Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

மலேசியாவை மிரட்டும் விலைவாசி உயர்வு ...இக்கட்டான சூழ்நிலையில் மக்களும் வணிகர்களும்...

வாசிப்புநேரம் -

மலேசிய அரசாங்கம் ஜூன் முதல் தேதியிலிருந்து கோழிகளுக்கான ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது.

இருப்பினும் மலேசியாவில் கோழி விலை இன்னமும் கட்டுக்குள் வரவில்லை என்கின்றனர் வர்த்தகர்கள். 

இச்சூழ்நிலையில் கடலுணவின் விலையும் கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. 

கடந்த சில மாதங்களாகக் குறிப்பாகத் தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதியில் வானிலை கணிக்க முடியாததாக உள்ளது என்று மலேசியத் தேசிய மீனவர் சங்கத்தின் (NEKMAT) தலைவர் அப்துல் ஹமிட் பஹாரி கூறியுள்ளார். இத்துறையில் ஆள் பற்றாக்குறையும் நீடிக்கிறது என்பதை அவர் மறுக்கவில்லை.

கோழி விலை அதிகரிப்பு ஒருபுறமிருக்க, தற்போது மீன் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளதால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பதில் சொல்லவேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதாகக் கூறுகின்றார் கோலாலம்பூரில் 30 ஆண்டுகாலமாக மீன் வியாபாரம் செய்யும் ரங்கசாமி.

''மீன்களில் பலவகை உண்டு. சில மீன்கள் பாமர மக்கள் வாங்கி உண்ணும் விலையில் இருக்கும். அப்படிப்பட்ட மீன்களின் விலைகூட இப்போது கிலோவுக்கு 16 ரிங்கிட்டைத் (5 வெள்ளி) தாண்டிவிட்டது. இது மக்களுக்கு மட்டும் சிரமத்தைத் தரவில்லை. மீன்களை வாங்கி விற்பனை செய்யும் எங்களைப் போன்றவர்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது.''

சிவாமாஜூ உரிமையாளர் சிவபாலா

கடந்த ஒரு வாரமாகக் காய்கறி விலையும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் காய்கறிகளை வாங்குவதைக் குறைத்துவிட்டதாக சிவாமாஜூ கேஷ் என் கேரி கடையின் உரிமையாளர் சிவபாலா சிங்கம் கூறினார்.

''காய்கறி, கோழி, இறைச்சி வகைகளை வியாபாரம் செய்யும் உரிமையாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். போதுமான அளவு காய்கறிகள் உள்ளன. ஆனால் அதனை வாங்குவதற்கு மக்கள் தயாராக இல்லை. 

பீன்ஸ் விலை கிலோவிற்கு 6 ரிங்கிட்டாக (1.90 வெள்ளி) இருந்தது. தற்போது அதன் விலை 15 ரிங்கிட் (4.70 வெள்ளி). மக்கள் விலைவாசியைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள்'' எனச் சிவபாலா தெரிவித்தார்.

காய்கறிகளை விற்க முடியாததால் மொத்த விற்பனையாளர்கள் அதனைக் குப்பையில் கொட்டும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகச் சொன்னார் அவர். 

இச்சூழ்நிலையில் மலேசியாவில் ஆள்பலம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதுதான் தற்போதைய இக்கட்டான சூழ்நிலைக்குக் காரணமென்கிறார் மலேசிய இந்தியத் தொழிலியல் சங்கச் சம்மேளனத்தின் (மைக்கி) தலைவர் கோபாலகிருஷ்ணன்.

மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணன்

''பொருள்களின் விலைகள் அதிகரிப்பதற்கு உற்பத்தி வெகுவாகக் குறைந்திருப்பதுதான் காரணம். குறிப்பாக மலேசியர்கள் உற்பத்தித் தொழில், தூய்மையற்ற துறைகளில் வேலைசெய்ய விரும்பவில்லை. இதனால் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய சூழல் அதிகரித்துள்ளது.''

''மலேசியாவில் வாடகைக் கார் (Grab, FoodPanda) ஓட்டுவதற்கு இளைஞர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள். ஒரு தொழில்துறையில் காலை முதல் மாலை வரை பணி செய்ய அவர்களுக்கு விருப்பம் இல்லை. 

தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் தங்களுக்கு ஏற்றார்போல் வாழவும் வேண்டுமென நினைக்கின்றார்கள். இது தவறில்லை. ஆனால் இதுதான் இப்போது உருவாகியிருக்கும் மிகப்பெரிய சவால். இதனைச் சமாளிக்க அந்நியத் தொழிலாளர்களின் வருகை காலத்தின் கட்டாயம்'' என்று திரு கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்