Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஆஸ்திரேலியாவில் பெரிய மோசடி கும்பல் முறியடிப்பு

ஆஸ்திரேலியக் காவல்துறையினர் மிகப் பெரிய மோசடிக் கும்பலை முறியடித்துள்ளனர்.  

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியக் காவல்துறையினர் மிகப் பெரிய மோசடிக் கும்பலை முறியடித்துள்ளனர்.

அதன் தொடர்பில் விமானங்கள், துப்பாக்கிகள், ஆடம்பரக் கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வரித்துறையைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரியும், அவரது மகனும் அந்த மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வீடுகளிலும், வர்த்தக அலுவலகங்களிலும், நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 9 பேர் தடுத்து வைக்கப்பட்டனர். 

அவர்கள், அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய 120 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை ஏமாற்ற முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ரொக்கமாக 15 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர், இரண்டு விமானங்கள், 18 சொத்துகள், 24 சொகுசுக் கார்கள், துப்பாக்கிகள், மதிப்புமிக்க ஓவியங்கள், அரியவகை ஒயின்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இது ஆஸ்திரேலிய உயர்நிலை அதிகாரிகள் நிலையில் நடந்திருக்கும் மிகப்பெரிய குற்றச் செயல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

ஆஸ்திரேலிய வரித்துறை அலுவலகத்தின் துணை ஆணையாளர் மைக்கேல் க்ரான்ஸ்டன் அதிகாரத்தைத் தவறாய்ப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு, ஐந்தாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். 

அவருடைய மகன் ஆடம், இந்த மோசடியில், முக்கியமான சதித் திட்டத்தைத் தீட்டிய நபர் என நம்பப்படுகிறது.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத் தந்தையும் மகனும் இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

விசாரணைக்கு ஆளான நபர்கள் சம்பளமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார், ஆஸ்திரேலிய வரி விதிப்பு அலுவலகத்தின் தற்காலிக ஆணையர் திரு ஆண்ட்ரூ மில்ஸ்.

வருமானவரி அலுவலகத்தில் பணிபுரிவோர், ஆஸ்திரேலியர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருப்பது அவசியம். 

அதுவும் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களுக்கு நேர்மை மிகவும் முக்கியமானது என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்