ஆசியா செய்தியில் மட்டும்
அன்வார் இப்ராஹிமின் வருகை....மலேசிய அரசியலுக்கு நல்ல திருப்பம் - சிங்கப்பூரின் முன்னையப் பொதுத் தூதர்

(AFP/Mohd Rasfan)
மலேசியாவின் 10ஆவது பிரதமராகத் திரு அன்வார் இப்ராஹிம் பொறுப்பேற்றத்தில் தமக்கு மகிழ்ச்சி என்கிறார் சிங்கப்பூரின் முன்னையப் பொதுத் தூதரான கேசவபாணி.
"அன்வார் இப்ராஹிம் சிங்கப்பூருக்கு மிகவும் பழகிய முகம். அனைத்துலக அளவிலும் அவர் முக்கியத் தலைவராகத் திகழ்கின்றார்."
"சிங்கப்பூருடனான வர்த்தக உறவு மட்டும் அல்ல, ஆசியானிலும் அன்வாரின் பங்களிப்புச் சிறப்பாக இருக்கும் என நான் நம்புகிறேன்,"
"பல இன, மத உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்படக்கூடிய ஒரு தலைவராக அன்வார் இருக்கிறார். சிங்கப்பூரைப் போல மலேசியாவையும் கொண்டுவரும் ஆற்றல் அன்வாருக்கு இருக்கிறது,"
எனத் திரு.கேசவபாணி தெரிவித்தார்.

மலேசியா - சிங்கப்பூருக்கு இடையிலான கட்டமைப்புத் திட்டங்களின் முன்னெடுப்புப் பற்றி இப்போதைக்கு ஒன்றும் கூற இயலாது எனக் கூறினார் திரு.கேசவபாணி.
"அன்வார் இப்போதுதான் பதவியேற்றுள்ளார். முதலில் அமைச்சரவை அமைக்கவேண்டும். பிறகு நிதியமைச்சரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்."
"அதன் பிறகுதான் மலேசியா தொடர்பான திட்டங்களை அவர் முன்னெடுக்க முடியும். அதுவரை அவருக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்படவேண்டும். அதிக நெருக்கடி கொடுத்து அவரை அழுத்தக்கூடாது என்பது எனது கருத்து,"
என்றும் திரு.கேசவபாணி தெரிவித்தார்.

மலேசியாவில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் அதன் கொள்கைக்கு ஏற்ப சிங்கப்பூரின் நடவடிக்கைகள் அமையும். யார் அரசாங்கத்தை அமைக்கிறார்கள் என்பதைப் பார்த்து சிங்கப்பூர் வேறுபாடுகள் காட்டியதில்லை. எனவே அன்வார் அரசாங்கத்துடனான சிங்கப்பூரின் ஒத்துழைப்பும் அப்படியே இருக்கும் என அவர் சொன்னார்.
"மலேசிய அரசியலைப் பொறுத்தவரை இதுவொரு நல்ல திருப்பமாக நான் கருதுகிறேன்,"
என்றும் திரு.கேசவபாணி 'செய்தி'யிடம் கூறினார்.