Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

மலேசியாவில் கட்சித் தாவல் எதிர்ப்புச் சட்டம்... மக்களிடையே நம்பிக்கை

வாசிப்புநேரம் -

மலேசியாவில் கட்சித் தாவல் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது மக்களிடையே நம்பிக்கையை விதைத்துள்ளது.

மலேசியாவில் 2008ஆம் ஆண்டில் 89 எதிர்க்கட்சி நாடாளுமன்ற  உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்தக் காலத்தில் மலேசியாவில் கட்சித் தாவல் இடம்பெற்றது. 

பேராக் (Perak) மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் அவர்கள் பிரதிநிதித்த கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக மாறியதன் காரணமாக அந்த மாநிலத்தில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தது. தேசிய முன்னணிக் கூட்டணி மாநில ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டில் 62 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த தேசிய முன்னணி கூட்டணிக்குப் பதிலாக மக்கள் நம்பிக்கைக் கூட்டணியைத் தேர்ந்தெடுத்தார்கள். 

ஆனால் இந்த ஆட்சி 22 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அந்தக் காலக்கட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்கள்.

இந்த நடைமுறை மலேசிய மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்த நிலையில் தற்போது கட்சித் தாவல் எதிர்ப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறிப்பாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் தாங்கள் பிரதிநிதித்த கட்சியை விட்டு விலகி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரானாலோ சட்டமன்ற உறுப்பினரானாலோ அல்லது வேறு கட்சியில் இணைந்தாலோ உடனடியாகப் பதவி விலகவேண்டுமென இந்தச் சட்ட மசோதா குறிப்பிடுகின்றது.

இது மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் நம்பிக்கையோடு தங்களின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என அரசியல் பார்வையாளருமான பத்திரிகைத் துறையின் மூத்த ஆசிரியருமான கே. பத்பநாதன் கூறுகின்றார்.

"இது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடைசெய்யும் சட்ட மசோதாவால் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களிக்கும் சூழல் உருவாகியுள்ளது" என்றார்

"அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிப்பது வீண் செயல். வாக்களித்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் வசதிக்கேற்பக் கட்சி மாறிக் கொள்வார்கள் என்ற சிந்தனை மலேசியர்கள் மத்தியில் நிலவியது. இப்போது அந்தச் சிந்தனையில் நிச்சயம் மாற்றம் உண்டாகும்" 

என்பதையும் பத்மநாபன் சுட்டிக்காட்டினார்.

மலேசிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த முறை மட்டுமே ஒரு தீர்மானம் முழுமனதுடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

3இல் 2 பெரும்பான்மை கிடைத்தால்தான் மசோதா மேலவை விவாதத்திற்குக் கொண்டுசெல்லப்படும். ஆனால் இம்முறை எவருமே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

கட்சி மாறிய தலைவர்களும் இதனை ஆதரிக்கின்றார்கள் என சிலாங்கூர் மாநில வழக்கறிஞர் மன்றத் தலைவர் கோகில வாணி கூறினார்.

"கட்சி மாறிய உறுப்பினர்கள் தங்களின் தொகுதிகளுக்குச் செல்லும்போது மக்களின் மனநிலையை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. கட்சித் தாவலால் மக்கள் வேட்பாளர்கள்மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதை அனைவருமே அறிந்திருக்கின்றார்கள். அதனால்தான் இந்தத் தீர்மானத்திற்கு யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை."

15ஆவது பொதுத் தேர்தலின்போது கட்சித் தாவலுக்குத் தடைவிதிக்கப்படும் சூழல் உருவானால் கூட்டணி ஆட்சி அமைப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. 

கட்சிகளின் தலைமைத்துவத்தின் முடிவே இறுதியானதாக இருக்கும். பதவி கிடைக்கவில்லை என்பதற்காகக் கட்சி தாவிய சம்பவங்கள் இனி நடக்காது என்பதையும் கோகில வாணி சுட்டிக்காட்டியுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்