Images

இந்திய சமூதாயத்தின் பற்பல தரப்பினர்களை ஒன்றுசேர்க்கும் கலாசார விழா

சிங்கப்பூர் சமுதாயத்தின் அடித்தளமாக விளங்கும் இன நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் திரு. இங் சீ மெங் கூறியுள்ளார்.

சமூக அடையாளத்துக்கு மேலாக சிங்கப்பூரர் எனும் ஒருமித்த அடையாளத்தை அடுத்த தலைமுறையிடமும் பதியச்செய்யவேண்டும் என்றார் அவர்.

லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம் இன்று ஏற்பாடு செய்த கலாசார விழாவைத் தொடங்கிவைத்துத் திரு இங் பேசினார்.

கலாசார விழாவை முன்னிட்டுப் பல நிகழ்ச்சிகளுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினரான திரு. இங் சீ மெங்கிற்கு இந்தியப் பாரம்பரிய வாத்தியக் கருவிகளின் இசையோடு வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்திய மரபுடைமை நிலையத்தில் அமைந்திருக்கும் இந்தியக் கலாசாரக் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

கண்காட்சி இன்று தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை நடைபெறும்.

பின்னர் இந்திய கலாசார விழா தொடங்கிவைக்கப்பட்டது.

இவ்வாண்டு விழாவின் கருப்பொருள் 'திருமணம்'.

இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த வெவ்வேறு பிரிவினரின் பாரம்பரியத் திருமணங்கள் பற்றி நன்கு புரிந்துகொள்ள இந்த விழா ஒரு தளமாக அமைகிறது.

இவ்வாண்டின் கலாசார விழா உள்ளூர்வாசிகளோடு சுற்றுப்பயணிகளையும் வெகுவாகக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

உங்கள் கருத்து

Top