Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

'மலேசியப் பொதுத்தேர்தலில் மீண்டும் மக்கள் சுனாமி'

வாசிப்புநேரம் -
மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தலில் மீண்டும் 'மக்கள் சுனாமி' ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்கம் ஏற்பட இளைய வாக்காளர்கள் முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கூறுகின்றார், மலேசியத் தேர்தல் ஆய்வாளர் டாக்டர் ஜி.மணிமாறன்.

குறிப்பாக 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இளம் வாக்காளர்கள் அல்லது 29 வயதுக்குக்கீழ் உள்ள வாக்காளர்களின் வாக்குகள் இம்முறை தேர்தல் முடிவுகள் மாறுபட்டிருப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அவர் சொன்னார்.
படம்: மலேசியத் தேர்தல் ஆய்வாளர் டாக்டர் ஜி.மணிமாறன்

"இந்த முறை இளைய வாக்காளர்களின் தாக்கம் பல திசைகளில் சென்று தேசிய முன்னணிக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே நான் கருதுகிறேன். புதிய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வேகத்தில் பலர் பெரிக்கத்தான் நேசனலுக்கு வாக்களித்திருப்பதைக் காண முடிகிறது. புதிய கூட்டணி ஒன்று அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பதைப்
பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது,"


என்றார் அவர்.

"மற்றொரு சூழ்நிலையில், தேசிய முன்னணியின் வசமிருந்த பெர்லிஸ் மாநிலம் முதல்முறையாகக் கைநழுவி பெரிக்கத்தான் நேசனல் வசம் சென்று விட்டது. அதற்கு முக்கியக் காரணம், மாநிலத்தைச் சேர்ந்த ஷாஹிடான் காசிம். அவரை தேசிய முன்னணி அங்கு நிறுத்தவில்லை. அந்தக் கோபத்தில் அவர் பெரிக்கத்தான் நேசனல் கூட்டணி சார்பில் அங்குப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். ஆக அவருடைய செல்வாக்கு அங்கு வெளிப்பட்டிருக்கிறது,".

என்று ஜி.மணிமாறன் சொன்னார்.

அடுத்த அரசாங்கத்தை அமைக்கப் போவது யார் என்பது இன்னும் இழுபறியாகவே இருப்பதால் அடுத்த பிரதமர் யாராக இருக்கக்கூடும் என்பதை இப்போதைக்குக் கணிக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

இந்த ஆருடத்தையும் அவர் முன்வைத்தார்:

  • பெரிக்கத்தான் நேசனல் + தேசிய முன்னணி + GPS எனும் சரவாக் கட்சிகள் கூட்டணி + GRS எனும் சபா மக்கள் கூட்டணி ஆகியவை சேர்ந்த புதிய கூட்டணி உருவானால் முஹிதின் யாசின் மீண்டும் பிரதமராகலாம்.

அல்லது

  • பக்கத்தான் ஹராப்பான் + தேசிய முன்னணி + GPS எனும் சரவாக் கட்சிகள் கூட்டணி ஆகியவை சேர்ந்து புதிய கூட்டணி உருவானால் அன்வார் இப்ராஹிம் பிரதமராகலாம் என மணிமாறன் குறிப்பிட்டார்.
படம்: அரசியல் ஆய்வுத்துறை முன்னாள் பேராசிரியர் இராமநாதன் காளிமுத்து.
இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லந்து, பிரிட்டன், ஜப்பான் எனப் பல நாடுகளில் கூட்டணிகளைக் கொண்ட நாடாளுமன்றம் அமைந்துள்ளது.

அத்தகைய நாடாளுமன்றம் புதிதல்ல என்றாலும் மலேசியாவைப் பொறுத்தவரை இவ்வாறு நடப்பது இது முதல்முறை எனக் கூறுகிறார் அரசியல் ஆய்வுத்துறை முன்னாள் பேராசிரியர் இராமநாதன் காளிமுத்து.

"மலேசிய அரசாங்கம் என்பது வெஸ்மின்ஸ்டர் (Westminster) மாதிரியைப் (model) பின்பற்றியிருக்கிறது. அதாவது ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் கிடைக்காத பட்சத்தில் சில கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவார்கள். இதுவும் உலக நாடுகளில் நடக்கும் சகஜமான ஒன்றுதான். மலேசியாவிலும் தற்போது அதே சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆட்சி அமைக்கப் போவது யாரென்பதைப் பொறுத்திருந்ததுதான் பார்க்க வேன்டும்,"

என அவர் கூறினார்.

நடந்த முடிந்த மலேசியத்தேர்தலில் எந்த ஒரு கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்கள் கிடைக்காததால் எந்தக் கட்சிகளுடன் அல்லது கூட்டணிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்படும் என்பது தொடர்ந்து கவனிக்கப்பட்டுவருகிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்