Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அருகிவரும் கடல் சிங்கங்களைப் பாதுகாக்கப் புதிய உத்தி

ஃபின்லந்தில் உள்ள வனவிலங்கு ஆர்வலர்கள் சீல் எனப்படும் அருகிவரும் கடல் சிங்கங்களைப் பாதுகாக்கப் புதிய உத்தியைக் கையாளுகின்றனர்.

வாசிப்புநேரம் -
அருகிவரும் கடல் சிங்கங்களைப் பாதுகாக்கப் புதிய உத்தி

(படம்: WWF)

ஃபின்லந்தில் உள்ள வனவிலங்கு ஆர்வலர்கள் சீல் எனப்படும் அருகிவரும் கடல் சிங்கங்களைப் பாதுகாக்கப் புதிய உத்தியைக் கையாளுகின்றனர்.

ஃபின்லந்தின் சைமா ஏரியில் உள்ள கடல் சிங்கங்களின் வாழ்க்கை முறையை இணையத்தில் ஒளிபரப்பி வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள உயிரினப் பிரியர்களிடம் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஐரோப்பாவின் நான்காவது ஆகப் பெரிய நன்னீர் ஏரி சைமா.

இந்த வட்டார நன்னீரில் மட்டுமே வசிக்கக் கூடிய ஐந்து வகையான கடல் சிங்கங்கள் இங்கு உண்டு.

அருகி வரும் இந்த உயிரினம் பற்றி விழிப்புணர்வூட்ட இப்போது புதிய முயற்சி.

ஏரிகளுக்கு இடையே உள்ள பாறைகளில் நேரலை ஒளிபரப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவற்றின் வழியே பாறைகளின் மேல் புரளும் கடல் சிங்கங்களைக் கண்குளிரக் காணலாம்.

வனவிலங்கு ஆர்வலர்கள் கடல் சிங்கங்களின் வாழ்க்கை முறையை கடந்த ஆண்டும் இணையத்தில் ஒளிபரப்பினர்.

குறுகிய காலத்தில் இரண்டு மில்லியன் பேர் அதைக் கண்டு களித்தனர்.

குறிப்பிட்ட ஓர் ஆண் கடல் சிங்கங்கத்துக்கு மக்களிடையே நட்சத்திர மதிப்பு.

பிரியர்கள் அதற்குச் சூட்டிய செல்லப் பெயர் "புல்லெர்வோ"(Pullervo).

சில வேளைகளில் கடல் சிங்கங்கள் மீன்பிடி வலைகளில் சிக்கி மாண்டு போவதுண்டு.

குறிப்பாக வலைகளில் சிக்கும் இளம் கடல் சிங்கங்களுக்கு ஆயுள் குறைவு.

இந்த அபாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வூட்டவும் உதவுகிறது இணைய ஒளிபரப்பு.

இனிமேல் மக்கள் கவனமாக இருப்பார்கள் என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.

உலக வெப்ப உயர்வாலும் கடல் சிங்கங்களுக்குப் பாதகம்.

அண்மைக் காலமாக, குளிர்காலத்தில் போதிய பனி உறைவதில்லை.

ஆனால் கடல் சிங்கங்கள் வளை தோண்டி இனப்பெருக்கம் செய்ய, அடர்த்தியான பனிப்படலம் தேவை.

அதை உணர்ந்த ஆர்வலர்கள் பனிப் படலத்தை உருவாக்கினர்.

சென்ற ஆண்டு அவர்கள் உருவாக்கிய பனி வளைகளின் எண்ணிக்கை 211.

அவற்றில் பிறந்த கடல் சிங்கக் குட்டிகளின் எண்ணிக்கை 40.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மேலும் 277 பனி வளைகளை உண்டாக்கினர் ஆர்வலர்கள்.

ஃபின்லந்து ஆய்வாளர்கள் அருகிவரும் கடல் சிங்கங்களைப் படம் எடுக்கும் கருவிகளைப் பொருத்தி வருகின்றனர்.

அவற்றில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு கடல் சிங்கங்களின் தனித்துவமான வாழ்வியல் முறை, அவற்றின் எண்ணிக்கை ஆகியன குறித்த தகவல்களைச் சேகரிக்க முடியும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்