மின்விசிறி, குளிர்சாதனம்... எதற்கும் சூடு தணியவில்லையே! - ஆசியாவின் நிலைமைக்கு என்ன காரணம்?
வெப்பம் சிங்கப்பூரையும் வாட்டுகிறது.

(படம்: unsplash)
வெப்ப அலை கடந்த சில வாரங்களாக ஆசியாவை வாட்டுகிறது.
பங்களாதேஷ், இந்தியா, சீனா, தாய்லந்து உள்ளிட்ட நாடுகளில் இதுவரை இல்லாத அளவை வெப்பம் எட்டியுள்ளது.
பங்களாதேஷில் கடந்த வாரம் 60 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை பதிவானது. இந்தியாவில் வெப்பப் பாதிப்பால் குறைந்தது 13 பேர் மாண்டனர்.
சீனாவில் செங்டு (Chengdu), நான்ஜிங்கில் (Nanjing), ஹாங்சாவ் (Hangzhou) போன்ற வட்டாரங்களில் இம்மாதம் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
'எப்போது மழை பெய்யும், சூடு தணியும்?' என்று ஆசிய மக்கள் காத்திருக்கின்றனர்.

வெப்ப அலைக்கு என்ன காரணம்?
தெற்காசியா, மத்திய ஆசியா போன்ற இடங்களில் மழைப் பருவம் தொடங்குவதற்குமுன் வெப்பநிலை வெகுவாக உயர்வது வழக்கம்.
இம்முறை ஏற்பட்டுள்ள வெப்ப அலை வழக்கத்துக்கு மாறானது என்றும் அதற்கு பருவநிலை மாற்றம் காரணம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறான வெப்பத்தால் விலங்குகளும் சிரமப்படுகின்றன.
பல்லுயிர்ச் சூழல்கள் நெருக்கடியைச் சந்திப்பதாக மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் புவியியல், பூமி,வளிமண்டல அறிவியல் பள்ளியின் ஓய்வுபெற்ற கௌரவப் பேராசிரியர் டேவிட் கேரோலி (David Karoly) CNA-இடம் சொன்னார்.

குளிரூட்டும் வசதியோ நிழலோ இல்லாதபோது மக்கள் கடுமையான வெப்பநிலையை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் முடிந்தவரை பகல் நேரத்தில் வெளியே செல்லவேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம் என்று பேராசிரியர் கேரோலி சொன்னார்.
இருப்பினும் El Niño நிகழ்வினாலும் வெப்பமயமாதலாலும் சிங்கப்பூரில் சூடான வானிலை தொடரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெப்பம் சிங்கப்பூரையும் வாட்டுகிறது.
இம்மாதம் இறுதிவரை வெப்பநிலை பெரும்பாலான நாள்களில் பகல் வேளையில் 34 டிகிரி செல்சியஸ்வரை பதிவாகலாம்.
சில நாள்களில் அது 35 டிகிரி செல்சியஸை எட்டலாம்.
வெப்பநிலை ஜூலை மாதத்தில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.