Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

'வெள்ளம் புதிதல்ல' என்று கூறும் ஜொகூர்வாசிகள்....மீட்புப்பணிக்குத் தயார்நிலையில் காவல்துறை

வாசிப்புநேரம் -

மலேசியாவில் கடுமையான மழை பெய்வதால் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 

கடந்த டிசம்பர் மாதம் மலேசியாவின் தென் கிழக்கு மாநிலங்களான திரெங்கானு, கிளந்தான், பாஹாங் ஆகியவற்றில் தொடர் மழை பெய்தது. 

தற்போது மலேசியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான ஜொகூர் வெள்ளத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

(படம்: தயாளன் சண்முகம்)

இன்று காலை 8 மணி நிலவரப்படி, 5 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 3,600 பேர் 35 துயர் துடைப்பு நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

ஜொகூர் மாநிலத்தில் கன மழை தொடர்வதால் துயர் துடைப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் அஸ்மி தெரிவித்துள்ளார். 

குறிப்பாகத் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் அதிகரிக்குமென்ற அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில் இந்தியர்கள் அதிகம் வாழும்  பகுதியான சிகாமட்டும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

(படம்: தயாளன் சண்முகம்)

குறிப்பாக லாபிஸ் பகுதியில் சாலையில் வெள்ள நீர் புகுந்திருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் கூறினார்.

"கடந்த 2 நாள்களாக இப்பகுதியில் இடைவிடாத மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இங்குள்ள மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மரங்கள் சாய்ந்துவிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது," என அவர் கூறினார்.

இன்று அந்தப் பகுதியில் அவ்வளவாக மழை இல்லை. நீர் வற்றத் தொடங்கியுள்ளது. இருப்பினும் எந்நேரத்திலும் மழை வரும் என்ற எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் இன்னமும் பீதியில்தான் இருக்கின்றனர் என்றும் அவர் பகிர்ந்துகொண்டார். 

ஆனால் இது ஒவ்வோர் ஆண்டும்  தொடரும் ஒன்று என்பதால் இங்குள்ள மக்கள் பழகிவிட்டனர். 

(படம்: தயாளன் சண்முகம்)

வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக ஏற்பாடுகளைச் செய்து தருவதற்காகக் காவல்துறை தயார்நிலையில் இருப்பதாக மூவார் காவல்துறை அதிகாரி சந்தன சாமி கூறினார்.

"காவல்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது," என்றார் அவர். 

(படம்: தயாளன் சண்முகம்)

பத்து பகாட், மெர்சிங், கோத்தா திங்கி, குளுவாங், சிகாமட் ஆகிய பகுதிகளில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதனால் பேரிடர் மேலாண்மைக் குழு, தீயணைப்பு மீட்புப் படை, காவல்துறை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மூவார், பொந்தியான், தங்காக், கூலாய் ஆகிய மாவட்டங்களிலும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்