COVID-19 தடுப்பூசியைக் குறைந்தது 8 முறை போட்டுக்கொண்ட 65 வயது இந்திய ஆடவர்
இந்தியாவில் ஓர் ஆடவர் சென்ற ஆண்டில் குறைந்தது 8 முறை COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாகச் சுகாதார அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
படம்: AP Images
இந்தியாவில் ஓர் ஆடவர் சென்ற ஆண்டில் குறைந்தது 8 முறை COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாகச் சுகாதார அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் 11 முறை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாக 65 வயது பிராம்தியோ மண்டல் (Brahmdeo Mandal) கூறியுள்ளார்.
வலியிலிருந்து விடுபடவும் ஆரோக்கியமாக இருக்கவும் தடுப்பூசிகள் உதவியதாக அவர் கூறினார்.
தமக்கு எவ்விதக் கடுமையான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஒரு முகாமில் தமது 12ஆவது தடுப்பூசியைப் போடச் சென்றபோது திரு மண்டல் தடுத்துநிறுத்தப்பட்டார்.
மாதேபுரா (Madhepura) மாவட்டத்தில் குடும்பத்துடன் வசிக்கும் திரு மண்டல் எப்படிப் பலமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது விசாரிக்கப்படுகிறது.
ஒரே நாளில் அரை மணிநேர இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகளை அவர் போட்டுக்கொண்டதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.
தேதி, நேரம், முகாம் போன்றவற்றின் குறிப்புகளை விளக்கமாக எழுதிவைத்திருந்த திரு மண்டல் சென்ற ஆண்டு பிப்ரவரிக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் 11 முறை தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கூறினார்.
பல்வேறு தடுப்பூசி முகாம்களில் வெவ்வேறு அடையாள அட்டைகளைப் பயன்படுத்தினார் அவர்.
இது எவ்வாறு நடந்தது என்று அதிகாரிகள் இன்னமும் அதிர்ச்சியில் உள்ளனர்.