Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'மியன்மாருக்கான ஆசியானின் கருத்திணக்கத்தைச் செயல்படுத்துவதில் கணிசமான முன்னேற்றம் இல்லை'

வாசிப்புநேரம் -
'மியன்மாருக்கான ஆசியானின் கருத்திணக்கத்தைச் செயல்படுத்துவதில் கணிசமான முன்னேற்றம் இல்லை'

(கோப்புப் படம்: MCI and AFP/Tang Chhin Sothy)

பிரதமர் லீ சியென் லூங் மியன்மார் குறித்த ஆசியானின் கருத்திணக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் கணிசமான முன்னேற்றம் ஏதுமில்லை எனக் கம்போடியப் பிரதமர் ஹுன் சென்னிடம் தெரிவித்துள்ளார்.

இருநாட்டுத் தலைவர்களும் காணொளி மூலம் உரையாடியபோது திரு. லீ அவ்வாறு கூறினார்.

5 அம்சங்களைக் கொண்ட அந்தக் கருத்திணக்கம் சென்ற ஆண்டு எட்டப்பட்டது.

அதைச் செயல்படுத்துவதில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும்வரை ஆசியான் சந்திப்புகளுக்கு மியன்மாரைச் சேர்ந்த அரசியல் சார்பற்ற பிரதிநிதியை அழைக்கும் முடிவை ஆசியான் மாற்றிக்கொள்ளாது என்று திரு. லீ குறிப்பிட்டதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. 

ஆசியானுக்குத் தலைமையேற்கும் நாடு, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது.

மியன்மாரில் சண்டைநிறுத்தம், மக்களுக்கு மனிதாபிமான உதவி குறித்துத் திரு. ஹுன் சென் பரிந்துரைகளைப் பகிர்ந்துகொண்டதாக அமைச்சின் அறிக்கை கூறியது.

சண்டைநிறுத்தத்தைப் பொறுத்தவரை ஆசியான் எத்தகைய பங்களிக்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார் திரு. லீ.

வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றால் சிங்கப்பூருக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மியன்மாருக்கு மனிதாபிமான உதவி அளிக்கப்பட வேண்டும் என்றும் திரு லீ கூறினார்.

திரு. ஹுன் சென்னின் பரிந்துரைகள் குறித்து ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுடனும் மூத்த அதிகாரிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஆசியானின் கருத்திணக்கத்தை முழுமையாகச் செயல்படுத்துவதில் சிங்கப்பூரின் உறுதிப்பாட்டைத் திரு. லீ வலியுறுத்தினார்.

-CNA/mi(gs)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa