெர்மனியைச் செக் குடியரசு வெல்வது அவசியம்.

இந்த இரு அணிகளும் மோதும்போது பொதுவாக ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

 

 அதே நேரத்தில் F பிரிவில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து மால்ட்டாவைச் சந்திக்கிறது.

E பிரிவில் முதலிடத்தில் இருக்கும் போலந்து டென்மார்க்குடன் பொருதுகிறது. 2006 போட்டிக்குப் பிறகு முதன்முறையாக உலகக் கிண்ணத்திற்குச் செல்லக்கூடும் நிலையில் உள்ளது போலந்து.

நாளை பின்னிரவு இரண்டேமுக்கால் மணிக்கு G பிரிவில் இத்தாலி, ஸ்பெயின்! 2010 உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு ஸ்பெயின் மீது எதிர்பார்ப்பு அதிகம். எந்த நேரத்திலும் எந்த அணியையும் உதறித் தள்ளக்கூடிய ஆற்றல் இத்தாலியின் பலம்!

 

பிரிவில் இரு அணிகளுக்கும் ஒரே அளவு புள்ளிகள்.

திங்கட்கிழமை பின்னிரவு இரண்டேமுக்கால் மணிக்கு C பிரிவில் ஜெர்மனி நார்வேயைச் சந்திக்கிறது, F பிரிவில் இங்கிலாந்து ஸ்லோவாக்கியாவைச் சந்திக்கிறது. E பிரிவில் போலந்து கஸக்ஸ்தானுடன் மோதுகிறது. செவ்வாய்க்கிழமை பின்னிரவு இரண்டேமுக்கால் மணிக்கு G பிரிவில் இத்தாலி இஸ்ரேலைச் சந்திக்கிறது, ஸ்பெயினும் லியெக்டன்ஸ்டைனும் பொருதுகின்றன.

இதர பிரிவுகளில் செர்பியா, குரோஷியா, ஐஸ்லந்து போன்ற அணிகள் சிறப்பாக ஆடிவருகின்றன.

தகுதி ஆட்டங்களின் கடைசிக் கட்டமான இப்போது பல திருப்பங்கள் ஏற்படலாம், இதுவரை சரியாக விளையாடாத அணிகள் திடீரென மீண்டுவரலாம்! போர்ச்சுகல், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய அணிகள் அந்தச் சாகசத்தை முன்பு செய்திருக்கின்றன.

உங்கள் கருத்து

Top