ஆசியா exclusive
‘காலையில் முட்டைகள் இருக்கும்..மாலையில் தீர்ந்திருக்கும்’ - கோலாலம்பூரில் வாடிக்கையாளர்களின் அவதி
(கோப்புப் படம்: Fabrizio Bensch)
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கோழி முட்டைகளுக்குத் பெரும் தட்டுப்பாடு.
சில மாதங்களுக்கு முன் கோழிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, கோழி விலை கணிசமாக அதிகரித்தது. தற்போது முட்டைகளின் விலையும் அதிகரிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அச்சம் அடைந்துள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் காலையில் அதிக அளவில் முட்டைகளை வாங்கி சேகரித்துக் கொள்வதால் மாலையில் முட்டை கிடைப்பதில் மிகப் பெரிய சவால் நிலவுகிறது.
மாலை நேரத்திற்குப் பிறகு முட்டைகள் கிடைப்பதில்லை என்பதால் வேலைக்குச் செல்வோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
"ஒரு வாரம் ஆகிவிட்டது. முட்டை கிடைப்பது சவாலாக உள்ளது. ஒரே அடுக்கில் 30 முட்டைகளை வாங்க முடியவில்லை. 8 முட்டைகளை வாங்கினால் அவற்றின் விலை அதிகமாக உள்ளது. நாட்டுக் கோழி முட்டைகள் தான் இப்போது கிடைக்கின்றன. அவை A ரக முட்டைகளைக் காட்டிலும் விலையாக உள்ளன"
என நவிதர்ஷினி பெருமாள் குறிப்பிட்டார்.
காய்கறிகளைக் காட்டிலும் முட்டைக்கு அதிகம் செலவழிக்க வேண்டிய சூழலில் கோலாலம்பூர் வாழ் மக்கள் இருக்கின்றார்கள்.
முட்டைகளைப் பேரங்காடிகளுக்குச் சென்று வாங்கலாம் என்று பார்த்தால், அங்கேயும் அதே நிலைதான் எனத் தமது மன ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார் நவிதர்ஷினி.
கோலாலம்பூரைத் தவிர மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்புநிலை
கோலாலம்பூர், சிலாங்கூர் உள்ளிட்ட சில பகுதிகளைத் தவிர மலேசியா முழுவதும் முட்டை விற்பனையில் எந்தத் தட்டுப்பாடும் ஏற்படவில்லை.
குறிப்பாகப் பேரா, மலாக்கா, ஜொகூர் மாநிலங்களில் இயல்பு நிலைதான் தொடர்கிறது.
"கோலாலம்பூரில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என்ற செய்தியைக் கடந்த வாரமே பார்த்தேன். அதனால் கடைக்குத் தேவையான முட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டேன். ஆனால் இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. இயல்பாகவே உள்ளது"
என ஜொகூரில் உணவகம் நடத்தும் தங்கமணி தெரிவித்தார்.
முட்டைகளுக்கு ஏன் தட்டுப்பாடு?
- குறைவான உற்பத்தி
கோழிகளின் தீனியாகப் பயன்படுத்தப்படும் மக்காச்சோளம், சோயா ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதால் பண்ணையாளர்கள் குறைவான கோழிகளை வளர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முட்டை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
- "கோலாலம்பூருக்கு அதிகமான முட்டைகளை விநியோகிப்பாளர்கள் அனுப்பாதது"
"இது தீர்க்கக்கூடிய சிக்கல்தான். குறிப்பாக உணவக உரிமையாளர்களும் சில சவால்களைச் சந்திக்கின்றார்கள். இது பயனீட்டாளர் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. வர்த்தகர்களும் மக்களும் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை,”
என்றார் மலேசிய இந்தியர் வர்த்தகச் சம்மேளனத்தில் செயலாளர் குமரராஜா.
- "தாய்லந்துக்கு முட்டைகள் கடத்தப்படுகின்றன"
மலேசியாவுடன் ஒப்பிடுகையில் தாய்லந்தில் முட்டைகள் அதிக விலையில் விற்கப்படுகின்றன. எனவே முட்டைகள் அங்குக் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. மலேசியாவில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அதுவும் ஒரு காரணம் என்று பணவீக்கத்தைக் கையாள நியமிக்கப்பட்ட சிறப்புப் பணிக்குழு அண்மையில் சொன்னது.