Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இஸ்ரேல் உறவைத் துண்டித்தார் பாலஸ்தீனத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ்

பாலஸ்தீனத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேலுடனான உறவைத் துண்டித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
இஸ்ரேல் உறவைத் துண்டித்தார் பாலஸ்தீனத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ்

(படம்: AFP)

பாலஸ்தீனத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேலுடனான உறவைத் துண்டித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஜெருசலமில் உள்ள புனிதத் தலத்தில் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சாதனங்களை அகற்றாதவரை அந்த நிலை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புனிதத் தலத்தில் செய்யப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக அந்த வட்டாரத்தில் பெரிய அளவில் வன்முறை வெடித்துள்ளது.

இதுவரை ஆறு பேர் மாண்டு விட்டனர்.

இஸ்ரேலியக் காவல் துறையினர் இருவர் கடந்த வாரம் கொல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து புனிதத் தலத்தின் நுழைவாயிலில் பாதுகாப்புச் சோதனைக் கருவியைப் பொருத்தியுள்ளது இஸ்ரேல்.

அந்த இடத்தை யூதர்கள் மலை ஆலயமாகப் போற்றுகின்றனர்.

முஸ்லிம்களின் புனிதப் பள்ளியும் அங்கு அமைந்துள்ளது.

இந்நிலையில் இரு தரப்பிலும் பதற்றம் நீடிக்கிறது.

பாதுகாப்புச் சோதனைக் கருவியைப் பொருத்த முயன்றபோது ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களுக்கும், இஸ்ரேலியப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

கிழக்கு ஜெருசலம், மேற்குக் கரை ஆகிய நகரங்களுக்கும் வன்முறை பரவியது.

நேற்று பாலஸ்தீனர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.

100க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியிருப்பில் கத்திக் குத்துக்கு ஆளான மூவர் மாண்டனர்.

புனிதத் தலத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புச் சோதனைக் கருவியை அகற்ற வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், அது அந்த இடத்திலேயே இருக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவித்து விட்டார்.

புனிதத் தல வளாகத்துக்குள் ஆயுதங்கள் எடுத்துச் செல்லாமல் தடுப்பதற்கு பாதுகாப்புச் சோதனைக் கருவி அங்கிருப்பது அவசியம் என்று திரு. நெட்டன்யாகு கூறினார்.

புனிதத் தலத்தை முன்வைத்து இஸ்ரேலியப் படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடப்பதுண்டு.

புனிதத் தலத்தில் உள்ள "அல் அக்ஸா" முஸ்லிம்களின் மூன்றாவது புனிதப் பள்ளிவாசல்.

யூதர்களும் அதைத் தொன்மையான புனிதத் தலமாகக் கருதுகிறார்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்