பங்களாதேஷில் வெள்ள நிலவரம் தணியும் வேளையில் நீரால் பரவும் நோய் குறித்து அச்சம் எழுந்துள்ளது

(கோப்புப் படம்: AFP)
பங்களாதேஷில் வெள்ள நிலவரம் தணியும் வேளையில் அங்கு நீரால் பரவும் நோய் தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது.
தூய்மையான குடிநீர் இல்லாமல் சுமார் 4 மில்லியன் பேர் துன்புறுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறிற்று.
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் நாலாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நீரால் பரவும் நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.
வயிற்றுப் போக்கு, காய்ச்சல், தோல் அழற்சி ஆகியவற்றால் மக்கள் அவதியுறுகின்றனர்.
மக்களுக்குக் குடிநீர் கிடைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பங்களாதேஷ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்குக் குடிநீர் உள்பட ஏனைய பொருள்களைக் கொண்டுசேர்க்க, ஈராயிரத்துக்கும் மேற்பட்ட மீட்புப்படைக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
உலகின் பருவநிலை மாற்றத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகிய நாடுகளில் ஒன்று பங்களாதேஷ்.
குறிப்பாக அங்குள்ள ஏழைஎளியோர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ் மக்களை இன்னும் சிறப்பாகப் பாதுகாக்கவும் பேரழிவுகளை எதிர்கொண்டு வாழ உதவவும் நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டுமெனப் பிரதமர் ஷேக் ஹசினா கூறினார்.