Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

இளையர்களின் விருப்பம் என்ன என்பதைக் கணிக்கும் தேர்தலாக ஜொகூர் தேர்தல் இருக்கும்- கவனிப்பாளர்கள்

வாசிப்புநேரம் -

ஜொகூரில் எதிர்வரும் சனிக்கிழமை 12ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கான வயது வரம்பு 18க்குக் குறைக்கப்பட்டபிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது.  

இதற்கு முன்பு வரை 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருந்தனர்.  

ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கான தேர்தல்தான் என்றபோதும், இளையர்கள் எதை விரும்புகிறார்கள், எத்தகைய தலைவர்கள் இவர்களைக் கவர்கிறார்கள் என்பதை நிர்ணயிக்கும் ஓர் அளவுகோலாக இந்தத் தேர்தல் விளங்கும் என்கிறார், அரசியல் ஆய்வாளர் திரு.கணேசன் சீரங்கம்.   

Johor Elections

இம்முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள், எந்தவோர் அரசியல் பின்புலத்தையும் கொண்டிராதவர்கள் என்பதால் பல்வேறு அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்த்து அவர்கள் வாக்களிக்கக்கூடும்.

அது வேட்பாளர்களைப் பொறுத்தும் அமையலாம். குடும்பத்தினர், நண்பர்களைப் பின்பற்றியும் அமையலாம்

எனத் திரு.கணேசன் கூறினார்.   

தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் திரு கணேசன் கூறினார்.

இம்முறை பல புதிய கட்சிகள் களமிறங்குகின்றன. இளைஞர்களுக்காகவே அமைக்கப்பட்ட MUDA கட்சி, Parti Bangsa Malaysia கட்சி போன்றவை சில.  

வெற்றி தோல்வி யாருக்கு என்பதை உறுதியாகக் கூற முடியாவிட்டாலும் சில பெரிய கட்சிகளின் கொள்கைகள் மக்களைக் கவரத் தவறிவிட்டதால், அனுபவமிக்க தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதுபோல் தோன்றுகிறது.

என்றார் அவர்.

Johor Elections

ஜொகூர் தேர்தலில் பல கட்சிகள் களமிறங்குவது வித்தியாசமான ஒன்று என்றார் இணைப் பேராசிரியரும்  அரசியல் ஆய்வாளருமான டாக்டர் சரஸ்வதி சின்னசாமி. 

சில இடங்களில் 7 முனைப்போட்டி கூட நிலவுகிறது. இதனால் இம்முறை தேர்தலில் வாக்குகள் பிரிந்துவிட வாய்ப்பிருப்பதை டாக்டர் சரஸ்வதி சுட்டினார். 

இதற்கு முன்பு வரை, கூட்டணிகளின் கீழ்தான் கட்சிகள் போட்டியிட்டு வந்தன. ஆனால் இம்முறை நிறைய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.

அவை, தங்கள் பலத்தை நிரூபிப்பதற்கும் மக்கள் செல்வாக்கைச் சோதித்துப் பார்ப்பதற்கும் இந்தத் தேர்தல் ஒரு களமாக அமையவிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இம்முறை இளம் வாக்காளர்களைக் கவரக்கூடிய வாக்குறுதிகளை வழங்கவேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. 

சிலாங்கூர், பினாங்கிற்கு அடுத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் மாநிலமாக ஜொகூர் திகழ்கிறது. 

எனவே அதிகமான வேலை வாய்ப்புகள், சம்பள உயர்வு, வெளிப்படைத் தன்மை, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, சிறந்த நிர்வாகம் போன்ற திறன் கொண்ட கட்சிக்கே இம்முறை வெற்றி வாய்ப்பு உள்ளது.

என்றார் டாக்டர் சரஸ்வதி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்