Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பேரக்குழந்தையைப் பெற்றெடுக்காததற்காக மகன் மீது வழக்குத் தொடுத்த இந்தியத் தம்பதி

வாசிப்புநேரம் -

இந்தியாவின் உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தில் ஒரு தம்பதி, திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் பேரக்குழந்தையைப் பெற்றெடுக்காததற்காக தங்களின் ஒரே மகன் மீதும் அவரின் மனைவி மீதும் வழக்கு தொடுத்துள்ளனர்.

சஞ்சீவ் பிரசாத் (Sanjeev Prasad), சாதனா பிரசாத் (Sadhana Prasad) என்ற அந்தத் தம்பதி, தங்களின் மகனை வளர்ப்பதற்காகச் சேமித்து வைத்திருந்த எல்லாப் பணத்தையும் பயன்படுத்தியதாகக் கூறினர்.

ஓராண்டிற்குள் பேரக்குழந்தை பிறக்கவில்லை. எனவே சுமார் 650,000 டாலர் (906,000 வெள்ளி) மதிப்பிலான இழப்பீடு கோருகின்றனர் அந்தத் தம்பதி.

அந்த வினோதமான வழக்கு 'மனரீதியான துன்புறுத்தல்' என்னும் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டது.

2006ஆம் ஆண்டில் விமானிப் பயிற்சிக்காக தமது மகன் ஷ்ரே சாகரை (Shrey Sagar) அமெரிக்காவிற்கு அனுப்புவதற்குச் சுமார் 65,000 டாலர் (90,600 வெள்ளி) செலவிட்டதாகத் திரு பிரசாத் கூறினார்.

2007ஆம் ஆண்டில் இந்தியாவிற்குத் திரும்பினார் ஷ்ரே சாகர்.

ஆனால் அவர் வேலையை இழந்ததால் ஈராண்டுகளுக்கும் மேலாக அவரது குடும்பம் அவருக்கு நிதியாதரவு வழங்க வேண்டியிருந்ததாக Times of India செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஷ்ரே சாகர் இறுதியில் விமானியாகப் பணிபுரியத் தொடங்கினார்.

ஓய்வுபெறும் காலத்தில் பேரக்குழந்தையுடன் விளையாடலாம் என்ற நம்பிக்கையில் 2016ஆம் ஆண்டில் சுபாங்கி சின்ஹா (Subhangi Sinha) என்னும் பெண்ணைத் தமது மகனுக்கு மணமுடித்து வைத்ததாக அந்தத் தம்பதி கூறினர்.

சொகுசு ஹோட்டலில் திருமண விருந்துபசரிப்பு, 80,000 டாலர் (111,000 வெள்ளி) மதிப்பிலான சொகுசுக் கார், வெளிநாட்டில் தேனிலவு ஆகியவற்றுக்குப் பணம் கொடுத்ததாக ஷ்ரே சாகரின் பெற்றோர் கூறினர்.

ஹரித்வார் (Haridwar) நகரில் தாக்கல் செய்யப்பட்ட அந்தத் தம்பதியின் மனுவை மே 17ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : Others/BBC

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்