Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

'மலேசியப் பிரதமருக்கு நெருக்குதல் அதிகரிக்கலாம் ஆனால் இவ்வாண்டு தேர்தல் நடக்க வாய்ப்பில்லை'

வாசிப்புநேரம் -

மலேசியாவில் அம்னோவின் அரசியலமைப்புத் திருத்தங்களை அடுத்து நாடாளுமன்றத்தைக் கலைக்காமல் இருப்பது பிரதமருக்கு நெருக்குதலை ஏற்படுத்தலாம் என அரசியல் கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் கட்சித் தேர்தல் நடத்தப்படுமென அம்னோவின் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

இருப்பினும் இவ்வாண்டு தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்று கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசிய அரசியலில் இம்மாதிரியான சூழ்நிலை உருவெடுப்பது புதிதல்ல என்றாலும் இறுதி முடிவு பிரதமரின் கையில்தான் என்கிறார் தமிழ்நேசனின் முன்னாள் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான கே பத்பநாபன்.

''14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு 3 பிரதமர்கள் அரியணையில் அமர்ந்துவிட்டார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சி கலைக்கப்பட்டுத் தேர்தல் நடத்தப்படுமெனக் கூறுவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் நடப்புச் சூழல் அதற்கு இடம்தரவில்லை. ''

"தற்போதைய அரசாங்கத்தைக் கலைப்பதற்கு எதிரக்கட்சிகள்கூட விரும்பவில்லை. மாறாக இஸ்மாயில் சப்ரிக்கு எழுத்துபூர்வமான அதிகாரத்தை வழங்குவதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்கள்,"

என்று பத்பநாபன் சொன்னார்.

(படம்: Bernama)

இச்சூழ்நிலையில் இவ்வாண்டு தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்றார் அவர்.

நடப்பு அரசாங்கத்தின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஸ் கட்சி மலேசியாவில் 3 மாநில ஆட்சியை அதிகாரத்தைத் தன்வசம் கொண்டுள்ளது. 

தற்போது அமைச்சரவை கலைக்கப்பட்டால் தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் கலைக்கப்படாது எனப் பாஸ் கட்சித் தலைவர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.

''சரவாக் மாநிலத்தைத் தவிர்த்து மலேசியாவில் உள்ள இதர மாநிலங்களின் தேர்தலும் தேசிய பொதுத் தேர்தலுடன் இணைந்து நடப்பதுதான் வழக்கம். 2018ஆம் ஆண்டு நடந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அனைத்தும் மாறிவிட்டது,"

என்று பதபநாதன் தெரிவித்தார்.

சபா, மலாக்கா, ஜொகூர் மாநிலத் தேர்தல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மலாக்கா, ஜொகூர், சரவாக், சபா ஆகிய மாநிலங்களின் ஆட்சியை நடப்பு அரசாங்கம் தக்கவைத்துக் கொண்டது. 

இந்நிலையில் தாம் ஆட்சி நடத்தும் மாநிலங்களைக் கலைக்கப் பாஸ் தயாராக இல்லை என்பதை பதபநாதன் சுட்டிக்காட்டிப் பேசினார்.

பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கு நெருக்குதல் அளிக்கப்படுவது தொடர் கதையாகிவிட்டது. 

ஆனால் அவருக்கு எதிர்கட்சிகளின் ஆதரவு இருப்பதால் ஆட்சி அதிகாரத்தில் தமது பணியைத் தொடர்வார் என்கிறார் அரசியல் கவனிப்பாளரும் வழக்கறிஞருமான முருகேசன்.

''நடப்பு அரசாங்கத்தில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் அல்லது அம்னோவின் உறுப்பினர்கள்கூட இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக இருந்தாலும்... எதிர்க்கட்சியைச் சேர்ந்த 105 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு நிச்சயம் கிடைக்கும்,''

என்று அவர் சொன்னார்.

எதிர்க்கட்சிகளும் தங்களை அடுத்தப் பொதுத் தேர்தலுக்குத் தயார்ப்படுத்திக் கொள்வதற்குக் காலஅவசாகம் தேவைப்படுவதால் அவர்கள் இவ்வான்டு பொதுத் தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

" இஸ்மாயில் சப்ரியின் தலைமைத்துவத்தில் அவர்களுக்கும் சரிசமமான சலுகை வழங்கப்படுவதால் உடனடித் தேர்தலை அவர்கள் விரும்பவில்லை,"

என்கிறார் முருகேசன்.

அடுத்த ஆண்டு நோன்புப் பெருநாள் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படவிருக்கிறது.

மார்ச் மாதம் முழுவதும் மலாய்ச் சமூகத்தினர் நோன்பில் இருப்பார்கள். 

இதனால் பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. 

அது தவறினால் நோன்புப் பெருநாளுக்குப் பிறகுதான் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்