Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

"மலேசியாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது"

வாசிப்புநேரம் -


மலேசியாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர் கூறியுள்ளார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்த புதிய அமைச்சரவையில் பிரதமர் பொறுப்போடு, நிதியமைச்சர் பொறுப்பையும் அவரே வகிக்கிறார். 

2 துணைப் பிரதமர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

அவர்களில் ஒருவர் அம்னோ கட்சியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi).

மற்றொருவர் GPS எனும் சரவாக் கட்சிகள் கூட்டணியின் ஃபடிலா யூசோஃப் (Fadillah Yusof). 

 

"பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய வரலாற்றில் முதல்முறையாக  வெவ்வேறு கூட்டணிகள் சேர்ந்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்படுகிறது. இரண்டு துணைப்பிரதமர்கள் நியமிக்கப்படுகின்றனர்," என்று மலேசிய அரசியல் பார்வையாளர், வழக்கறிஞர் மகேஸ்வரன் சொன்னார்.

 திரு அகமது ஸாஹிட் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினாலும் அவரை துணைப் பிரதமராக நியமிக்கவேண்டிய நிலையில் திரு அன்வார் இருப்பதாகக் கூறப்பட்டது. 

தேசிய முன்னணி, பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவதில் அவர் பெரும் பங்கை ஆற்றியதாக திரு மகேஸ்வரன் சொன்னார். 

புதிய அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் உள்ளனர். 

முன்னைய பிரதமர்கள் அறிவித்திருந்த அமைச்சர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அது குறைவே.

திரு இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் (Ismail Sabri Yaakob) அமைச்சரவையில் 31 அமைச்சர்களும் 38 துணை அமைச்சர்களும் இருந்தனர்.

திரு முஹிதின் யாசினின் (Muhyiddin Yassin) அமைச்சரவையில் 32 அமைச்சர்களும் 38 துணை அமைச்சர்களும் இருந்தனர்.

புதிய அமைச்சரவை மீது மக்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளதாகத் திரு மகேஸ்வரன் கூறினார்.

"28 அமைச்சர்களில் அனுபவம் மிக்கவர்களும் புதிதாக வந்தவர்களும் உள்ளனர். அனைவரும் சிறந்த முறையில் தங்களது கடமைகளை ஆற்றுவர் என்ற பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக நாட்டின் பொருளியலை மேம்படுத்தும் வகையில் அவர்கள் செயல்படுவார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்," என்று அவர் சொன்னார். 

மலேசியாவின் புதிய அமைச்சரவை இன்று (3 டிசம்பர்) பிற்பகல் மூன்று மணிக்கு மாமன்னர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்