Images
  • 110917 myan indo
    (படம் : AFP/ Juni Kriswanto)

ரொஹிஞ்சா பிரச்சினையில் சமரசம் பேச முன்வந்துள்ள இந்தோனேசியா

மியன்மாரில் அதிகரித்து வரும் ரொஹிஞ்சா பிரச்சினையைத் தீர்க்க, இந்தோனேசியா உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது.

இஸ்லாமிய நாடுகளுக்கும் மியன்மாருக்கும் இடையில் சமரசப் பேச்சு நடத்த இந்தோனேசியா தயாராய் இருப்பதாக, இந்தோனேசியத் துணை அதிபர் யூசோஃப் கல்லா கூறினார்.

மியன்மாரில் வசிக்கும் சிறுபான்மை ரொஹிஞ்சா முஸ்லிம்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

ரக்கைன் மாநிலத்தில் தொடரும் வன்முறையில் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன் காரணமாக உலக நாடுகள் மியன்மாருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பும் மியன்மாருக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது.

மியன்மாரில் அனைத்துலகக் கண்காணிப்பு அமைப்புகள் அனுமதிக்கப்படவேண்டும் என்று 57 உறுப்பு நாடுளைக் கொண்ட கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது.

இந்தச் சூழலில் இந்தோனேசியா சமரசப் பேச்சில் உதவ விருப்பம் தெரிவித்துள்ளது.

மியன்மாரின் ரொஹிஞ்சா முஸ்லிம்களின் அவலநிலை குறித்து, உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

பாகிஸ்தானின் கராச்சி நகரில், சுமார் 7,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டனில், மியன்மார் தூதரகத்திற்கு வெளியே கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று முழக்கமிட்டனர்.  

உங்கள் கருத்து

Top