Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

மலேசியத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் இளம் வாக்காளர்கள்

வாசிப்புநேரம் -

மலேசியாவின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் அடுத்த மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்தலில் இளம் வாக்காளர்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் கவனிப்பார்கள் கருதுகிறார்கள்.

முதல் முறையாக வாக்களிக்கவிருக்கும் சில இளையர்களின் எதிர்பார்ப்பையும் கண்ணோட்டத்தையும் 'செய்தி' கேட்டறிந்தது.

19 வயது விஷ்ணுரூபன் மதியழகனின் கருத்து இது...

 

"என் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மீது இங்குள்ளவர்களுக்கு விமர்சனம் உண்டு என்பதை மறுக்கமுடியாது. ஆனால் என் பாட்டி உட்பட பலருக்கு அவர் உதவி புரிகிறார். இச்சூழ்நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் எனக்கு இன்னமும் தெளிவு பிறக்கவில்லை"

என்றார் விஷ்ணுரூபன்.

இம்முறை 700,000 புதிய வாக்காளர்கள் பதிவு செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 26.7 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்த புதிய வாக்காளர்களில் சுமார் 80 விழுக்காட்டினர், 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையர்களின் மனநிலை கடந்த காலத்தைப் போல் அல்லாமல் இப்போது வெகுவாக மாறியுள்ளது என்பதைச் சிலரது கருத்துகளின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

நிலையான ஆட்சியை வழங்கும் கூட்டணிக்கு வாக்களிக்கவிருப்பதாகச் சிலாங்கூரைச் சேர்ந்த தனுஷ் கூறுகின்றார்.

"நிலையான ஆட்சி என்பது மக்களின் எதிர்காலத்தையும் அடிப்படையாகக் கொண்டது. 2018ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 3 முறை ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இதைக் கவனத்தில் கொண்டு, எந்தக் கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதை அறிந்துதான் வாக்களிப்பேன்"

என்றார்.

இந்தக் கருத்தை திரெங்கானுவைச் சேர்ந்த 20 வயது பூரணி ரவியும் மறுக்கவில்லை. 

 

"திரெங்கானு மாநிலத்தைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையாக மலாய்க்காரர்கள் உள்ளனர். அவர்கள்தான் யாருக்கு மாநில ஆட்சி என்பதை முடிவு செய்வார்கள்,"

என்று அவர் சொன்னார்.

இந்நிலையில் புதிய வாக்காளர்களின் கண்ணோட்டம் பெரும் மாற்றத்தைக் கண்டிருக்கின்றது என்கிறார் அரசியல் கவனிப்பாளர் டாக்டர் ஏ.டி. குமாரராஜா.

"கடந்த பொதுத் தேர்தலில், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென இளம் வாக்காளர்கள் அந்தக் கூட்டணியை தேர்ந்தெடுத்தார்கள். இந்த முறை அனைத்தும் மாறிவிட்டது. ஆட்சி அதிகாரம் யாருக்கு என்ற முடிவு இளம் வாக்காளர்களின் கைகளில் இருந்தாலும் அவர்களின் வாக்குகள் சிதறிக் கிடப்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது."

அடுத்த (அக்டோபர் 2022) மாதம், வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மலேசிய நாடாளுமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்