Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிகிச்சை நிலையம் வெள்ளத்தில் மூழ்கியபோதும் மக்களுக்குச் சேவையாற்றச் சென்ற மலேசிய மருத்துவர்

மலேசியாவின் பல இடங்களில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் திண்டாடிப் போயினர். 

வாசிப்புநேரம் -

மலேசியாவின் பல இடங்களில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் திண்டாடிப் போயினர்.

பொருள் சேதத்தோடு உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளது. பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

கடந்த 18ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் தமது சிகிச்சை நிலையத்தைப் பறிகொடுத்தார் 34 வயது மருத்துவர் ஷாலினி தேவி ராமச்சந்திரன்.

ஷாலினியும் அவரது கணவரான மருத்துவர் யுவனேஸ்வர மூர்த்தியும் இணைந்து சிலாங்கூர், ஷா ஆலாமிலுள்ள ஸ்ரீமூடா (Sri Muda)வில் சொந்தமாகச் சிகிச்சை நிலையம் நடத்திவந்தனர்.

வெள்ளத்தில் அது முற்றிலுமாகச் சேதமடைந்தபோது மனமுடைந்துபோனார் ஷாலினி.

எல்லோரையும்போல், பதற்றம், எதிர்காலம் குறித்த கேள்விக்குறி என்று பரிதவித்தனர் தம்பதி. பின் தங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டனர்.

அதன்பிறகு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கத் திட்டமிட்டதாகச் சொன்னார் டாக்டர் ஷாலினி.

திரு.கார்த்திகேயன் என்பவர் தமது சொந்தச் செலவில் எங்களுக்குக் கூடாரம் அமைத்துத் தந்தார். நாடு முழுவதிலுமிருந்து எத்தனையோ பேர் மருந்து வாங்க நன்கொடை வழங்கினர்.

சமூக வலைத்தளங்கள் மூலம் நான் வெளியிட்ட காணொளியைப் பார்த்துவிட்டு ஜொகூரில் வசிக்கும் உடற்குறையுள்ள ஆடவர் ஒருவரும் மருந்துப் பொருள் வாங்க நன்கொடை வழங்கியது மனதை நெகிழவைத்தது.

தாம் கடந்துவந்த பாதை அடுத்தவரைப் பற்றி நினைக்கத் தூண்டுவதாகச் சொன்னார் அவர்.

மலேசியாவின் பல பகுதிகளிலிருந்து மருத்துவர்கள் தங்கள் முகாமிற்கு வந்து, நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவதாகச் சொன்னார் அவர்.

மருந்துப் பொருள்களை வாங்கத் தங்களுக்கு மேலும் அதிகமான நன்கொடை தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

உதவி செய்ய விரும்புவோர் தம்மை WhatsApp மூலம் 60107548078 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

மலேசியாவில் பல இடங்களில் நீர் வற்றத் தொடங்கிவிட்டது என்றபோதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன்னும் நாட்கள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

இவ்வேளையில் ஷாலினி போன்றோர் அளிக்கும் சேவை மக்களுக்குப் பேருதவியாய் அமைந்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa